Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், கட்சியின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கட்சி அலுவலகத்திற்கு வராமல்,  அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அப்போது அதிமுகவின் , 60 புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இவர்களில் இருபது பேர் எம்எல்ஏக்கள். 12 பேர் முன்னாள் அமைச்சர்கள். ஏற்கனவே உள்ள 53 நிர்வாகிகளுடன் மேலும் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை அளித்த பேட்டியில் பொதுச்செயலாளர் பதவி விவகாரத்திலேயே இன்னும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளரும் கேள்விக்குரியவர். இந்த நிலையில் அவரால் கட்சிக்கு எப்படி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தினகரன் வழங்கிய பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர். எங்களை கேட்காமல் கட்சி பதவிகளை வழங்குவதா, நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறோம் என்று இந்த மூன்று எம்எல்ஏக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் : எடப்பாடி – தினகரன் கோஷ்டிகளிடையே பனிபோர்

அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் கோஷ்டிகளிடையே பனிபோர் உச்சநிலையை அடைந்து உள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

சிறையில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.

கட்சி யார் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதில்  தினகரன்-எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.

‘சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த முதல்வர் விரும்பவில்லை. ‘அந்தக் குடும்பத்துடன் இணக்கம் காட்டினால், நமக்குத்தான் இழப்பு’ என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று எடப்பாடி கோஷ்டியினர் கூறுகின்றனர். நேற்று பேசிய எம்.பி கோ.அரி, ‘சசிகலா ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தோம் என தம்பிதுரை கூறுவதை ஏற்க முடியாது. அது அவருடைய சொந்தக் கருத்து. தமிழகத்தில் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்’ என்றார். இதற்குப் பதிலடியாக எம்.எல்.ஏ. வெற்றிவேல், ‘இன்னும் எத்தனை காலம், எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா காந்தி குடும்பம் வந்துதான், கட்சியைக் காப்பாற்றியது. அதைப்போன்ற நிலை அ.தி.மு.கவுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், தான்தோன்றித்தனமாக பேசுகின்றவர்களை முதல்வர் தடுக்க வேண்டும். இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது’ என்றார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை.”, என்றவாறு தனித்தனி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி குடியரசு தலைவர் டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர்.  அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் இன்று இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக கட்சி விவகாரங்கள் : முதல்வரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

அதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; கட்சியை தினகரன் கவனித்துக்கொள்வார் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல்வர் தரப்பின் பதில் என்ன என்பது வெளியிடப்படவில்லை.

Share