Categories
இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள்

மாடுகள் விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை நீடிப்பு

மாடுகள் இறைச்சிக்காக விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரையிலுள்ள உயர்நீதிமன்ற கிளை தடை நீட்டிப்பு செய்தது.

சென்றமாதம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :

கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இதுபோலவே மதுரையைச் சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்திருந்தனர்.  தற்போது,  மீண்டும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
Categories
சென்னை தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்கிறது

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தின்போது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அறிக்கை அளிக்க, ஐஐடி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடையை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் சார்பில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. அப்போது, விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சூரஜ் என்பவர் மீது மாணவர் அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதில், சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரியும்,  ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும்  குறிப்பிட்டிருந்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. சுமுக நிலைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share