Categories
அமெரிக்கா ஆசியன் உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

கடுமையான பதிலடி தரப்படும் : வட கொரியா மிரட்டல்; ஆசியன் மாநாட்டில் வ.கொ.விற்கு அதிக அழுத்தம் கொடுக்க பிற நாடுகள் வலியுறுத்தல்

ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமது நாட்டை “தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கு” உருவாக்கப்பட்ட அமெரிக்க சதித்திட்டம் “அதன் இறையாண்மையின் வன்முறை மீறல்” ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள், வட கொரியாவின்  அணுசக்தி திட்டத்தைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது  அதன் அணுசக்தி திறனை வலுப்படுத்த முற்படுவதை தடுக்கவோ செய்யாது என்று அதில் கூறுப்பட்டுள்ளது. வட கொரியா விரைவில் ” ஒரு நீதி நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை என்பதன் விபரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆசியன் மாநாட்டில் வட கொரியாவிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட வலியுறுத்தல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியன் மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரிகள்,  வடகொரியாவிற்கு அனைத்து உலக நாடுகளும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டுமென  கூட்டாக அறிவித்தனர்.

அந்த அறிக்கையில், “வடகொரியா தற்போது கையாண்டுவரும் அச்சுறுத்தும் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும். தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்நாட்டிற்கு எதிராக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள் வட கொரியா

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும்.

வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாடான வட கொரியாவை விட்டுக் கொடுக்க வைத்து, தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.

 

ஐ.நா.-விற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இத்தடைத் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக ஐ.நா. உறுப்பு நாடுகளை பாராட்டினார். “இதுவரை வட கொரியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடைத் தீர்மானங்களைக் காட்டிலும் இது பெரிதாகும். எனினும், இப்பிரச்சனைக்கு முடிவு கட்டி விட்டதாக நினைப்பதானால், அது நம்மை நாமே எமாற்றிக் கொள்வதாகும்.  வடகொரியாவின்  சர்வாதிகார அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது, அது மேலும் வேகமாக, அபாயகரமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது” என்று நிக்கி ஹேலி கூறினார்.

 

மேலும் இத்தீர்மானம் வட கொரிய தொழிலாளர்களுக்கு பிறநாடுகளில் வேலைக்கான அனுமதி வழங்குவதையும் தடை செய்கிறது. வட கொரிய நிறுவனங்களுடன் மற்றநாட்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுவதையும், புதிய முதலீடுகளையும் தடுக்கிறது.

 

வட கொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவுடனே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்மானத்தின் போது பேசிய சீனா பிரதிநிதி வட கொரிய மக்கள் மீது இத்தடைகள் எதிர்மறையான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றார். எனினும் அணு ஆயுதங்கள் அற்ற கொரிய தீபகற்பத்தினை உருவாக்க பேச்சுக்கள் நடத்துவதைத் தூண்டும் என்றார். ரஷ்யாவின் தூதரும் இது முடிவல்ல. அந்நாட்டை பயனுள்ள முறையில் பேச்சு நடத்த வைக்க ஒரு கருவியாக பயன்படும் என்றார்.

 

இதனிடையே வருகின்ற ஆசியன் அமைப்பின் கூட்டம் ஒன்றில் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சருடன் தென் கொரியாவின் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2015 ஆண்டில் வட-தென்கொரிய நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நின்று போனதிலிருந்து முதல் முறையாக இரு நாடுகளும் பேசவுள்ளன.

Share