Categories
அமெரிக்கா நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள்

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்றும் பதவி மாதிரி தோன்றினாலும், நிஜத்தில் நாசாவுக்குத் தேவைப்படுவது வேறு. அவர்களுக்குத் தேவையானவர், பூமியிலிருந்து செவ்வாய், சனி போன்ற பிற கோள்களுக்கு நாம் அனுப்பும் ராக்கெட் மற்றும் ரோபோ ஆய்வுக்கலங்களால் நமது நுண்ணுயிரிகள் அங்கே நோய்த் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கவும், மற்ற கோள்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படும் மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகள் ஏதும் இங்கே தொற்றிவிடாமலும் இருக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யும் ஒருவர். இப்பதவிக்கு கிட்டத்தட்ட ரூ.7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என நாசா விளம்பரம் கூறுகிறது.

நியூ ஜெர்சியில் நான்காவது வகுப்பு படிக்கும் ஜேக் டேவிஸ், மேற்படி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் “ஜேக் டேவிஸ், விண்மீன் மண்டல பாதுகாவலர்” என்று கையொப்பமிட்டிருந்தார். இப்பதவி தனக்கு ஏன் சரியானதாக இருக்கும் எனச் சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார். அவற்றுள், விண்வெளி மற்றும் ஏலியன் சம்பந்தமாக பார்க்கமுடிந்த அனைத்துத் திரைப்படங்களையும் தான் பார்த்துவிட்டதாகவும், நன்றாக வீடியோ கேம்கள் விளையாடத் தெரியும் எனவும் கூறியிருந்தார். குறிப்பாக, தான் சிறுவயதினராக இருப்பதால், ஏலியன்கள் எப்படி சிந்திப்பார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியிருந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

இக்கடிதம் நாசா அலுவலர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாசாவின் கோள் ஆராய்ச்சி இயக்குனர் ஜோனத்தன் ரால், ஜேக்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால், நாசாவின் கோள்கள் சேவைப் பிரிவின் இயக்குனரான ஜேம்ஸ் எல். கிரீன் அனுப்பியுள்ள பதில் கடிதமே, ஜேக்கிற்கு அதிக நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜேம்ஸின் கடிதத்தில், “நாங்கள் புத்திசாலித்தனமான அறிவியல் அறிஞர்களிடம் இருந்தும், பொறியியலாளர்களிடம் இருந்தும்  வருங்காலத்தில் எங்களுக்கு உதவிகளை  எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீர் உமது பள்ளி, கல்லூரிப் படிப்பினை சிறப்பாக முடித்து, நாசாவில் எங்களுடன் சேருவீர் என எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியுள்ளார்.

 

Share
Categories
காணொளி செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் நம்பினால் நம்புங்கள்

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

ஒரு மர்மமான ‘கல் வட்டம்’ செவ்வாய் மேற்பரப்பில் காணப்பட்டது என்று வேற்றுக் கிரகவாசிகளை தேடுவதாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் தெரிவித்தனர்.

நாசாவின் (NASA)  செவ்வாய் கிரக கிரியோஸிட்டி ரோவரால்  (Mars curiosity rover) எடுக்கப்பட்ட இந்த படம், யுஎஃப்ஒ -வைத் தேடுபவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்,  செக்யூர்டீம்10  (secureteam10) என்ற யூட்யூப் (youtube) காணொளியில் இடம்பெற்றது.

“பாறைகளை செயற்கையாக அடுக்கி, ஒரு முழு வட்ட வடிவில், விசித்திரமாக உருவாக்கப்பட்டதைப் போல தோன்றுகிறது”, என்று செக்யூர்டீம்10-இனர் கூறுகின்றனர்.

மேலும் செக்யூர்டீம்10-இனர்  “இவ்வமைப்பு பொதுவாக செவ்வாய் கிரகத்திலோ, சந்திரன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களிலோ காணப்படும் இதர பள்ளங்களைப் போன்றதல்ல;  வட்டவடிவ அமைப்பில் இந்த பாறைகள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டதைப்  போல் தோன்றுகிறது –  அல்லது – அது அழிந்தோ அல்லது புதைந்தோ இருக்கும் மிகப்பெரிய அமைப்பின் பகுதியாகவோ, இடிபாட்டுப் பகுதியாகவோ கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளனர்.

இந்த காணொளியைக் குறித்து  பலரும் கருத்துக்களை எழுதியுள்ளனர். சிலர், இப்பாறைகள் செயற்கையாக வட்ட வடிவில் அமைக்கப் பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“உண்மையில் எனக்கு ஒரு இயற்கையான பள்ளம் போல தோன்றுகிறது, “என்று ஒரு கருத்துரையாளர் குறிப்பிட்டார். “இது பொதுவாக காணப்படும், இயற்கையால் மாற்றமடைந்த ஒரு பாறையைப் போல தோன்றுகிறது” என்று மற்றொரு விமர்சகர் எழுதினார், “செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த வட்டம் (சாப்பிடும் உணவான) பேகலின் ஒரு பகுதியாக இருக்குமோ” என்று மற்றொருவர் கேட்டுள்ளார்.

Share