Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி குடியரசு தலைவர் டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர்.  அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் இன்று இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.

Share
Categories
இந்தியா கட்சிகள் குடியரசு தலைவர்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கூட்டணி கட்சிகளுக்கு மீரா குமார் நன்றி தெரிவித்தார்

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக  மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து மீராகுமார் போட்டியிடுகிறார். அனைத்து கட்சிகளும்  மீராகுமாருக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த கட்சிகளுக்கு மீரா குமார் நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று 17 கூட்டணி கட்சிகள் என்னை ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில் எதிர்கட்சிகளின் ஒற்றுமை எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக மீரா குமார் தெரிவு

அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் தெரிவு செய்யப்பட்டார். தலித் தலைவராக இருந்த ஜக ஜீவன் ராமின் மகளும், மக்களவை முன்னாள் சபாநாயகராகவும் இருந்த மீரா குமாரை, காங்கிரஸ் உட்பட 17 கட்சிகள் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தனர்.

முன்னதாக, பாரதீய ஜனதாவும் அதன் தோழமைக் கட்சிகளும் பீகார் கவர்னராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தன. ராம்நாத் கோவிந்தும் ஒரு தலித் தலைவரே. தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. (அம்மா) மற்றும் அதிமுக (புரட்சித் தலைவி) அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவருக்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். எனினும், தற்போது எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப் பட்ட பின்னர், நிதிஷ் குமார், தனது ஆதரவை மாற்றிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு  தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை  எம்.பி.,யாக பணியாற்றினார். 2002 -ல் ஐ.நா. பொதுக்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share