Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் உயர் கல்வி தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள்  மதுரை ஐக்கோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் மனுவை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடை காலத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. (CBSE) மேல்முறையீடு செய்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்  விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு அதன் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நடைபெற்ற அடுத்த கட்ட விசாரணையின் போது,  நீட் தேர்வு முடிவுகளை தற்போது ரத்து செய்ய முடியாது; நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது; சுமார் 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி, 6.11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பேர் தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கும் துவங்கி விட்டது; இந்நிலையில் நீட் தேர்வு முடிவிற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மிகவும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதைத்தவிர தமிழகத்தின் 85% ஒதுக்கீடு குறித்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு, மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிக் கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை ஐக்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் பின்னர், ஐக்கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 31ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கினை, நாளை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.

 

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.

“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர்

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.   அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 15 சதவீத இடங்களில் மட்டுமே மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனால், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, 85% இடஒதுக்கீட்டு அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கல்யாணசுந்தரம், 85% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தார்.

இது பற்றி  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை அரசும் கண்காணித்தது.
தற்போது உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நமது உரிமை நிலை நாட்டப்படும்.” என்று கூறினார்.

 

Share