நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ்.

நடிகர் கமல்ஹாசனை மிரட்டுவது அரசுக்கு நல்லதல்ல: ஓ.பி.எஸ்.
Jul 23, 2017

அமைச்சர்களின் ஊழல் குறித்துப் பேசுவதால், நடிகர் கமல் ஹாசனை மிரட்டி, அவரை பணிய வைக்க முயற்சிப்பது தமிழக  அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஊழல் குறித்து பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது. கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக் கூறுவது அழகல்ல.  அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுபவர்களை மிரட்டுவது சரியான நடைமுறை ஆகாது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.” என்று கூறினார்.

மேலும் அவர், “நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு தயார் என அப்போலோ தெரிவித்த பின்னும் விசாரணை நடத்த அரசு உத்தரவிடாதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.