Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு அதிகம் என்று நம்புவதால், இவ்விணைப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.ஓபிஎஸ் அணி நிபந்தனையின்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்றவும் முடிவு செய்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம்  ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக வந்து மலர் தூவி இணைப்பு குறித்து அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனால், இருவரது வீடு, ஜெயலலிதா சமாதி, அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், இரவு 9.45 மணியையும் தாண்டி ஆலோசனையில் இழுபறி நீடித்த நிலையில், மெரினாவுக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களும் தொண்டர்களும் கலையத் தொடங்கினர். சுமார், 9.50 மணியளவில் ஓபிஎஸ் அணியினரின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியப் பதவிகளை கேட்டு தொடர் நெருக்கடி கொடுத்ததால் இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இணைப்பு குறித்த இறுதி முடிவை ஓ. பன்னீர்செல்வமே எடுப்பார் என மதுசூதனன் தெரிவித்தார்.

இதனைக் குறித்து, இன்று ஓ.பி.எஸ். கூறுகையில், விரைவிலேயே இணைப்பு குறித்த செய்தி வெளியாகும் என்று கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

குதிரை பேரம் தீவிரம்: ஒபிஎஸ் TO இபிஎஸ் அணிக்கு 3 எம்எல்ஏக்கள் தாவல் ?

 

சசிகலா சிறைசென்றபின், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் 122 பேரும் மற்றும் ஓபிஎஸ் அணியில் 12 பேருமாக இரண்டு அணியாக செயல்பட்டு வருவது தெரிந்ததே.   இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தை நடைபெறாமலே இந்த குழு கலைக்கப்பட்டது.

தற்போது, எடப்பாடி அணியின் கை சமீபகாலமாக ஓங்கி வருவதால், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தாவுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

அண்மையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு சென்றுள்ளார்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ, ஓபிஎஸ் முதல்வர் பதவி விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல் நபராக ஓபிஎஸ் அணிக்கு வந்தவர் ஆறுகுட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் தற்போதுள்ள 11 எம்எல்ஏக்களில் மேலும் 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலான அணிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. அதுபோலவே, தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ -வும் இன்னும் ஒருவருமாக, 2 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி அணிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் செல்வார்கள் என்றும்  கூறப்படுகிறது.

Share