Categories
அதிமுக கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ்.

அமைச்சர்களின் ஊழல் குறித்துப் பேசுவதால், நடிகர் கமல் ஹாசனை மிரட்டி, அவரை பணிய வைக்க முயற்சிப்பது தமிழக  அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஊழல் குறித்து பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது. கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுவது அழகல்ல.  அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுபவர்களை மிரட்டுவது சரியான நடைமுறை ஆகாது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.” என்று கூறினார்.

மேலும் அவர், “நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு தயார் என அப்போலோ தெரிவித்த பின்னும் விசாரணை நடத்த அரசு உத்தரவிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர்

கமல்ஹாசனைக் கண்டித்து அ.தி.மு.க.வின் நமது எம்ஜிஆர் நாளேடு கவிதை

சமீப காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆர், இன்று திடீரென பழைய ஞாபகம் திரும்பியதைப்போல, கமல்ஹாசன் மீது கண்டனச் செய்தி விளியிட்டுள்ளது.

 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

“வில்லன்
வழி சொல்லத்
தெரியாதவனுக்கு
பழி சொல்ல மட்டுமே
தெரியும் என்பார்கள்!
இதற்கு மெத்தப்
பொருத்தமாகிறார்
‘மொத்தமும் வில்லன்!’

ஏழைக்குப் பயன்படாத
இந்த குரோட்டன்ஸ் செடி
எளியோருக்குப்பயன்படும்
கீரையைப் பார்த்து
பழிக்கிறது!

‘உன்னால் முடியும் தம்பி’
என்று இவர் உதட்டளவில்
வாயசைத்துப்பாடியதை,
இளையோர் கரத்தில்
மடிக்கணினி கொடுத்து
உலகை உள்ளங்கைக்குள்
உட்கார வைத்த
ஒப்பில்லா கழகத்தை
முப்பொழுதும்
தப்பென்று பழிக்கிறார்.

மஞ்சள் துண்டு தயவு
கூடவே,
ஒன்றே முக்கால்
லட்சம் கோடி
கொள்ளையர்க்கு
ஒத்தடமும் கொடுக்கிறார்.
மஞ்சள் துண்டின் தயவில்
மக்கள் திலகத்தின்
இயக்கத்தை
வன்மத்து வார்த்தைகளால்
வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்-
புரட்சித்தலைவியின்
புகழ்மனத்து இயக்கத்தை
புண்படுத்தி
மு.க.வை மகிழ்விக்க
முன்னோட்டம்
பார்க்கிறார்.
ஓடுவேன் என்றார்
ஒரு படம் ஓடாவிட்டாலே
ஓடுவேன் நாட்டைவிட்டு
என்ற
இந்த ஒப்பாரித் திலகம்
குகையில் சிம்மம் இல்லை
என்றதும் ஒத்தைக்கு ஒத்தை
வர்றியா என்பதாக
ஊளையெல்லாம்
இடுகிறார்.
காவி மீது பாசம்
கருப்புச் சட்டை
போட்டுக்கிட்டு
சாதிக்கு ஆலவட்டம்
வீசுகிற சாடிஸ்ட் கோஷம்
தூய்மை இந்தியா
திட்டத்தை
தொடங்கிவைத்து
காவி மீதும் பாசம்.

காவேரி,
முல்லைப் பெரியாறு,
மீத்தேன், கெயில்,
நெடுவாசல், ‘நீட்…’
என்றெனும்
தமிழர்தம்
உரிமை என்றால் மட்டும்
மன்மத வம்பன்
போடுவதோ
மவுன விரத வேஷம்.
உலக்கை நாயகன்
இந்த உலக்கை நாயகனின்
விமர்சன எல்லையெல்லாம்
கழகத்தைப் பழிக்கிற
ஓரம்ச திட்டம் மட்டும்
என்றால்
அதனை உலகம் சுற்றும்
வாலிபனின் இயக்கம்
ஓட ஓட விரட்டும்”. -இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்

நேற்று கவிதை மூலம் மறைமுகமாக அரசியலில் வரப்போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் தனது முதலாவது அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், முன்பு தன்னைத் தாக்கிப் பேசிய அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.

கிண்டல் பெயர்  யாரைக் குறிக்கிறது   ஏன்
தம்பி அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கமலை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்றார். ஆகவே, உன்னைவிட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதற்காக “தம்பி”யானார் ஜெயக்குமார்
எலும்பு வல்லுனர் எச். ராஜா கமலை எச்.ராஜா முதுகெலும்பில்லாதவர் என்று சொன்னதால், “எச். ராஜா பெரிய எலும்பு வல்லுனரோ?” என்று நக்கல் செய்துள்ளார்
கல்லுளிமங்கர் என்ற ஊழலார் தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் ஊழலை எல்லோருக்கும் தெரியுமாறு பல ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியான பின்பும் ஆதாரம் இல்லை என கல்லுளிமங்கர்கள் போல அமைச்சர்கள் சொல்வதால் இப்பெயர் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share
Categories
கமல்ஹாசன் சினிமா தமிழகம் தலைப்புச் செய்திகள்

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள்  பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின.

தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில்  இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கவிதை புரியாதவர்களுக்கு நாளை ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share