Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

டி.டி.வி.தினகரன்: புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு எதிர்ப்பு

ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், கட்சியின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கட்சி அலுவலகத்திற்கு வராமல்,  அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அப்போது அதிமுகவின் , 60 புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இவர்களில் இருபது பேர் எம்எல்ஏக்கள். 12 பேர் முன்னாள் அமைச்சர்கள். ஏற்கனவே உள்ள 53 நிர்வாகிகளுடன் மேலும் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை அளித்த பேட்டியில் பொதுச்செயலாளர் பதவி விவகாரத்திலேயே இன்னும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளரும் கேள்விக்குரியவர். இந்த நிலையில் அவரால் கட்சிக்கு எப்படி புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

தினகரன் வழங்கிய பதவிகளை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பழனி (ஸ்ரீபெரும்புதூர்), போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர். எங்களை கேட்காமல் கட்சி பதவிகளை வழங்குவதா, நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறோம் என்று இந்த மூன்று எம்எல்ஏக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

சிறையில்  சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார்

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தான் தொடர இருப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சரையும் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவித்த ஜெயக்குமார்  கூறியதாவது :

கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்ற கூறிய தினகரன் அந்த உறுதியோடு இருக்க வேண்டும்.

தினகரனுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை- அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கிவைத்து ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி நடத்திய அதிமுகவை காக்க வேண்டும்.யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை வழி நடத்துவோம்

தினகரனை அதிமுக நிர்வாகிகள் யாரும் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Share