Categories
அந்தரங்கத்திற்கான உரிமை இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் : உச்ச நீதி மன்றம்

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் என்று விசாரணையின் போது உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு  விசாரி த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எழுப்பியுள்ளது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியன், சோலி சொராப்ஜி, ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

கோபால் சுப்ரமணியம் வாதிடும்போது, குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துடன் அந்தரங்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.  சோலி சொராப்ஜி வாதிடுகையில், அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியிலும் அந்தரங்கத்துக்கான உரிமை பற்றிக் குறிப்பிடவில்லை என்பதற்காக அப்படி ஒன்றே இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

ஷியாம் திவான் வாதிடும்போது, 1975-ஆம் ஆண்டு முதல் அந்தரங்கத்துக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. எனது உடல் நாட்டுக்கு சொந்தம் என்பது சர்வாதிகார நாட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.

இதையடுத்து நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், “அந்தரங்கத்துக்கான உரிமை பாதுகாப்பு என்பது அடிப்படை சட்டத்தை விட மேலானதா?” என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “குடிமக்கள் மீது நியாயமான காரணங்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களை ஓர் அரசு இயற்றுவதை தடுக்க முடியாது. அந்தரங்கத்துக்கான உரிமை என்பது குறிப்பிட்டு உருவகப்படுத்த முடியாத வார்த்தை. அதை விளக்க முற்பட்டால் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.

நீதிபதி சந்திரசூட் குறிப்பிடுகையில், “அந்தரங்கத்துக்கான உரிமை அல்லது ரகசியங்கள் என்ன என்பதை எவ்வாறு விளக்க முடியும்? அதன் பொருளாக்கம் மற்றும் வரையறைகள் என்ன? ஓர் அரசால் தனியுரிமையை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்த முடியும்? அந்தரங்கத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதில் ஓர் அரசின் கடமை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும்” என்று கூறினார்.

“தொழில்நுட்பத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களைப் பற்றிய விவரங்களை பொதுப்படையாக வெளியிடும் செயல், அந்தரங்கத்துக்கான உரிமையில் சமரசம் செய்து கொள்வதாகாதா?” என்றும் அவர் மனுதாரர்களின் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என்று, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கேட்டதையடுத்து,  வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Share
Categories
ஆதார் எண் இந்தியா உச்ச நீதிமன்றம் தலைப்புச் செய்திகள்

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

 

 

ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர்.

அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அவற்றுள், வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி அளித்த தீர்ப்பில்,  “பான்” என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆதார் அட்டை, அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகாது என கூறி தொடுக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வழக்குகளை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் ஜே. செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, முடிவில்  ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அவ்வுத்தரவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஒருவரின் அந்தரங்க உரிமை, அடிப்படை மனித உரிமையா; இது அரசியல் சாசன கட்டமைப்பின் ஒரு அங்கமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைத்து பதில் தருமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

இந்த அமர்வு, புதனன்று (இன்று) விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இவ்விவகாரத்தில் இதன் முன்பு நடைபெற்ற கரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரின் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகளும் ஆராயப்படும். கரக்சிங் வழக்கில் 6 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1960-களிலும், எம்.பி. சர்மா வழக்கில் 8 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, 1950-ம் ஆண்டிலும் தீர்ப்பு வழங்கி உள்ளன. இவ்விரு வழக்குகளிலுமே அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை அல்ல என்று தீர்ப்பு கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு பிந்தைய பல தீர்ப்புகள், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை என கூறி உள்ளன.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிடும்போது, “அந்தரங்க உரிமைக்கென்று பொதுவான சட்டம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். இருப்பினும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் குடிமக்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால், அந்தரங்க உரிமை, இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.

Share
Categories
ஆதார் எண் இந்தியா

ஆதார் அட்டைக்காக கைரேகை பதிவு செய்வதில் எவ்வித உரிமை மீறலும் இல்லை : மத்திய அரசு

ஆதார் அட்டைக்காக கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வது எவ்விதத்திலும் உரிமை மீறல் இல்ல என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். மேலும் மரபணு சோதனை மேற்கொண்டாலும் தவறில்லை என்றும் முகுல் ரோத்தகி கூறியுள்ளார். பிறநாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை மேற்கொள்ளபடுவதாகவும், சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் அவசியமானது என்றும் தெரிவித்தார். விமான பயணத்திற்கு கூட சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

 

Share