மாட்டிறைச்சிக்கு தடை : மேகாலயா பாஜக தலைவர்கள் விலகல்

மாட்டிறைச்சிக்கு தடை : மேகாலயா பாஜக தலைவர்கள் விலகல்
Jun 6, 2017

இறைச்சிக்காக  மாடுகளை விற்கக் கூடாது என மத்திய பாஜக அரசு தடை விதித்ததை கண்டித்து மேகாலயாவில் உள்ள பாஜக தலைவர்கள் இருவர் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறைச்சிக்காக மாடு, எருது மற்றும் ஒட்டகங்களை வெட்ட மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் கேரளா, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மாட்டிறைச்சி திருவிழா என்ற பெயரில் பொது இடங்களில் மாட்டிறைச்சி சமைத்து உண்டு அவர்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.  இதனையடுத்து, இந்த உத்தரவு குறித்து அரசு மறுபரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைவரான பச்சூ மராக் என்பவர் மாட்டிறைசிக்கான தடையை கண்டித்து அவருடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசு மதவாத கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதாகவும், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் மேகாலயாவில் உள்ள பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் மற்றொரு மாவட்ட தலைவரான பெர்னார்ட் மராக் என்பவரும் மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து அவருடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மேகாலயா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பாஜக வியூகம் வகுத்து வந்த நிலையில் மாட்டிறைச்சிக்கான தடை பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.