Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால்,  சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது.  இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், இப்போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

Share
Categories
இந்தியா உணவுப்பொருள்கள் ஜி.எஸ்.டி. தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும் பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும்.  ஏனென்றால் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையும் உயருகிறது. வெளியில் இருந்து கொண்டு வரும் பொருள்களுக்கு தியேட்டர்களில் அனுமதியில்லாததால், இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவையெல்லாம் திருட்டு விசிடி அதிகரிக்கவும் ஆன்லைனில் படம் பார்ப்பதை அதிகரிக்கவுமே வழி வகுக்கிறது.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள் பொருளாதாரம் மோடி

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர்.

நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தின் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகித்தார். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜிஎஸ்டி அறிமுக கூட்டம் தொடங்கியது.  முதலில்  மத்திய மந்திரி அருண் ஜெட்லி  ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அவரை தொடர்ந்து  பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி குறித்து சிறப்பு உரையாற்றினார்.

அதனைதொடர்ந்து மணியடித்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி இணைந்து தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி. தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:

இன்று நள்ளிரவில் நாட்டின் எதிர்கால பாதையை முடிவு செய்ய இருக்கிறோம். இந்திய வரலாற்று நிகழ்விற்கு நாட்டின் 120 கோடி மக்களே சாட்சி. நாட்டின் கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த முடிவு எடுப்பதற்காக பல்வேறு தரப்பினரின் உழைப்பு, அர்பணிப்பு இடம்பெற்று இருக்கிறது. நமது எல்லோரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. சர்தார் வல்லபாய் பட்டேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார்.

அதுபோலத்தான் பல்வேறு வரிகள் சேர்ந்து, ஜிஎஸ்டியாக உருவாகி உள்ளது. ஒரு பொருளின் தயாரிப்பு விலை ஒன்றாக இருக்கும், மாநிலத்திற்கு மாநிலம் அது மாறுபட்டு இருக்கும். ஜிஎஸ்டி வரியால்,அந்த நிலை மாறி, தேசம் முழுவதும் ஒரே வரியாக இருக்கும்.

மேலும் அவர் கூறுகையில், ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்கவும் , அதிகாரிகள் தொந்தரவு குறையவும், வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும் ஜி.எஸ்.டி. உதவும் என்றார்.

 

Share
Categories
இந்தியா ஜி.எஸ்.டி. தலைப்புச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூன் 30 நள்ளிரவிலிருந்து அமலாகிறது

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு சேவை வரி விதிப்பு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

“ஜி.எஸ்.டி.யின் செயல்பாட்டிற்காக பல்வேறு கருத்தியல்களுடைய  அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் ஒரு மாற்றத்தையும் இந்த உலகமே காணப்போகிறது” என்று பிரதமர் மோடி லக்னவில் தெரிவித்தார். மேலும் அவர், ஜூலை 1-ல் ஜிஎஸ்டி துவங்கப்போவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

நாடு முழுவதும் இப்போது உற்பத்தி வரி, நுழைவு வரி, விற்பனை வரி எனப் பலவாறாக உள்ள வரி விதிப்பு முறைகளை மாற்றிச் சரக்கு சேவை வரி என்கிற ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர, மத்திய மாநில அரசுகள் இணைந்து திட்டமிட்டுள்ளன.

இந்த வரி விதிப்பு முறை, வரும் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. ஜூன் முப்பதாம் தேதி இரவு டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இது முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

எனினும், ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வியாபாரிகளுக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share