Categories
இந்தியா இஸ்ரேல் தலைப்புச் செய்திகள்

இந்தியா, இஸ்ரேல் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுடனான 7 புரிந்தணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த இவ்வேழு ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு உறவு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று, இஸ்ரேல் அதிபர் ரியூவன் ரிவ்லினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்தியாவுக்காக இஸ்ரேலும், இஸ்ரேலுக்காக இந்தியாவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் மூன்று விண்வெளி ஒத்துழைப்பாகும்.

ஒப்பந்தங்கள் :

  •  இந்தியா, இஸ்ரேல் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை அமைப்பு நிறுவுவது, தொழில்நுட்பத்திற்கான நிதி ஒதுக்குவது
  • இந்தியாவில் நீர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல்
  •  இந்தியாவில் நீர் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தம் மேற்கொள்ளுதல்
  •  இந்தியா, இஸ்ரேல் வளர்ச்சி ஒத்துழைப்பு
  •  அணு அதிர்வு கடிகாரம் உருவாக்குவதற்கு திட்டமிடுதல்
  •  ஜியோ-லியோ (சாட்டிலைட் இணைப்புகள்) இணைப்புகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது
  •  சிறிய வகை சாட்டிலைட்கள் உருவாக்குவதில் ஒத்துழைப்பு போன்ற ஏழு ஒப்பந்தங்கள் இன்று இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகின.
Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து,  ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என  டிவிட்டரில் பதிவிட்டார்.


பயணத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியும் இந்திராவின் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியும்

இந்தியப் பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில், நேற்று உரையாற்றும்போது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி நிலையை இந்தியர்கள் யாரும் மறக்கமாட்டார்கள் என்றும், அது கருப்பு நாள் என்றும்” தெரிவித்துள்ளார்.

மேலும், மோடி பேசுகையில், 1975ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, எமர்ஜென்சி நிலையை கொண்டுவந்தபோது, மக்கள் தான் ஜனநாயகத்தை பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.

மோடியின் இப்பேச்சுக்குப் பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாம் வேதக்கான்,  “ஆம், நாம் எமர்ஜென்சியை மறந்துவிட்டோம், ஆனால் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையானது நாட்டில் நிலவுகிறது. மீடியாக்கள் இலக்காக்கப்படுகிறது, மீடியாக்கள் மீது சோதனைகள் நடக்கிறது, இவைகளை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில்தான் பட்டியலிட முடியும்,” என தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூன் 30 நள்ளிரவிலிருந்து அமலாகிறது

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

“ஜி.எஸ்.டி.யின் செயல்பாட்டிற்காக பல்வேறு கருத்தியல்களுடைய  அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் ஒரு மாற்றத்தையும் இந்த உலகமே காணப்போகிறது” என்று பிரதமர் மோடி லக்னவில் தெரிவித்தார். மேலும் அவர், ஜூலை 1-ல் ஜிஎஸ்டி துவங்கப்போவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

நாடு முழுவதும் இப்போது உற்பத்தி வரி, நுழைவு வரி, விற்பனை வரி எனப் பலவாறாக உள்ள வரி விதிப்பு முறைகளை மாற்றிச் சரக்கு சேவை வரி என்கிற ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர, மத்திய மாநில அரசுகள் இணைந்து திட்டமிட்டுள்ளன.

இந்த வரி விதிப்பு முறை, வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. ஜூன் முப்பதாம் தேதி இரவு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இது முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

எனினும், ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வியாபாரிகளுக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share