Categories
அ.தி.மு.க. சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாது: தேர்தல் ஆணையம்

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து எதுவும் தீர்மானிக்கப் படவில்லை  என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில பதில்களை அளிக்கக் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து, இதுவரை முடிவெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கும் இதுவரை தீர்மானிக்கப் படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சசிகலா எப்போது பதவியேற்றார் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவுக்கு  சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று, புதிதாக அங்கு பதவியேற்றுள்ள  சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். டி.வி., சிறப்பு சமையலறை, சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருக்க அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஏழு மற்றும் எட்டாவது வளாகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் செயல்படவில்லை என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன்மூலம், டிஐஜி ருபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது அம்பலமாகி உள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் என புகார்; டிஜிபி மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா  பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  சிறைத்துறை அதிகாரிகள் இதனை  மறுத்துள்ளனர்.

கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக பதவியேற்ற டி.ஐ.ஜி. ரூபா பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். ரூபா அளித்து உள்ள அறிக்கையில், சோதனையின் போது சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும்,  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் அறிக்கை சமர்பித்த நிலையிலும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு

(தினத்தந்தி)

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறுஆய்வு மனு

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.

அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரங்கள்

இது சம்பந்தமாக ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகள் குறித்த விவரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share