நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ”
மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார். அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீதான விசாரணையை அடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

