Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார்

பீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார்

நிதீஷ் குமார் மற்றும் சுஷில் மோடி

பீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.  இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என்று நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு லாலு மற்றும் அவரது மகன் மறுப்பு தெரிவிக்கவே நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு நிதிஷ் குமார் அளித்தார்.

தற்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார். மோடி துணை முதல்வராகிறார். நிதீஷின் ஜ.த. (யூ) – 71 எம்.எல்.ஏ.க்களையும் , பாஜக 53 எம்.எல்.ஏ.க்களையும், இதர ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுமாக மொத்தம் 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, நிதீஷின் புதிய கூட்டணிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் நிதிஷ்குமார் பிகார் முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.

 

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பீகார் மாநிலங்கள்

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகன் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது,  டெண்டர் விட 3 ஏக்கர் நிலம் பெற்றதாக ஊழல் புகாரை முன்வைத்து மொத்தம் 5 வழக்குகளை சிபிஐ  இன்று பதிவு செய்துள்ளது.

பிஹாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர் மற்றும் குர்காவ்ன் உட்பட மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது லாலு மீது பல்வேறு ஊழல் செய்தற்கான ஆதாரம் சிக்கியிருப்பதாக சிபிஐ கூறியுள்ளது.

தன் மீதான வழக்கு பதிவு செய்த சிபிஐ புகார்களை லாலு மறுத்துள்ளர். இது ‘பாஜகவின் சதி’ எனவும் லாலு கருத்து கூறியுள்ளார். இது குறித்து லாலு கூறுகையில், ”இதைக் கண்டு நானும், எனது கட்சியும் அஞ்ச மாட்டோம். அந்த டெண்டர் விடப்பட்டதில் எந்த தவறுகளும் செய்யப்படவில்லை. தனக்கு எதிராகப் பேசுபவர்களின் வாயை அடைக்க பாஜக செய்யும் வேலை இது. குறிப்பாக எனது குடும்பத்தார் தொடர்ந்து குறி வைக்கப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், “சி.பி.ஐ ஏன் சோதனையில் ஈடுபட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை அழித்தாலும் பி.ஜே.பி மற்றும் மோடியை, ஆட்சியில் இருந்து அகற்றிய பின்னரே ஓய்வுபெறுவேன். பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதன் காரணமாகவே என்னை இலக்காக்குகிறார்கள். எனக்கு எதிராகவும் என்னுடைய குடும்பத்துக்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கும் செயல் நடக்கிறது. என்னுடைய எதிரிகள் என்னைச் சிறைக்கு அனுப்ப முயலுகிறார்கள்” என்றார்.

அவருக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதிலளிக்கும் விதமாக, “அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின்படி சி.பி.ஐ தனது கடமையை செய்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

 

Share