Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள்

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கப் பட்டார்.

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சின்ஹ் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேர் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தது கட்சியின் தலைமைக்கு தெரியவந்தது.

இந்நிலையில், வெள்ளியன்று தமது 77-வது பிறந்தநாள் கொண்டாடிய அவர், பிறந்தநாள் உரையில் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தாம் தெரிவித்துவிடக் கூடும் என்ற எண்ணத்தில், தம்மை காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை என்றும் வகேலா தெளிவுபடுத்தினார்.

காங்கிரஸின் குறுகிய எண்ணம், பாஜகவின் அதிர்ஷ்டமும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட்டதாகக் கூறிய அவர், பாஜகவிற்குத் திரும்பச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை பாஜக செயல்குழுவுக்கு அனுப்பியது, ஆனந்தி பென் பட்டேலை அரசியலில் அறிமுகப்படுத்தியது, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கான யோசனையை வழங்கியது என தமது சாதனைகளாக பலவற்றையும் பிறந்தநாள் உரையில் அவர் பட்டியலிட்டார்.

Share
Categories
காங்கிரஸ் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ராகுல்காந்தி ஒப்புதலுடன் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்டத்தலைவர்கள் நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிறப்பித்து உள்ளார்.

தென்சென்னை மாவட்ட தலைவராக கராத்தே தியாகராஜனும், வட சென்னை மாவட்ட தலைவராக எம்.எஸ்.திரவியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 63 ஆக இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சென்னை சிவராஜசேகரன், மேற்கு சென்னை வீரபாண்டியன்,  நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊட்டி கணேஷ், உட்பட 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் ஜனார்த்தன் திவேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Share
Categories
இந்தியா காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு தெலுங்கானா அரசு எச்சரிக்கை

(தினபூமி)

தெலுங்கானா போலீசார் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் விமர்சனம் செய்திருப்பதற்கு அந்த மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கட்சியின் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங் தெலுங்கானா அரசு மீது புகார் கூறியுள்ளார். முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கும் வகையில்  தெலுங்கானா மாநில போலீசார் போலி ஐஎஸ்ஐஎஸ். வெப்சைட்டை உருவாக்கியுள்ளனர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு அந்த மாநில அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு திக்விஜய் சிங் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது புகாரை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

தெலுங்கானா மாநில போலீசாரின் திறமையான செயல்பாட்டுக்காக பாராட்டுப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போலீசார் மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டை திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை திக்விஜய் நிரூபிக்க வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சர் நயானி நரசிம்ம ரெட்டி நேற்று ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். திக்விஜய் சிங் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். முடியாவிட்டால் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது மாநில போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் ரெட்டி கூறினார். மாநில அரசும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.  ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கோபிநாத் ஏற்கனவே திக்விஜய் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.தீவிரவாதத்தில் சேரும்படி இளைஞர்களை போலீஸார் தூண்டிவிடுவார்களா ?என்றும் ரெட்டி கேள்வி எழுப்பினார். மத்தியப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் திக்விஜய் சிங், இவ்வாறு பொறுப்பில்லாமல் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அமைச்சர் ரெட்டி மேலும் கூறினார்.

Share