Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

இந்தியாவின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து,  இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக திரு. ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.

சரியாக நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரும், பிரணாப் முகர்ஜியும் மேடையில் இருக்கை மாறி அமர்ந்தனர். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், “பெருமை மிகு இந்த தேசத்தின் 125 கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தான் மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்த தமது பயணம் நெடியது என்று குறிப்பிட்டார். தமக்கு முன்பிருந்த ஜனாதிபதிகளான ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் வழியில் செவ்வனே பணியாற்றப்போவதாகவும்  கூறினார்.

தொலைதூர கிராமத்தின் மண் குடிசை வீட்டில் இருந்து வந்த தாம், ஜனாதிபதி என்ற உயரிய பொறுப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நமது நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி ஒற்றுமையில் வேற்றுமையே நமது வலிமை என்றார். நாட்டை கட்டமைப்பதில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கிருப்பதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். இவர் 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார். 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த கேரளாவைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி ஆவார்.

டெல்லி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்கும் ராம்நாத் கோவிந்த், டெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா எம்.பி.யாக 12 ஆண்டுகள் பதவி வகித்து இருக்கிறார்.

வருகிற 25-ந் தேதி இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

 

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள்

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை

இந்திய ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, ராம்நாத் கோவிந்த் 4,79,585 வாக்குகளையும் , மீரா குமார் 2,045,94 வக்குக்களையும் பெற்றுள்ளனர்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் தேர்தல் ஆணையம்

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை செயலாளர் அறைக்கு அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த பிங்க் நிற வாக்குச்சீட்டு வழங்கப்படும். வாக்குச்சீட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெயரும் அவர்களுக்கான எண்ணும் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குப்பதிவு செய்யும் அரங்கில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் இரண்டு முகர்வர்கள் அமர்ந்திருப்பர். வாக்களிக்கும் உறுப்பினர்கள், வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள எண்ணை மட்டும் தேர்வு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனாவைக் கொண்டே இந்த எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், வேறு பேனாக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சீட்டில் கையொப்பமோ, வேறு குறியீடோ எழுதப்பட்டால் வாக்கு செல்லாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவடைந்தவுடன் வாக்குபெட்டி சீல் செய்யப்பட்டு அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share
Categories
இந்தியா எடப்பாடி பழனிசாமி தமிழகம்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் ஆதரவு சேகரித்தார்

பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த்.  இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.  அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களீடம்  கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஒருமனதாக உறுதி அளித்துள்ளோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது உறுதி. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைதான் ஆதரித்திருப்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, என்னிடம் ஆதரவு கேட்டது ஜெயலலிதாவின் தொண்டனுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன்  என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம்தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு  தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை  எம்.பி.,யாக பணியாற்றினார். 2002 -ல் ஐ.நா. பொதுக்குழுவில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share