Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக: தினகரன், சசிகலாவை நீக்குவதாக எடப்பாடி அறிவிப்பு; “நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானின் அறிவிப்பு” தன்னைக் கட்டுப்படுத்தாது என்கிறார் தினகரன்

அதிமுக-வின் கோஷ்டிகளிடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்து உள்ளது. பா.ஜ.க.-வுக்கு கட்டுப் பட்டு நடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிகளை இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்கு பதில் அறிவிப்பாக தினகரன், “என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் நினைத்தால் முதல்வரை நீக்கலாம். ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடாது என்ற அக்கறை உள்ளது” என்றார். மேலும், “மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றும் கூறினார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 14.2.2017 தேதியில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிமுகவின் சட்டத்திட்ட விதி 30.(5)க்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டுகால அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் அதிமுகவின் எப்பொறுப்பையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க இயலாது.” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர், வேறொரு அறிவிப்பில் சசிகலாவையும் பதவி நீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வறிவிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பத்திற்கிணங்கவே செயல்படுத்தப் படுவதாக அதிமுக அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து, தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன்  கூறியதாவது:

“ஈபிஎஸ் எப்போது தேர்தல் கமிஷனர் தலைவர் ஆனார் என்று தெரியவில்லை. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.”

“என்னை நீக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆணையை மீறிய செயல். தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் என்னை துணைப் பொதுச் செயலாளர் என்று கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் கையெழுத்து போட்டு இருக்கும் அனைத்து தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலக வேண்டியது இருக்கும். தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் பழனிச்சாமியும் பதவி விலக வேண்டியது வரும்.”

“நான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதை அறிவித்து இருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். நான் அன்றே சொன்னேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன் என்று சொன்னேன். இவர்கள் பயத்தில் உள்ளனர். சட்ட விதிகளை தெரிந்தும் தவறாக செய்கின்றனர். சின்னம்மா அவர்களை நியமனம் செய்தது நியாயமானது என்று ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், என்னை ஒத்துக் கொள்ளவில்லை. திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்து, கட்சிப் பணம் எடுக்க அனுமதித்துள்ளோம். அவருக்கும் ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.”

“தீர்மானத்தில் அதிமுக என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. கட்சி சின்னத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரை பயன்பத்துகிறோம். ஆனால், அவர்கள் அதிமுக என்று பயன்படுத்தியதே தவறு.”

“அம்மா கூறியதுபோல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மடியில் கனம் இருந்தால் தானே பயம். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கும், 420களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை வெளியேற்ற வேறு யாரும் அழுத்தம் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. அமைச்சர்களே பயந்து கொண்டுள்ளனர்.”

“தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகின்றனர். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுடன் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறோம். இவர்கள் ஆட்சியில் இருந்து கிடப்பதை சுருட்டி கொண்டு செல்லவுள்ளனர். அவர்களைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டேன். நாங்கள் செயலில்தான் காட்டுவோம். அதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share
Categories
இந்தியா கட்சிகள் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது

பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு உருவாகி உள்ளது. எனவே, ஐக்கிய ஜனதா தளத்தின், ஒன்பது எம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால், தே.ஜ., கூட்டணி அரசின் பலம், 89 ஆக உயரும். இதுபோலவே பாஜகவின் குதிரைபேர அரசியலினால்  குஜராத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறும் ச்ச்ழல் இருக்கிறது. இங்கிருந்து  அமித்ஷா, ஸ்மிருதி இரானி மற்றும் காங்., கட்சியில் இருந்து பறிக்கப்பட உள்ள ஒரு இடம் ஆகிய மூன்றை சேர்த்தால், அரசின் பலம், 91 ஆக உயரும்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கண்ட்ரோலில் இயங்கும் அ.தி.மு.க. , ஒரிஸ்ஸாவின் பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளிடம், 26 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சிகள் பெரும்பாலும் ஆளும் அரசை தான் ஆதரித்து வருகின்றன. எனவே, இதையும் சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 117 ஆக உயரும். இத்துடன் நான்கு நியமன எம்.பி.,க்களின் ஆதரவை சேர்த்தால், பா.ஜ.க.வின் பலம், 121 ஆக உயரும். இதனால் கிட்டத்தட்ட, பெரும்பான்மையான, 123 எம்.பி.,க்களின் எண்ணிக்கையை நெருங்கிய விஷயமாகும். உ.பி.,யில் நடக்கும் தேர்தல் மூலம், 9 எம்.பி.,க்களில் எட்டு எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், பீஹாரில் அடுத்த ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு சற்று பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது. தற்போது அந்த மாநிலத்தில், பா.ஜ.க.வுக்கு இரண்டு, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு எம்.பி.க்கள் உள்ளனர்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார்

பீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார்

நிதீஷ் குமார் மற்றும் சுஷில் மோடி

பீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.  இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு லாலு மற்றும் அவரது மகன் மறுப்பு தெரிவிக்கவே நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு நிதிஷ் குமார் அளித்தார்.

தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார். மோடி துணை முதல்வராகிறார். நிதீஷின் ஜ.த. (யூ) – 71 எம்.எல்.ஏ.க்களையும் , பாஜக 53 எம்.எல்.ஏ.க்களையும், இதர ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுமாக மொத்தம் 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, நிதீஷின் புதிய கூட்டணிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் நிதிஷ்குமார் பிகார் முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.

 

Share
Categories
டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள், அமைப்பினர் ஆதரவு தருகின்றனர். போராட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் செல்போன் மூலம் பேசி தமிழகத்திற்கு வருமாறு எங்களை மிரட்டுகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்கின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.  திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற போலீசில் புகார் செய்துள்ளோம். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீது திருச்சி போலீசில் புகார் செய்ய உள்ளோம்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நான் (அய்யாக்கண்ணு) ஆடி கார் முன்பு நிற்பது போன்றும், 5 ஸ்டார் ஓட்டலில் செல்போனில் பேசியவாறு சாப்பிடுவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

 

Share
Categories
இந்தியா கொல்கத்தா தலைப்புச் செய்திகள் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளம்

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

பல மாநிலங்களில் மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டு வரும் பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இந்தியா விட்டு பா.ஜ.வை வெளியேற்றும் புதிய இயக்கத்தை ஆக.9 -ம் தேதி மாநிலம் முழுவதும் துவங்கப்போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.

நேற்று, கோல்கட்டாவில் திரிணாமுல் காங். கட்சி சார்பில் தியாகிகள் தின பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது :

 

ராஜஸ்தானில் ஆயிரம் கோடிக் கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல் புகார் எழுந்துள்ளது, சிபிஐ எங்கு சென்றது. என்ன தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் ஈடுபட்டுள்ள ஊழலின் அளவு எத்தனை பெரியது அவர்கள் பாஜகவின் நண்பர்களோ?

மத்தியப் பிரதேசத்தில் நாட்டையே உலுக்கிய வியாபம் ஊழல், இதில் பலர் ஏற்கெனவே கொல்லப்பட்டுள்ளனர். எங்கே சிபிஐ? குஜராத் பெட்ரோலியம் ஊழல் ரூ.20,000 கோடிபெறும் எங்கு அரசு விசாரணை முகமைகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை?

பாஜகவை எதிர்ப்பதில் வேறு எந்தக் கட்சியை விடவும் அதிகக் குரல் எழுப்புவது நாங்களே. சிபிஐ மூலம் எங்கள் வாயை அடைக்க முடியாது.

நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதற்கு பாஜகவின் சான்றிதழ் தேவையில்லை.  மக்கள் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் எங்களுக்கு முக்கியம்.

யார் பணமதிப்பு நீக்கத்துக்கும், ஜிஎஸ்டிக்கும் எதிராக குரல் எழுப்புகிறார்களோ அங்கெல்லாம் சிபிஐ கட்டவிழ்த்து விடப்படுகிறது.

2019 லோக்சபா தேர்தலுக்குப் பின் மோடி பிரதமர் அலுவலகத்தைக் காலி செய்து கொண்டு போக வேண்டியதுதான்.

ஆனால் அடுத்த ஆண்டே நாடாளுமன்றத் தேர்தலை வைக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. சாரதா, நாரதா என்று நீங்கள் சொல்லுங்கள். ஆனால் 2019-ல் பார்தாக்கள் அதிகாரத்தை விட்டு போய்விடுவார்கள், இது அவர்களுக்கு நான் விடுக்கும் சவால், இந்தத் தியாகிகள் தினத்தில் இந்தச் சவாலை முன்வைக்கிறேன்.

சாரதா சிட்பண்ட் மோசடி, நாதரா ஸ்டிங் ஆபரேசன் போன்ற வழக்குகளில் எனது கட்சியினரை சிக்க வைக்க பார்க்கிறது. இதற்காக சி.பி.ஐ.யை கைப்பாவையாக பயன்படுத்துகிறது பா.ஜ., இதற்கெல்லாம் நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன்.

யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்ன உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட இவர்கள் யார்? சிலர் இறைச்சி சாப்பிடமுடியவில்லை என்றும் கர்ப்பிணிப் பெண்கல் முட்டை சாப்பிட முடியவில்லை என்றும் புகார் அளிக்கின்றனர். பின் எதைத்தான் உண்பார்கள்?

தங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதே சாமானிய மக்களுக்கு தெரியவில்லை, தலித்துகளும், சிறுபான்மையினரும் கவுரவமாக வாழ முடியுமா என்று ஐயம் கொண்டுள்ளனர். இந்துக்களே கூட சில போலி இந்துக்களால் அச்சமடைந்துள்ளனர்.

பெங்கால் தவிர டெல்லியிலும் கூட யாருக்கும் பாதுகாப்பில்லை. பாஜக தலைவர்களில் சிலரை விமர்சிக்கும் நோபல் பரிசு வென்ற அமர்த்யா சென்னுக்கே நாட்டில் பாதுகாப்பில்லை.

நாடு சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற மகாத்மா காந்தி 1942-ம் ஆண்டு ஆக. 9-ம் தேதி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை துவக்கினார். அதே போன்று பா.ஜ. வை இந்தியாவை விட்டு வெளியேற்ற வரும் ஆக. 9-ம் தேதி புதிய இயக்கத்தை துவக்க உள்ளேன். இந்த இயக்க போராட்டம் ஒவ்வொரு பார்லி. லோக்சபா தொகுதியிலும் நடக்கும். எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்று பிரசாரம் செய்வார்கள். பா.ஜ.வை எதிர்க்கும் கட்சிகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று மம்தா கூறினார்.

 

Share