Categories
கன்யாகுமரி குளச்சல் கேரளா தமிழகம் தல வரலாறு பலவகைச் செய்திகள் மாவட்டம் வரலாறு ஹாலந்து

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன.  வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

 

மார்த்தாண்ட வர்மாவின் ராச்சிய இணைப்பு நடவடிக்கைகளில் ஒன்றான இளைஇடத்து சொரூப (கொட்டாரக்கரை) இணைப்பு முயற்சியின் போது, கொட்டாரக்கரை ராணியார், டச்சுக்காரர்களின் உதவியை நாடினார். இருப்பினும், மார்த்தாண்ட வர்மாவின் படைகள் இளைஇடத்து சொரூபத்தை போரிட்டு கைப்பற்றினர். இது டச்சுக்காரர்களின் மிளகு வியாபாரத்திற்கு பேரிடியாக அமைந்தது. மேலும் மார்த்தாண்ட வர்மா, ஏனைய ஐரோப்பிய வணிகர்களான கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஃப்ரென்சு கம்பெனிகளுடன் வியாபாரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுத்தார். இவற்றால், டச்சுக் காரர்களுக்குத் தேவையான வணிகப் பொருட்கள் கிடைக்காமல் போனது.

நிலைமையைச் சரியாக்கும் நோக்கில், கொழும்பிலிருந்து டச்சு கவர்னர் வான் இம்ஹாஃப் (Van Imhoff) பேச்சு வார்த்தைக்காக ராஜா மார்த்தாண்ட வெர்மாவைச் சந்திதார். இருப்பினும் பேச்சுவார்த்தையால் தேவையான பயன்கள் எதுவும் விளையவில்லை.

திருவிதாங்கூர்ப் படைகள் பின்னர் காயங்குளத்தின் அரசினைக் கைப்பற்றுவதற்காக வடக்கு நோக்கி அனுப்பப் பட்டனர். இன்னிலையில், டச்சுக் கடற்படை, தென்பகுதியில் கடியப்பட்டணம், மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. குளச்சலிலிருந்து கோட்டார் வரை டச்சுப்படைகளின் பிடியில் வந்தது. திருவிதாங்கூர் படைகள் காயங்குளம் சென்ற சமயத்தில், நாட்டுக்குள் புகுந்த டச்சுப் படையைத் தடுக்க  யாரும் இல்லாத்தால், அவர்கள் குடிமக்களுக்கு பல்வேறு அட்டூழியங்களையும் செய்தவாறு பத்மனாபபுரம் கோட்டையைப் பிடிக்கச் சென்றனர்.

இதனைக் கேள்விப்பட்ட மார்த்தாண்ட வர்மா, காயங்குளத்திலிருந்த அவரது படையை திரும்பி வரத் தகவல் அனுப்பினார். மேலும் உள்ளூர் நாயர், நாடார் மற்றும் மீனவர்களின் துணையுடன் புதிய படையொன்றை உருவாக்கினார். இப்புதிய படையுடன், காயங்குளத்திலிருந்து திரும்பிய திருவிதாங்கூர்ப் படைகளும் சேர்ந்து, டச்சுப் படைகளுடன் போரிட்டனர். போரில் டச்சுப்படைகள் தோல்வியடைந்தபின் தப்பியோடியவர்கள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வக்கப்பட்ட தங்கள் கப்பல்களில் ஏறி கொச்சி நோக்கிச் சென்று விட்டனர். திருவிதாங்கூர்ப் படை 24 டச்சு வீரர்களை சிறைபிடித்ததுடன் குளச்சலில் இருந்த டச்சுப் படைத்தளத்திலிருந்து பீரங்கிகளையும் வாள்கள் மற்றும் சில இதர போர் ஆயுதங்களையும் கைப்பற்றினர். இப்போரில் ராமன் ஐயன் தளவாய், அனந்த பத்மனாபன் தளவாய் போன்றோர், மார்த்தாண்ட வர்மாவுக்கு பேருதவியாக இருந்தனர்.

இப்போரின் பின் டச்சுக்காரர்களின் இந்திய வணிகம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது. 1741-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி  நிகழ்ந்த போரின் வெற்றியின் நினைவாக குளச்சல் கடற்கரையில் “விக்டரி பில்லர்” என்ற வெற்றித்தூண் நிறுவப்பட்டது.

 

Share
Categories
கன்யாகுமரி தமிழகம் மாவட்டம்

கொச்சி அருகே சரக்கு கப்பல் – படகு மோதல்: குளச்சல் மீனவர் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சி அருகே மீன்பிடி படகின் மீது சரக்கு கப்பல் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதில் 2 பேர் உடல் மீட்கப்பபட்டது. ஒருவர் உடலை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது. கேரள மாநிலம் கொச்சி தோப்பும்படி துறைமுகத்தில் இருந்து, குமரியை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட 14 பேர் படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில் மீன்பிடி படகு உடைந்து கவிழ தொடங்கியது. மீனவர்கள் கடலுக்குள் விழுந்து உயிருக்கு போராடினர். படகு மீது கப்பல் பயங்கரமாக மோதிய சத்தமும் மீனவர்களின் அலறல் சத்தமும் கேட்டு சிறிது தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த 11 மீனவர்களையும் அதிரடியாக மீட்டனர். மீதமுள்ள 3 மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொச்சி கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிய குளச்சலை சேர்ந்த ஆன்டனி ஜாண் என்கிற தம்பிதுரை மற்றும் அசாமை சேர்ந்த ராகுல் உடல்கள் மீட்கப்பட்டன. அசாம் மாநிலத்தை சேர்ந்த மோடி உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 11 மீனவர்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மீனவர்கள் மீது மோதிய கப்பலை தேடும் பணியை கடற்படையினர் தீவிரப்படுத்தினர். ரேடார் உதவியுடன் நடத்திய ஆய்வில் மீனவர்கள் மீது மோதிய கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடற்படையினர் அங்கு விரைந்து சென்று சரக்கு கப்பலை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்பர் என்ற சரக்கு கப்பல் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணைக்காக கடற்படையினர் அந்த கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் கடல் ஆழம் இல்லை என்பதால் நடுக்கடலில் நங்கூரமிட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக போர்ட் கொச்சி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கப்பல் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
கன்யாகுமரி தமிழகம் மாவட்டம்

குளச்சல் அருகே படகு கடலில் கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் படகு கவிழந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரசலையன், பெஞ்சமின், தாசன் ஆகிய மீன்று மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

குளச்சலில் இருந்து ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களில், ரசலையன் மட்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்தார்.

மாயமான மற்ற இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் பெஞ்சமின் மற்றும் தாசன் ஆகியோரது உடல்கள் குளச்சல் பகுதியில் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து மீனவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share