Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன் லண்டன் பால தாக்குதல்

லண்டன் தாக்குதல்: குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன

லண்டனில் மூன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய வேன் தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் வைத்து நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகியுள்ளனர்.

48-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில் லண்டன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் பெயர் குரம் ஷசாட் பட் (Khuram Shazad Butt) மற்றொருவரின் பெயர் ராஷித் ரெடூவன் (Rachid Redouane) இருவரும் லண்டனில் தான் வசித்து வந்துள்ளனர்.

குரம் ஷசாட் பட் பிரித்தானியாவின் குடிமகன், ஆனால் அவன் பிறந்த இடம் பாகிஸ்தான் என்றும் அதே போன்று ராஷித் லிபியாவைச் சேர்ந்தவன் என்றும் ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில் குரம் ஷசாட் பட்-க்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும்ம் அவன் லண்டனில் உள்ள KFC நிறுவனம் மற்றும் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவரான ராஷித் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்றும் அவனைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் குரம் ஷசாட் பட் பற்றி பொலிசாருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால் அவன் இது போன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுவான் என்று புலனாய்வுத்துறையினர் நினைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி குரம் ஷசாட் பட் தன் வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுடன் அதிகநேரம் விளையாடுவான் எனவும் அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பான் என்று கூறப்படுகிறது. ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர்களோ கடந்த சில மாதங்களாகவே குரம் ஷசாட் பட் தங்கள் குழந்தைகளிடம் முஸ்லீம் மதத்தினைப் பற்றி கூறுவான் என்றும் முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி கூறுவான் என்று குற்றம் சாட்டியுள்ளனர். குரம் ஷசாட் பட்-ஐ பற்றி அவனது நண்பர்கள் கூறுகையில், மிகவும் அமைதியாக இருப்பான், அனைவரிடமும் பாசமுடன் இருப்பான். உலகில் ஏதேனும் ஒரு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால், நாங்கள் அதைப்பற்றி விவாதிப்போம் அப்போது அவன் தீவிரவாதிகளின் செய்வது சரி தான் என்று அவர்களுக்கு சாதகமாக பேசுவான் என்று தெரிவித்துள்ளனர்.

குரம் ஷசாட் பட் கடந்த சில மாதங்களாகவே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 அதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி செய்த ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான டாக்குமெண்டரியில் குரம் ஷசாட் பட் நடித்துள்ளான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share