Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிலிப்பைன்ஸ் வட கொரியா

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார்.

மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும்  தெரிவித்துள்ளார்.

கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் போரால் பூமியைப் பாழ்படுத்தப் போவதைத் தடுத்தாக வேண்டும். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் இந்த அழிவால் மண் வளங்கள் வீழ்ச்சியடையும். இதனால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கிம் ஜோங் உன்னை குறிப்பிட்டு, ரோட்ரிகோ டுடெர்டே விமர்சித்துள்ளார்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் சீனா தலைப்புச் செய்திகள் ரஷ்யா வட கொரியா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில்,  “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது. உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகள் அந்நாட்டை தனிமைப்படுத்தும், அதன் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும்” என்று கூறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க செனட் சபை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை  நிறைவேற்றிய சில மணி நேரங்களில் வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

ரஷியா, ஈரான், வடகொரியா நாடுகளின் மீதான பொருளாதார தடை: அமெரிக்க செனட் சபை ஆதரவு

ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது  பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. அமெரிக்க நியமப்படி, பிரதி நிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். ஆகவே செனட் சபைக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் ஓட்டு போட்டனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.

இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.

ஆனால், இந்த நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்திற்கு அரசியல் ஆதரவு உள்ள போதிலும் அதன் அமலாக்கத்தை தடுக்க அதிபர் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தால் முடியும்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் கோபமூட்டுவதாக வடகொரியா குற்றச்சாட்டு

ஞாயிறன்று வடகொரிய அரசு ஊடகங்கள் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் தம்மை கோபமூட்டுவதாக வடகொரிய அரசு ஊடகங்கள்  குற்றம் சாட்டின. கொரிய தீபகற்பம் பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக, வட கொரிய அரசுக்கு சொந்தமான ‘ரோடாங் சின்முன்’ நாளிதழில் ’வெடி மருந்து பீப்பாய்க்கு அருகே நெருப்போடு விளையாட வேண்டாம்’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள சிறப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகிலேயே எளிதில் தீப்பற்றக் கூடிய வகையில் உள்ள வட கொரியா பகுதியில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியுள்ள ஆபத்தான அத்துமீறல் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றும் நிலைக்கு தள்ளிவிடும். போர்வெறி கொண்டவர்களால் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில் நமது நாட்டுக்கு எதிராக தற்போது நடத்தப்பட்டுள்ள இதுபோன்ற அபாயகரமான தந்திரங்களை இந்த தீபகற்பத்தில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

ஒரு தவறான கணிப்பு அல்லது சிறிய பிழை நேர்ந்தாலும் அதன் விளைவு அணு ஆயுதப் போரின் துவக்கமாகவும் இன்னொரு உலகப் போரின் துவக்கமாகவும் அமைந்து விடும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு B-1 குண்டுவீச்சு விமானங்கள் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்திலிருந்து 2,000 மைல்கள் பறந்து தென் கொரிய போர் விமானங்களுடன் ஒரு துல்லியமான தாக்குதல் பயிற்சியை நடத்தின. இவர்களுடன் ஜப்பானிய வீரர்களும் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க விமானப் படை, ஒரு அறிக்கையில், “எங்கள் நட்பு நாடுகளுக்கு இரும்புக் கவசப் பாதுகாப்பு அளிப்பதில்  அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் ஒரு நிரூபணம்” என்று கூறியது.

84 பில்லியன் பவுண்டு குண்டுகளை சுமந்து செல்லும் வசதியுள்ள குண்டுவீச்சு விமானங்கள், பிலுங்ங் ரேஞ்சில் மந்தநிலை ஆயுதங்களை வெளியிட்டன. இந்த பயிற்சி முடிய 10 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

பசிஃபிக் விமானப்படை கமாண்டரான ஜென். டெரென்ஸ் ஓ. சாக்னெஸ்ஸி இதுபற்றிக் கூறும்போது, “வட கொரியாவின் நடவடிக்கைகள் நம்முடைய கூட்டாளிகளுக்கும், பங்காளிகளுக்கும், நம் நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. தேவைப்பட்டால், எங்களது கூட்டு விமானப்படைகளின் முழுத் திறனையும் உபயோகிப்போம்; அதற்கான தகுந்த பயிற்சியையும் ஆயுதங்களையும் நாம் பெற்றுள்ளோம்”, என்றார்.

 

Share
Categories
அமெரிக்கா உலகம் வட கொரியா

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா

அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது.

தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.

தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வடகொரியா இன்னும் கூடுதலாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற அச்சங்களுக்கிடையில், அமெரிக்கா சமீப நாட்களில் கொரிய தீபகற்பப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது.

வடகொரியா வாலாட்டக்கூடாது என்று எச்சரிக்குமாறு அதன் கூட்டாளி நாடான சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில், வடகொரிய நிலவரம் தொடர்பாக, அமெரிக்க செனட்டர்களுக்கு வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பிற்பகுதியில் ரகசிய விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலை எப்படி மாறக்கூடிய வாய்ப்பு உண்டு, அமெரிக்கா எந்தெந்த வழிகளில் எல்லாம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் விளக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share