Categories
இந்தியா தலைப்புச் செய்திகள்

மாடுகள் விற்பனைத் தடை: சென்னை உயர்நீதி மன்றத்தின் இடைநிறுத்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது

மாடுகள் சந்தையில் கசாப்பிற்காக விற்பனை செய்யப்படுவதைத் தடை செய்யும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைநிறுத்த ஆணை பிறப்பித்ததை உச்சநீதிமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைநிறுத்த ஆணை நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மாற்றியமைக்க விரும்பவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் தடுத்து நிறுத்தும் முன்னர், கேரள உயர்நீதிமன்றம் அதனைத் தடுத்து நிறுத்த மறுத்து விட்டது.

இவ்விரு முரண்பட்ட ஆணைகளில், சென்னை  உயர்நீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிராக வழங்கிய தடுப்பு ஆணையே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

மிருகச் சந்தையில் கசாப்பு செய்வதற்காக விற்பனை மற்றும் கொள்முதல் ஒழுங்குமுறையின்  தற்போதைய அறிவிப்பு பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இறைச்சி ஏற்றுமதியாளர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் , உச்சநீதிமன்றத்தில், “கால்நடைகளின் கசாப்பு ஒழுங்குமுறை பற்றிய அறிவிப்பைப் பற்றி மக்கள் மத்தியில் பயமும் கலக்கமும் இருக்கிறது” என்று கூறினார்.

வணிகங்கள்  தடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி  கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.

 

Share
Categories
இந்தியா ஐஐடி தலைப்புச் செய்திகள்

ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பு ஜெ.இ.இ. (JEE ADVANCED) நுழைவுத்தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு எழுதியவர்களுக்கு 2 கேள்விகள் தவறாக இருந்த காரணத்தினால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண் வழங்கியதற்க்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம், விஷ்ணு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றங்கள் ஐஐடி நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வின் (NEET) முடிவுகளை ஜூன் 26 அல்லது அதற்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் ஜூன் 26 அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த மே 24-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை (ஜூன் 12) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் நடைமுறைகளை சிபிஎஸ்இ தொடங்கலாம்” என்று குறிப்பிட்டனர்.

அதேசமயம், “தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கவுன்சிலிங்), சேர்க்கை நடைமுறை ஆகியவை உச்ச நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுக்கு உட்பட்டு தற்போதைய உத்தரவு  பிறப்பிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். “நீட்” தேர்வு விவகாரம் தொடர்பாக மற்ற மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் எந்த வழக்கையும் விசாரணைக்கு ஏற்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று உத்தரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள் பான் எண்

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது.

வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பினய் விஸ்வம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்கள் தங்கள் மனுக்களில் “ஆதார் எண் என்பது கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2015-இல் பிறப்பித்த உத்தரவை சிறுமைப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிட்ட பிறகு, வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ பிரிவை மத்திய அரசு சேர்த்திருக்கக் கூடாது. எனவே, அந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

எனினும், இந்த வாதத்துக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பதிலில் “பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கவும், கருப்புப் பணப் புழக்கத்துக்கும் போலி பான் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுக்கவே பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, “போலி பான் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆதார் அட்டைகளில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆதார் அமலாக்கத்தின் மூலம் ஏழைகளுக்குப் பலனளிக்கும் பல்வேறு திட்டங்களில் ரூ.50,000 கோடியை மத்திய ஆரசால் சேமிக்க முடிந்துள்ளது. அதனால்தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட மனுக்கள் மீதான தீர்ப்பை, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்க உள்ளனர்.

Share