Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் தேர்தல் ஆணையம்

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை செயலாளர் அறைக்கு அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த பிங்க் நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்குச்சீட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெயரும் அவர்களுக்கான எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குப்பதிவு செய்யும் அரங்கில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் இரண்டு முகர்வர்கள் அமர்ந்திருப்பர். வாக்களிக்கும் உறுப்பினர்கள், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள எண்ணை மட்டும் தேர்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனாவைக் கொண்டே இந்த எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், வேறு பேனாக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சீட்டில் கையொப்பமோ, வேறு குறியீடோ எழுதப்பட்டால் வாக்கு செல்லாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவடைந்தவுடன் வாக்குபெட்டி சீல் செய்யப்பட்டு அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share
Categories
இந்தியா கர்நாடகா தலைப்புச் செய்திகள்

டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும், அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு , 2 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறிய பெண் டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, டிஐஜி ரூபாவின் செயல் விதிமுறைகளுக்கு மாறானது எனவும், துறை ரீதியான விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் குறிப்பிட்டார். பொதுவெளியில் கருத்து தெரிவித்த டிஐஜி ரூபாவிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி  தனது புகார் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, 2வது முறையாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.  இந்தநிலையில் சசிகலாவை சந்திக்க வந்தவர்கள் குறித்து சிறையில் இருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் மற்றும் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

Share
Categories
இந்தியா ஓட்டுனர் இல்லாத வாகனம் கர்நாடகா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்.

இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் இல்லாத வண்டி, சுற்றியுள்ளவைகளை  தன்னியக்கமாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஒரு மனித ஓட்டுநரை நம்பியிருக்காமல் செயற்கை நுண்ணறிவினால் (AI) இயக்கப்படும் கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் அதனால் அவ்வாறு இயங்க முடிகிறது. இவ்வாகனமானது மேம்பட்ட கட்டுப்பாட்டு அம்சங்கள் பொருத்தப்பட்டு,  சாலை அடையாளங்கள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் தடைகளை அடையாளம் கண்டுகொள்கிறது.

இவ்வாகனத்தின் புதுமையான வடிவமைப்பைக் குறித்து கருத்து தெரிவித்த விஷால் சிக்கா, “எங்கள் சொந்த உள்நாட்டு ரீதியில் கட்டமைக்கப்பட்ட தானாக இயங்கும் கோல்ஃப் வண்டியில்தான் நான் இன்று இங்கு வந்தேன். இந்த ஓட்டுநர் இல்லா வாகனத் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான பொறியாளர்களை பயிற்றுவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சோதனைத் தளம் ஆகும்.   ஆட்டோமேஷன் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகிய  இரட்டைப் பிரிவுகளின் அடிப்படையில்   நாங்கள் தற்போதுள்ள சேவைகளை புதுப்பிக்கிறோம். ”

டிரைவர் இல்லாத வண்டி,  இன்ஃபோசிஸின் புதிய தொழில்நுட்பங்கள், மென்பொருள் மற்றும் சேவைகளை பல்வேறு புதிய துறைகளில் ஈடுபடுத்துமாறு ஆய்வு செய்வதற்கு உதவுவதற்காக செய்யப்படும் முயற்சிகள் ஒன்றாகும்.

 

Share
Categories
இலங்கை தமிழகம்

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் படகுகளையும், மீனவர்களையும் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்செல்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த சில நாட்களில் 60 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 161 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை மட்டும் விடுவிப்பதில்லை.

இந்நிலையில், எல்லைதாண்டி வரும் படகுகளுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளில் 42 படகுகளை முதல்கட்டமாக விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை கடிதங்கள், ஊர்க்காவல்துறை, புத்தளம், திரிகோணமலை, மன்னார் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உடனடியாக 27 படகுகளை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 15 படகுகள் நாளை(திங்கட்கிழமை) விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறும்போது, “இலங்கை அரசு 42 படகுகளை விடுவிக்க நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திங்கட்கிழமை தான் முழுமையான தகவல் கிடைக்கும். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் ஓரிரு நாட்களில் அந்த படகுகள் தமிழகம் வந்துசேரும். சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்” என்றார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா மேற்கு வங்காளம்

கற்பழிப்பு பற்றிய குதற்கப்பேச்சு: ரூபா கங்குலி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு

மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்காக பிஜேபி எம்.பி. ரூபா கங்குலி மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“நான் இந்திய மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், திரிணாமுல் காங்கிரசை ஆதரிக்கும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்…..  மம்தா பானர்ஜியின் விருந்தினராக அல்லாமல் உங்கள் மனைவிகளையும் மகள்களையும் மேற்கு வங்காளத்திற்கு அனுப்பிப் பாருங்கள்… அவர்கள் 15 நாட்களுக்கு மேல் கற்பழிக்கப்படாமல் அங்கேயே உயிர் பிழைத்திருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள்…”, என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று குதற்கமாக பொது நிகழ்ச்சியில் ரூபா கங்குலி பேசியிருந்தார்.

இதற்கு திரிணமூல் காங்கிரஸ், ரூபா கங்குலி மேற்கு வங்காளத்தின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று பதிலளித்தது.

இருப்பினும், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரூபா, தனது கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார். எனவே தற்போது அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share
Categories
தமிழகம் பா.ம.க.

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு யோசனையாக பா.ம.க. இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.


மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 95 கோடி லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 7 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது படுதோல்வி ஆகும்.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்கு தான். அவர்களின் தவறுக்காக அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Share
Categories
இந்திய வம்சாவளி இந்தியா உலகம் கனடா தலைப்புச் செய்திகள்

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்

கனேடிய இந்திய வம்சாவளியினரான லில்லி சிங் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப் பட்டார்.

யூ டியூப் வட்டாரத்தில் ‘சூப்பர் உமன்’ என்ற பெயரில் பிரபல நட்சத்திரமான இவர் ஹிந்தியில் சில காணொலிகளை வெளியிட்டும், அதே போல ஆங்கில காணொலிகளில் ஹிந்தி சப்-டைட்டில்களை இடுவதன் மூலம் தனது வலைப்பதிவும், சேனலும் ஏராளமானவர்களை சென்றடைய செய்யப்போவதாக கூறினார்.

யூ டியூப்பில் 11.9 மில்லியன் சந்தாதாரர்களை வைத்துள்ள இவர் இந்த ஐநா அமைப்பின் பணிகளை விளக்கி தன்னைப் பின் தொடர்பவர்களை குழந்தைகளின் நலனுக்கு வேலை செய்ய வலியுறுத்தவுள்ளார்.  ஓரு புதிய முயற்சியாக சமூக வலைதளங்களில் #பெண் குழந்தைகளின் மீது அன்பு எனும் ஹேஷ்டேக்கில் பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கோடு பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார். இவர் டெல்லியில் முகாமிட்டு யுனிசெஃப்பின் யூத் ஃபார் சேஞ்ச் எனும் முயற்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.  இம்முயற்சி உடல்நலம், சுகாதாரம், சிறார் தொழிலாளர் மற்றும் பாலியல் சமத்துவம் ஆகியவற்றின் தொடர்பில் இயங்கி வருகிறது. “குழந்தைகளின் நலனுக்கு  ஆதரவளிக்க எனது குரலை அளிக்க கிடைத்த வாய்ப்பினால் கௌரவிக்கப்படுகிறேன். சமூகத்திற்காக அல்லாமல் சிறார்களுக்காக குரல் கொடுப்பதற்கான நேரம்” என்றார் லில்லி.
Share
Categories
உலகம் சீனா தலைப்புச் செய்திகள்

நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம்

சமாதானத்திற்கான நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீன அரசின் பிரபலமான விமர்சகராகவும்,   மனித உரிமைச் செயற்பாட்டளரும் இருந்த அவரை சீன அரசு 11 ஆண்டுகளாக சிறையில் அடைத்து இருந்தது.  கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று சிகிச்சைகள் பலனின்றி அவர் இறந்தார்.

லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி கலந்து கொண்டார். அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் லியு-விற்கு பிரியாவிடை அளித்தனர்.

“உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மொஸாட்டின் இரங்கற்பாட்டு லியு சியாவ்போவின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்டது.

 

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார்

பீகாரில் ஆளும் மெகா கூட்டணி உடையுமா? நிதீஷ் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியை தேஜேஸ்வி யாதவ் புறக்கணிப்பு

சனிக்கிழமையன்று பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமாருடன் தான் கலந்து கொள்ளவிருந்த மானில அரசு நிகழ்ச்சியொன்றை  துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ் புறக்கணித்ததால், பீகாரில் ஆளும் மெகா கூட்டணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பாட்னாவில்  இன்று அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதன்படி, இருக்கையில் தேஜஸ்வி யாதவ் பெயர்ப்பலகையும் இடம் பெற்றிருந்தது.  அனால், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை. இதன்காரணமாக அவரது பெயர், முதலில் மறைக்கப்பட்டு பின்னர் பெயர் முற்றிலுமாக நீக்கப்பட்டது. நிதிஷ் குமார் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பீகாரின் மெகா கூட்டணியில் லாலு பிரசாத் யாதவ் கட்சி 80 இடங்களும், நிதிஷ்குமாரின் கட்சி 71 இடங்களும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களும் கொண்டுள்ளன. முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல்–மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவி வகிக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் நிதீஷ் குமார் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தபின், இக்கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓட்டல் நிலம் பேர ஊழல் வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீதும், லாலு பிரசாத் யாதவ், மற்றும் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து நிதீஷ் குமார் வாயே திறக்கவில்லை. இதனால், கூட்டணிக்குப் பிரச்சனை ஏற்படும் என்று கருதப்பட்டது.  இருப்பினும் காங்கிரஸ் இவர்களிடையில் மத்தியஸ்தம் செய்து கூட்டணியை தொடரச் செய்வதாக கருத இடம் இருக்கிறது.

சென்ற வாரம், “எங்கள் குழந்தையை எப்படி கொல்வோம் ?”, என்று கேட்டு, பீகார் மாநிலத்தின்  மெகா கூட்டணி தொடரும் என ஜனதா தளம் (யூ) அறிவித்த அதே சமயத்தில், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்  பேச்சுவார்த்தை  நடத்திக்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

ஆயினும் தற்போது முதல்வர் நிதீஷ்குமார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தேஜஸ்வி யாதவ் புறக்கணித்ததன் மூலம் இரு கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து இருப்பதையே காட்டுகின்றது.

Share
Categories
இந்திய சினிமா சினிமா சினிமா இசை தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஏ.ஆர். ரகுமானின் லண்டன் இசைக் கச்சேரியால் ஹிந்தி ரசிகர்கள் விரக்தி

ஏ.ஆர்.ரகுமான் தனது 25 வருட இசைப் பயணத்தையொட்டி இலண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

இந்நிகழ்ச்சிகளைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில்,  “கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப் பயணம் உண்மையிலேயே மறக்க முடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப் பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான் முன் நிற்கின்றன. என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப் பயணத்தை கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்”, என்று தெரிவித்து இருந்தார்.

 

இந்த இசை நிகழ்ச்சிகளில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

“நேற்று இன்று நாளை” என்கிற இந்த இசை சுற்றுப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ம் தேதி லண்டனில் நடைப்பெற்றது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். ரகுமான் இந்தி பாடல்களை பாடுவது வழக்கமானது. ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் அவர் தமிழ் பாடல்களை மட்டும் பாடி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால் நிகழ்ச்சியை புறக்கணித்து அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் டுவிட்டரில் ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

 

இந்தி பாடல்களை அவர் பாடாததை குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை டுவிட்டரில் வார்த்தைகளில் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு தமிழ் ரசிகர்கள் பதிலடியை கொடுத்ததால் டுவிட்டரில் மோதல் ஏற்பட்டு உள்ளது. அர்சனா சவந்த் என்ற ரசிகை வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், உங்களுடைய இன்றைய இசை நிகழ்ச்சியினால் மிகவும் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். இதற்காக மிகவும் நீண்ட காலம் நான் காத்து இருந்தேன். இதனை எதிர்பார்க்கவில்லை, என குறிப்பிட்டு உள்ளார். இந்தியில் பாடாததால் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், இதனால் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். சிலர் இசை நிகழ்ச்சிக்கு செலுத்திய கட்டணத்தை திருப்பி தாருங்கள், எங்களை மகிழ்விக்கவில்லை, இந்தியில் பாடவில்லை என்று எல்லாம் பதிவிட்டு உள்ளனர்.

 

இதற்கு பதிலடியாக தமிழ் ரசிகர்கள் டுவிட்டர்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வெளிநாட்டில் உங்களால் ஒரு மணிநேரம் மற்றொரு மொழி பாடலை கேட்கமுடியவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கொள்ளும் தென் இந்தியர்களின் நிலையின் உண்மை குறித்து நினைத்து பாருங்கள் என ஹர்சா என்ற டுவிட்டர்வாசி பதிலடியை கொடுத்து உள்ளார். இந்தி பாடல்களை எங்கே? என கேள்வி எழுப்பியவர்களுக்கு இந்த நிகழ்ச்சியானது பிரத்யேகமாக தமிழ் பாடல்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். நிகழ்ச்சியின் பெயரே “நேற்று, இன்று, நாளை” தான் என தமிழர்கள் பதிலிட்டு உள்ளனர்.

 

இந்தி திணிப்பு என்றால் என்ன என்பதை தனது பாடல்கள் மூலம் புரியசெய்த ஏ.ஆர். ரகுமானுக்கு பாராட்டுக்கள் என அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தி பாடல்கள் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என பதிவிட்டவர்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் இசை நிகழ்ச்சி. தமிழ் சினிமாதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. பிறகெப்படி அவர் இந்தி பாடல்களை பாடுவார்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Share