Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

திங்களன்று மீண்டும் இணைய தாக்குதல் இருக்குமா ?

கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகளவில் நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள் பாதிப்படைந்த நிலையில், அடுத்து ஒரு மிகப்பெரிய இணைய தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த கணினி பாதுகாப்பு வல்லுநரான ”மால்வேர் டெக்” என்பவர், ”மற்றொரு இணைய தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமையன்று தாக்கலாம்” என்று எச்சரித்துள்ளார்.

ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தை கட்டுப்படுத்த இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினியில் பயன்பாட்டாளர்களின் தரவுகளை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இந்த வைரஸ் ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட 100 நாடுகளுக்கு பரவியது.

கணினிகளை கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், தகவல்களை கட்டுப்படுத்தும் இந்த வைரஸ், கணினியில் உள்ள தரவுகளை மீண்டும் பயன்படுத்த சுமார் 300டாலர்கள் வரை மெய்நிகர் பணமான பிட்காயின் பணத்தை செலுத்துமாறு கணினி பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று கணக்குகளை பிபிசி ஆராய்ந்த போது, அவை ஏற்கனவே கணினியை ஊடுருவியவர்களுக்கு சுமார் 22,080 பவுண்டிற்கு ஈடான தொகையை கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பெயர் வெளியிடாமல் ரகசியமாக செயல்படும் மால்வேர் டெக் எனப்படும் தீய மென்பொருள் வல்லுநர் ஒருவர், வைரஸின் பரவலை அறிய இணைய தளத்தை பதிவு செய்தததை தொடர்ந்து வைரஸ் பரவல் முடிவுக்கு வந்தது.

அந்த வல்லுநரை ‘ ஆபத்து கால நாயகன்’ என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

22 வயது நிரம்பிய வல்லுநர் பிபிசியிடம் பேசுகையில்,”தற்போது பொதுமக்கள் தங்களுடைய கணினிகளில் பேட்ச் எனப்படும் அப்டேட் மென்பொருளை உடனடியாக நிறுவ வேண்டும்.

”நாங்கள் இதை ஒருமுறை நிறுத்திவிட்டோம், ஆனால் மீண்டும் மற்றொன்று விரைவில் வரும். அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.

”இதில் நிறைய பணம் புழங்குகிறது. இதை நிறுத்துவதற்கு அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. வைரஸின் கோட்டை மாற்றி மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க பெரிய முயற்சிகள் தேவைப்படாது” என்றார்.

Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

உலகளாவிய இணையதாக்குதல்: பல முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் முடங்கின

உலகளாவிய மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.

பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது.

பிரிட்டனின் முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்த தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் ransomware attack என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இணைய சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று இந்த மென்பொருள் கேட்கும்.

பிரிட்டனின் சில மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பு முழுமையாக செயலிழந்துபோனதால் பல இடங்களில் நோயாளிகள் அவசரகால சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஸ்பெய்ன் நாட்டில் பெருமளவிலான அந்நாட்டு நிறுவனங்களின் இணைய கட்டமைப்பும் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share