Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மோடி

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய  நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அது ஒரு கட்சியாக தொடர்வதற்கே விடுக்கப்பட்ட  நெருக்கடி மிகுந்த சவாலாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி தொடர்ந்து செயல்படுவதைக் குறித்த ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாமும் நம் அணுகுமுறையை மாற்றாவிட்டால்,  நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன். 2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும். நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத  காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக  விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின்  வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி  நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Share
Categories
G-20 மாநாடு இங்கிலாந்து இந்தியா ஜெர்மனி தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து பிரதமரிடம் மோடி வேண்டுகோள்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டபோது, இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதன்படி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூ ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார்.

முன்னதாக அவர் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அதன்படி தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினார். அப்போது, தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது கொரிய மொழியில் மோடி வாழ்த்தியதை மூன் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குடனான சந்திப்பின் போது, இரு நாட்டு பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியில் நார்வேயின் ஓய்வூதிய நிதிகள் மூலம் பங்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் இத்தாலி பிரதமர் ஜென்டோலினியை சந்தித்த மோடி, நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக உணவு பதப்படுத்துதல் கண்காட்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். தங்கள் நாட்டு தொழில் துறையில் இந்தியா செய்துள்ள முதலீடுகளுக்காக மோடிக்கு, ஜென்டோலினி நன்றி தெரிவித்தார்.

இதைப்போல அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடனும் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் பேசினார்.

இந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிரதமர் தேரசா மேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்திய வங்கிகளில் இருந்து கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வரும் விஜய் மல்லையா மற்றும் நிதி மோசடி வழக்கில் தேடப்படும் லலித்மோடி ஆகியோரை இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு தெரசாவை, மோடி கேட்டுக்கொண்டார்.

Share
Categories
G-20 மாநாடு உலகம் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

“அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன”: ஜி-20 மாநாட்டில் மோடி பேச்சு

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி 20 நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற  பிரதமர் மோடி பேசுகையில்,

தெற்கு ஆசியாவில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, நைஜீரியாவில் போஹோகாரம் என்று பல்வேறு பெயரில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இருந்தாலும் தீவிரவாதம் மற்றும் பலரை கொன்று குவிப்பது தான் அவர்களது நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.

‘‘பாகிஸ்தானில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்து கடுமையாக தாக்கினார். அப்போது அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன. அதை ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பிரிக்க்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை. பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும்; பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும்;  உலகளாவிய முறையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கமுடியாது : மோடி

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குஜராத்தில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திஜியின் குருவான ஷ்ர்மத் ராஜ் சந்திராஜி அவர்களின் 150-வது பிறந்த தினத்தில் கலந்து கொண்டு பேசும் போது,  பசுப் பாதுகாவலர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையைப் பின்பற்றுவது மகாத்மாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றார்.

நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு செல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன், ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுக் காவலர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை எந்த ஒரு கண்டனத்தையும், கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பி இருந்தன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார்.

பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.

இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்தது. இதன் மூலம், பாக்கிஸ்தானில் இருந்து வெளிவரும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து,  ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என  டிவிட்டரில் பதிவிட்டார்.


பயணத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர் பிரதமர் மோடி

மோடியின் ஆட்சியைப் பற்றி அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல் வெளியான கவிதை

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல்  ஒரு  கவிதை வெளியானது.  அது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டபோது அதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.  ஆனால் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் இதைப்பற்றி கூறுகையில் “ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை” என்றார்.

மோடியின் ஆட்சியைப் பற்றிய அந்த கவிதை :

 

மோடி அரசின் மூன்றாண்டு !
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?

டிஜிட்டல் இந்தியா….
மேக் இன் இந்தியா…
கிளீன் இந்தியா… என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?

சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை…
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்…
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?

ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு…
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு…
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு…
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு…

வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு !

ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு !

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா தமிழகம்

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் அதற்குண்டான உத்தரவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிறப்பிக்க கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, காவிரி படுகை பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 14,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளித்து அதனை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் கூறினார்.

மேலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டிவரும் கேரள அரசின் நடவடிக்கை தடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய சுமார் 17,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த முதல்வர், இலங்கையில் அரசு வசமிடமுள்ள 135 படகுகளையும், சிறையில் அடைபட்டுள்ள 13 மீனவர்களையும் விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

Share