Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா டி.டி.வி. தினகரன் டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சசிகலா தரப்பிலிருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி  பணப் பரிமாற்றம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறை துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகளை மத்திய அரசு ரகசியமாக செய்ததாகவும் தெரிகிறது.  அதன்பின், சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம் தான் காரணமாக அமைந்ததாகவும் தெரிகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டி.டி.வி. தினகரனின் நண்பரான, பெங்களூரைச் சார்ந்த மல்லிகார்ஜுனா என்பவரை விசாரித்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன் அவர் பல தடவை பேசி இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து பிரகாஷை விசாரிக்கையில், தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த வி‌ஷயத்தில் சசிகலாவை குறி வைத்து, மத்திய அரசின் ஏஜண்டுகள், கைதிகளைப் பயன்படுத்தி, வீடியோ காட்சிகளை  திட்டமிட்டு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன.  அதன் பின்னரே, அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.

 

Share