குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்டார். இருந்த 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றிக்கு தேவையான 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க., காங்கிரஸ் இடையேயான கவுரவ யுத்தத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அகமது படேலின் வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற அகமது பட்டேல், “வாய்மையே வெல்லும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.க.வுக்கு ஓட்டளித்தனர். இதனையடுத்து இரு ஓட்டுகளை செல்லாததாக அறிவிக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் இந்த இரண்டு ஓட்டுக்களையும் நிராகரித்தபின் அகமது பட்டேல் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், வரும் நாட்களில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சட்டப்படி போராடுவோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

