Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி, பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்னும், கைல் ஹோப் 46 ரன்னும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 36 ரன்னும், ரோவ்மன் பவெல் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷிகர் தவான் 4 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்து வீச்சில் எவின் லீவிஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் விராட்கோலி களம் கண்டார். கடந்த ஆட்டங்களில் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்த விராட்கோலி இந்த முறை ஷாட் பிட்ச் பந்துகளை திறம்பட கையாண்டார். அவரை முந்தைய ஆட்ட பாணியில் வீழ்த்த நினைத்த வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அணியின் ஸ்கோர் 84 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 51 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் பிஷோ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து தினேஷ்கார்த்திக், விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 67 பந்துகளில் அரை சதத்தை கடந்த விராட்கோலி 108 பந்துகளில் சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 28–வது சதம் இதுவாகும்.

இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தை விராட்கோலி சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். விராட்கோலி 115 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 111 ரன்னும், தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 4–வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. சதம் அடித்த விராட்கோலி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 336 ரன்கள் குவித்த ரஹானே தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

Share
Categories
ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் கிரிக்கெட்டு விளையாட்டு

மகளிர் உலக கோப்பை : பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா  தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. டெர்பி கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா  முதலில் பேட் செய்தது. பூனம் ராவுத், மந்தனா இருவரும் இன்னிங்சை தொடங்கினர்.

இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மான்சி ஜோஷி 4, பூனம் யாதவ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான்  பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 4, சாடியா யூசுப் 2, டயானா, அஸ்மாவியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 170 ரன் எடுத்தால்  வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

பாக். 38.1 ஓவரில் 74 ரன்னுக்கு சுருண்டது. இந்திய பந்துவீச்சில்  ஏக்தா பிஷ்ட் 5, மான்சி 2, ஜுலன், தீப்தி, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பிஷ்ட் ஆட்ட நாயகி விருது பெற்றார். இங்கிலாந்து, வெஸ்ட்  இண்டீஸ் அணிகளை தொடர்ந்து பாகிஸ்தானையும் வீழ்த்திய இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலை 10ல் தேர்வு: கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில் கும்பிளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு பலர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகியதை தொடர்ந்து 2வது முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும்.  இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.  இதேபோன்று வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்சில் உலக கிரிக்கெட் குழு கூட்டம் வருகிற 3 மற்றும் 4ந்தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி செல்கிறார்.

அதற்கு முன் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வருகிற 10ந்தேதி மும்பையில் நடைபெறும் என கூறினார்.

இநதிய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் உள்ளனர்.

Share
Categories
உலகம் காணொளி கால்பந்து சிலி விளையாட்டு வைரல் விடியோ

கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டே நோயாளிக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள்

தென்னமெரிக்கா நாடான சிலியில்  உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில்,  கால்பந்து போட்டியை ரசித்துக்கொண்டே நோயாளிக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள் பதிவாகியிர்ந்தனர். இவ்வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அவ்வீடியோவில், ஆப்ரேஷன் தியேட்டரில் நினைவிழந்த நிலையில் நோயாளி ஒருவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அவரின் இருபுறத்திலும் நிற்கும் மருத்துவர்கள் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்து கொண்டிருந்தார்கள்.


அங்கிருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் கால்பந்து போட்டி ஒளிபரப்பாகியது. அப்போது, கால்பந்து வீரர் கோல் அடிக்கும் தருணத்தை ஆப்ரேஷன் செய்வதை நிறுத்தி விட்டு மருத்துவர்கள் திரும்பி பார்க்கிறார்கள்.

அருகில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் போட்டியை துள்ளி குதித்து கண்டுகளிப்பது போல வீடியோவில் உள்ளது. வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Categories
பேட்மின்டன் விளையாட்டு

‘வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த்

சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டி ஆகியவற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அடுத்தடுத்து 2 பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த் மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் ஆகியோர் நேற்று ஐதராபாத் திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் உலக தர வரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் 24 வயதான ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக தர வரிசையில் ‘டாப்-10’-க்குள் வருவது என்பது நல்ல விஷயமாகும். ஆனால் டாப்-10 வரிசைக்குள் வர வேண்டும் என்பதற்காக நான் இந்த போட்டிகளில் விளையாடவில்லை. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே விளையாடினேன். ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் நிச்சயமாக வெற்றிக்காகவே விளையாடுவேன். வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எனது சிந்தனையாகும். தர வரிசையை பற்றி நான் கவலைப்படுவதில்லை.

கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த வெற்றியை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு மட்டுமின்றி பிரனாய், சாய் பிரனீத் ஆகியோருக்கும் கடந்த 2 வாரங்கள் மிகவும் சிறப்பானதாகும். பிரனாய் உண்மையிலேயே மிகவும் அபாரமாக செயல்பட்டார். அவர் முன்னணி வீரர்களான ஷோங் வெய், சென் லாங் ஆகியோரை வீழ்த்தினார். இதுபோல் முன்பு ஒருபோதும் நடந்தது கிடையாது. இதற்காக பிரனாய்யை நான் பாராட்டுகிறேன்.

காயம் அடைந்த பிறகு உடனடியாக போட்டிக்கு திரும்ப வேண்டும் என்று நான் அவசரப்படவில்லை. முதலில் பயிற்சிக்கு திரும்புவதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். அதன் பிறகு உடல் தகுதி நல்ல நிலையை எட்டியதை உணர்ந்ததும் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பயிற்சியாளரின் உதவியால் தான் என்னால் இந்த வெற்றிகளை பெற முடிந்தது. கடந்த சில மாதங்களாக நான் மிகவும் நன்றாக விளையாடி வருகிறேன். இதே மாதிரி சிறப்பாக தொடர்ந்து விளையாட வரும் மாதங்களில் கடினமான பயிற்சி மேற்கொள்வேன். எல்லா வெற்றிகளுமே எனக்கு முக்கியமானது தான். இந்த வெற்றியை முந்தைய வெற்றியுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை வீழ்த்தியது எனது மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த பயிற்சியாளர் கோபிசந்த், இந்திய பேட்மிண்டன் சம்மேளனம், அரசு ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

Share
Categories
கிரிக்கெட்டு விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 377 ரன்கள் குவிப்பு

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் லீசெஸ்டரில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.

பின்னர் 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் டக்வொர்த் விதிமுறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் சந்திக்கின்றன.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் : இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்  போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஹானேவின் சதம் – 104 பந்துகளில் 103 ரன்கள் – இந்தியாவை 310/5 என்ற ரன்களில் தனது இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்ள உதவியது. மழையால் தாமதமாக துவங்கிய போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணியின் தலைவர் கோலி 66 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார், அடுத்து விளையாடிய மே. இந்திய அணி 205/6 என்ற ரன்களில் விளையாட்டை முடித்துக் கொள்ள இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மே. இந்திய அணியும் பெரிய ரன் எண்ணிக்கையை அடைய எவ்வித முயற்சிகளும் செய்யாமல்  ஆடியது.
இந்த வெற்றியானது கரீபியன் தீவுகளில் இந்தியா ரன்கள் அடிப்படையில் பெற்ற பெரிய வெற்றியாகும். இந்த ஆட்டத்தின் மூலம் 300 ரன்களை அதிக முறை எடுத்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெறுகிறது. இந்தியாவிற்கு இது 96 ஆவது 300 ரன்களாகும். ஆஸ்திரேலியா 95 முறை 300 ரன்களை கடந்துள்ளது.
ரோகித் சர்மா விளையாடததால் ரஹானே துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் சரிவர பந்து வீசவில்லை. இதில் டாஸ் வென்று இந்திய அணியை விளையாடச் சொன்ன அணித் தலைவர் ஹோல்டரும் அடங்குவார்.
Share
Categories
தலைப்புச் செய்திகள் பேட்மின்டன் விளையாட்டு

ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டி: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேட்மின்டனுக்கான ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் சென் லோங்கை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வென்று அப்பட்டத்தை வென்றுள்ளார்.

மூன்றாவது முறையாக சுப்பர்ஸீரீஸ் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்   56.250 டாலர் பரிசு பெற்றார். பேட்மின்டன் உலக சம்மேளனத்தின் (BWF) தரப்பட்டியலில்  11 வது இடத்தில் இருக்கும் 24 வயதான, குண்டூரில் பிறந்த ஸ்ரீகாந்த் தனது ஐந்து வருட போட்டிகளில் அவரை எதிர்த்து விளையாடிய 28 வயதான சென் லோங்கை இதற்கு முன்பு  ஒருபோதும் வென்றதில்லை.

முன்னதாக, கடந்த 18-ஆம் தேதியன்று, ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு சூப்பர் சீரீஸ் பட்டங்களை ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் தொடர்களின் இறுதியாட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
விளையாட்டு ஹாக்கி

உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தானை 6-1 என வீழ்த்தியது இந்தியா

லண்டனில் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்ற இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. பின்னர் காலிறுதியில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இன்று நடைபெற்ற 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இறுதியில், இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு விளையாட்டு வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது.

சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அனில் கும்பிளேவின் முதல் பயணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அமைந்தது. சரியாக ஓராண்டுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அங்கு சென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை பயிற்சியாளர் பதவியில் கும்பிளே இல்லை. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பதவியை துறந்து விட்டார். இந்த விவகாரத்தை சுற்றி நிறைய சர்ச்சைக்குரிய வி‌ஷயங்கள் உலா வரும் சூழலில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் வலுவான இந்திய அணியே அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய தரப்பில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத ரஹானே, முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இந்த தொடரில் நிச்சயம் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஷிகர் தவானுடன் ரஹானே அல்லது ‘இளம்’ புயல் ரிஷாப் பான்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்கள். அதே போல் சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்களில் ஒருவரை கழற்றி விட்டு ‘சைனாமேன்’ வகை பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. கும்பிளே விலகிய நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கேப்டனுக்கு எதிராக எதையும் சொல்லப்போவதில்லை. அதனால் கேப்டன் விராட் கோலி, ஆடும் லெவன் அணியை தனது இஷ்டத்துக்கு தேர்வு செய்வதில் எந்த தொந்தரவும் இருக்காது.

Share