Categories
கோயம்புத்தூர் தமிழகம் தலைப்புச் செய்திகள்

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர்.  இவர்  இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்.

அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்‌ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடடிக்கை எடுத்திருப்பதை கண்டித்துள்ளார். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என அவர் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக அரசு மத்தி‌ய அரசின் நிர்பந்தங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பயங்கரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

 

Share
Categories
ஜெர்மனி பலவகைச் செய்திகள்

ஜெர்மனி: மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் போட் மியூசியம் என்ற அருங்காட்சியகம் உள்ளது.  இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.

மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த இந்த நாணயத்தை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அருங்காட்சியக ஜன்னலை உடைத்து நாணயத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஜெர்மனியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பெர்லின் நகர போலீசார், அங்குள்ள நியூகொய்லின் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாணய கொள்ளையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த நாணயத்தை போலீசார் மீட்டனரா? என்பது குறித்து தெரியவில்லை. அதை கொள்ளையர்கள் உருக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் கொல்கத்தா தலைப்புச் செய்திகள் நீதிபதி மாநிலங்கள்

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைதானார்

உச்ச நீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், இன்று கோவையில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார்.

உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்ணனுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி-க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரை கைது செய்யும்படி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல் கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. ஜூன் 12-ஆம் தேதி நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவாக இருந்தபடியே ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் இன்று (ஜூன் 20-ஆம் தேதி) கோவையில் மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

 

Share