Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், கட்சியின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கட்சி அலுவலகத்திற்கு வராமல்,  அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அப்போது அதிமுகவின் , 60 புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இவர்களில் இருபது பேர் எம்எல்ஏக்கள். 12 பேர் முன்னாள் அமைச்சர்கள். ஏற்கனவே உள்ள 53 நிர்வாகிகளுடன் மேலும் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை அளித்த பேட்டியில் பொதுச்செயலாளர் பதவி விவகாரத்திலேயே இன்னும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளரும் கேள்விக்குரியவர். இந்த நிலையில் அவரால் கட்சிக்கு எப்படி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தினகரன் வழங்கிய பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர். எங்களை கேட்காமல் கட்சி பதவிகளை வழங்குவதா, நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறோம் என்று இந்த மூன்று எம்எல்ஏக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Share