Categories
சென்னை தமிழகம் தலைப்புச் செய்திகள் தேனாம்பேட்டை

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் மீது நேற்று அதிகாலை 4.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். காவல்நிலைய பெயர்ப்பலகையின் மீது பட்டு, நுழைவாயிலில் விழுந்த குண்டு, அங்கேயே தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

போலிஸ் ஸ்டேஷன் அருகில் அரசியல் கட்சி பேனர் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூறிய பிறகே, உள்ளே இருந்த காவலர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலிசார், கட்டுப்பாட்டு அறைக்கும் ரோந்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் தப்பி விட்டனர். தகவலறிந்து, போலிஸ் கமிஷனர்  விஸ்வநாதன் தேனாம்பேட்டை ஸ்டேஷனுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலிஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மட்டும் 5 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

அவற்றின் காட்சிகளை ஆய்வு செய்ய சொன்ன அதிகாரிகள், அவற்றில் ஒரு கேமரா கூட இயங்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நந்தனத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே தேனாம்பேட்டை காவல் நிலைய கண்காணிப்புக் கேமராக்களை தனியார் ஒருவரிடம் கொடுத்து பழுது நீக்கச் சொன்னபோது, அதில் குண்டு வீசிய குற்றவாளியின் முகம் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றிய தகவல் தருமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share
Categories
தமிழகம்

சென்னையில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ஒரு கடையிலிருந்து  பழைய ரூபாய் நோட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என தெரிகிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்காரியா காலனியில் ராமலிங்கம் அண்ட் கோ என்ற பெயரில் சினிமா படப்பிடிப்புகளுக்கு உடைகளை வாடகைக்கு அளிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்தக் கடையில் பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று காலையில் கோடம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அந்தக் கடையைச் சோதனையிட்டனர். அந்த சோதனையில் இந்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பெட்டிபெட்டியாக கண்டெடுக்கப்பட்டன.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் பல கோடி ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. இதையடுத்து, அருகில் உள்ள அந்தக் கடையின் உரிமையாளர் தண்டபாணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு, தண்டபாணியிடம் இந்தப் பணம் யாரிடமிருந்து அவருக்குக் கிடைத்தது, எதற்காக அவர் அந்தப் பணத்தை வாங்கினார் என்பது குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தின் சரியான மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

Share