Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் தலைப்புச் செய்திகள் மோடி

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாத போது தேர்தலில் வெற்றிபெற வேண்டிய  நெருக்கடியைத்தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது. எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத்தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அது ஒரு கட்சியாக தொடர்வதற்கே விடுக்கப்பட்ட  நெருக்கடி மிகுந்த சவாலாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி தொடர்ந்து செயல்படுவதைக் குறித்த ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

நாம் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாமும் நம் அணுகுமுறையை மாற்றாவிட்டால்,  நாம் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சி இந்தியா மாறிவிட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன். 2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்பவேண்டும். நம்மிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாம் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப்பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

நிதிஷ் குமார் விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் நான் அதிர்ச்சியடைந்தேன், ஆழமான ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை, நாம் மேலே முன்னேறிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Share
Categories
இந்தியா கர்நாடகா காங்கிரஸ் குஜராத் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குஜராத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் பட்சத்தில் பிரதமர் நரேந்திர மோடியோ, பாஜக கட்சியினரோ குதிரைபேரம் நடத்தி அவர்களை மிரட்டி தங்களது பக்கம் வளைத்துவிடுவார் என்பது காங்கிரசாரின் அச்சம்.

மானிலங்களவை வேட்பாளர்களாக பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் களமிறங்குகிறார். பட்டேல் வெற்றி பெற வேண்டுமானால் கண்டிப்பாக 44 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளும் தேவை. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் குறைந்தால் கூட அவர்களது வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும். இதை தடுக்கவே கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைத்தது போலவே, குஜராத்தை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அவர்கள் சில நாட்கள் தங்க வைக்கப்படுவதே பாதுகாப்பு என்று கருதி அந்த கட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

அமித்ஷாவின் “காந்தி சாதுர்யமான வியாபாரி” – கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம்

பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் “காந்தி ஒரு சாதுர்யமான வியாபாரி” என்று தெரிவித்துள்ள கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தியின் பேரரான கோபால் கிருஷ்ண காந்தி அதுபற்றி கூறுகையில், “இது கேட்க சகிக்காத, குறும்புத் தனமான பேச்சு” என்றார்.

மகாத்மாவின் இன்னொரு பேரரான ராஜ்மோகன் காந்தி, “பிரிட்டிஷ் சிங்கத்தையும், இந்தியாவில் இனவாத விஷப் பாம்புகளையும் வென்ற மனிதர், ‘ஒரு சாதுரியமான வியாபாரி’யை விடவும் உயர்ந்தவர்” என்றார்.

“அமித் ஷாவின் கருத்து, சுதந்திரப்போராட்ட வீரர்கள், அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் மகாத்மா காந்தி மீது அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.

“அமித் ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். அதற்காக மன்னிப்பும் கேட்கவேண்டும். அவர் வேண்டுமென்றே இப்படி சொல்லி இருக்கிறார். இது துரதிர்ஷ்டவசமானது” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

“தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி என்ற வகையில், அனைவரும் அவரை மதிக்க வேண்டும். உலகம் முழுவதும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரை இப்படி கூறி இருப்பது மோசமானது” என்று இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.

“காங்கிரஸ் கட்சியையோ, பிற எதிர்க்கட்சிகளையோ அவர் விமர்சிப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் மகாத்மா காந்தியின் பெயரை இழுப்பது, இப்படிப்பட்ட வார்த்தைகளால் பேசியிருப்பது காந்தியை இழிவுபடுத்துவதாகும்” என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறியிருக்கிறார்.

“இது மகாத்மா காந்தி மீது பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டுள்ள அவமதிப்பை வெளிப்படுத்துகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கூறியிருக்கிறார்.

 

Share