Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுஎஸ் விமானப்படை B-1B லான்சர் கயாம் நோக்கி செல்லும் வழியில், ஜப்பானிலுள்ள கியூஷூவில் எரிபொருள் நிரப்புகிறது.

ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்; ஆகவே அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது பற்றி வடகொரியா தரப்பில் வெளியான அறிக்கையில்,  “அமெரிக்காவின் பசிபிக் பகுதியில் உள்ள தீவான குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களை கவனமாக பரிசோதித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வட கொரியாவின் அரசு ஊடகத்தில், “அதிபர் கிம் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவரிடமிருந்து அனுமதி வந்தவுடன் செயல்படுத்துவோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து குவாம் கவர்னர் கூறும்போது, ”நாங்கள் வெறும் ராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றார்.

ஜப்பானிய மற்றும் தென் கொரிய சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான குவாம், அமெரிக்காவின் தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது.

 

 

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா தலைப்புச் செய்திகள்

ரஷியா, ஈரான், வடகொரியா நாடுகளின் மீதான பொருளாதார தடை: அமெரிக்க செனட் சபை ஆதரவு

ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது  பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. அமெரிக்க நியமப்படி, பிரதி நிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். ஆகவே செனட் சபைக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 2 பேரும் ஓட்டு போட்டனர். இதனால் தீர்மானம் நிறைவேறியது.

இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.

ஆனால், இந்த நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்திற்கு அரசியல் ஆதரவு உள்ள போதிலும் அதன் அமலாக்கத்தை தடுக்க அதிபர் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தால் முடியும்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார்.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக சந்தித்தனர் – இரு நாடுகளுக்கு இடையிலான பல்வெறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

வெளியுறவு விவகாரங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் வரை, பல விஷயங்களைப் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துரையாடினார்கள். அவர்களின் உரையாடல் திட்டமிடப்பட்ட 35 நிமிட நேரத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நீட்டப்பட்டது.

“ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும், மற்றும் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை நாங்கள் நன்முறையில் எதிர்நோக்குகிறோம்,” என்று டிரம்ப் புட்டினுடனான அவரது சந்திப்பில் தெரிவித்தார்.

புடின் கூறும்போது: “உக்ரேன், சிரியா, சில இருதரப்பு பிரச்சினைகள் முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது”, என்றார்.

 

 

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப்

வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நிக்கி ஹேலியின் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர், நிக்கி ஹேலி, புதன்கிழமையன்று, ஐ.நா.வின் சிறப்பு பாதுகாப்புக் கூட்டத்தில் கூறுகையில், “வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர  அமெரிக்காவிற்கு  கணிசமான இராணுவத் தீர்வுகள் உள்ளன” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா மோதல் போக்கை விரும்பவில்லை, ஆனால், தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்”, என்று ஹேலி, வட கொரியாவை எச்சரித்தார்.

 எமது பலங்களில் ஒன்று, நாம் கணிசமான இராணுவ சக்திகளைக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் நாம் அவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த திசையில் செல்ல வேண்டும் என்று நாங்கள் இதுவரை விரும்பவில்லை

என்று அவர் கூறினார்.

இதனிடையில், அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது.

முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன.

தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட அமெரிக்கருடனோ அல்லது ஒரு அமெரிக்க  நிறுவனத்துடனோ சம்பத்தப்பட்ட நபர் ஒருவர் அகதி எனும் பெயரில் நாட்டுக்குள் நுழையும் போது  தடுக்கப்படுவதால் ஏற்படும்  கஷ்டங்களை சட்டபூர்வமாக  கூறுவதில் பிரச்சனையில்லை.” , என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், “இந்த தனிநபர்களையும், நிறுவனங்களையும் பொறுத்தவரை, நாம் பயண உத்தரவுகளைத் தடை செய்ய இயலாது. ஆனால் அமெரிக்க நாட்டுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத அகதிகளுக்கு, நாட்டினரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நாம் அரசாங்கத்தின் ஆணையை   ஆதரிக்க வேண்டியிருக்கிறது”, என்றும் உச்ச நீதிமன்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து,  ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என  டிவிட்டரில் பதிவிட்டார்.


பயணத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’

‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.

இந்த நிலையில்தான் ட்ரம்ப், ‘நான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றேன். அப்போது, தீவிரவாத சிந்தனை கொண்டவர்களுக்கு இனிமேலும் நிதி வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினேன். இதை நான் கூறியபோது, தலைவர்கள் கத்தாரை நோக்கி கையைக் காட்டினர். தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். கத்தாரின் நிலைமையை இப்போது பாருங்கள். இதுவே தீவிரவாதத்தின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம்.’ என்று கூறியுள்ளார்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் போப் பிரான்ஸிஸ் வாட்டிகன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிசுடன் சந்திப்பு

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கும் போப் பிரான்சிசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில் இன்று முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.  இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட டிரம்ப், முதல் பயணமாக  சவூதி அரேபியா சென்றார். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் தற்போது ஐரோப்பிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸும் டிரம்பும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள்  தடையற்ற  முதலாளித்துவம்  ஆகிய விவகரங்களில் டிரம்ப்- போப் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதேபோல், மரண தண்டனை, ஆயுத வியாபாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது.

போப் பிரான்ஸிஸுடான சந்திப்பின் போது அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப்  மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரும் உடன் இருந்தனர்.  போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் இத்தாலி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் நுற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிரம்ப்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

 

Share