Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

எம்.எல்.ஏ-களுக்கு பணம் கொடுத்த விவகாரம் : சட்டசபையில் இன்றும் குரல்கொடுக்க திமுக முடிவு

நேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கோரியதால் ஏற்பட்ட அமளியையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  தொடர்ந்து இன்றும் மீண்டும் குரல் கொடுப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதன்கிழமையன்று கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக, சரவணன் என்ற சட்டமன்ற உறுப்பினர் கூறிய விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென்று மு.க. ஸ்டாலின் கோரினார்.

இதுதொடர்பான அமளி சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததால், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின் தி.மு.கவினர் தலைமைச் செயலகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் இதுபற்றி கூறும்போது, மீண்டும் இப்பிரச்சனை குறித்து அடுத்த நாள் (வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க கோருவோம் என்றார்.

Share
Categories
சென்னை தமிழகம்

சட்டபேரவை முடியும் வரை சென்னை போலீசாருக்கு விடுமுறை இல்லை

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. இந் நிலையில், ஜூலை, 19 வரை,  ‘லாக்கப் டெத்’ தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல் இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும், போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் எக்காரணம் கொண்டும், லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி, ஜூலை, 19 வரை, போலீசார் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுக்கவும் தடை விதித்து, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.இந்த உத்தரவை சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Share
Categories
தமிழகம்

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு மீண்டும் பணி

ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

கடந்த 2006- 2011-ல் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். இவர் பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக ஜாபர்சேட் வீடு பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011-ல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு 6 மாதத்துக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜாபர் சேட். இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ஜாபர் சேட்டை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க கடந்த 2016 -ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஜாபர் சேட்டிற்கு தகுந்த பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனிடையே ஜாபர்சேட், மண்டபம் அகதிகள் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஜாபர் சேட். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

கூவத்தூர் விடுதியில் கோடிக்கணக்கில் பேரம் பற்றிய வீடியோ: எம்.எல்.ஏ-க்கள் மறுப்பு

கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகள் தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. இந்த வீடியோவில் பேசியது தான் இல்லை என சரவணன் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.

மற்றொரு வீடியோ கோவை சூலூர் தொகுதியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ. கூவத்தூரில் தங்கியிருந்த போது சிலருக்கு நகை, பணம் கொடுத்தனர் என கூறியதாக வெளியானது. இதனை கனகராஜ் எம்.எல்.ஏ. மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார்.

யூடியூபில் இது தொடர்பாக வெளியான  வீடியோவின் லின்க் :

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தமிழகம்

தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் கோஷ்டி 1,52,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இன்று 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகளாக உடைந்துள்ளது. இதனால் அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இரு கோஷ்டிகளும் தங்களுக்கே அதிமுக நிர்வாகிகள் ஆதரவு என்பதற்கான பிரமாண பத்திரங்களை தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ததாலேயே ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு கோஷ்டிகளும் இணையும் என்றும் இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவிக்கப்பட்டன. ஆனால் இரு கோஷ்டி இணைப்புக்கான ரகசிய பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான குழுவை கலைப்பதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் கோஷ்டியின் அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் முகாமிட்டு 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்தார்.

சசிகலாவை பொதுச்செயலராகவும் தினகரனை துணைப் பொதுச்செயலராக ஏற்பதாகவும் அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட பிரமாண பத்திரங்கள் இவை. இதுவரை மொத்தம் 3,10,000 பிரமாண பத்திரங்களை இபிஎஸ் கோஷ்டி தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் கோஷ்டியும் இதேபோல் லாரி லாரியாக பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
கன்யாகுமரி தமிழகம் மாவட்டம்

கொச்சி அருகே சரக்கு கப்பல் – படகு மோதல்: குளச்சல் மீனவர் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சி அருகே மீன்பிடி படகின் மீது சரக்கு கப்பல் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதில் 2 பேர் உடல் மீட்கப்பபட்டது. ஒருவர் உடலை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது. கேரள மாநிலம் கொச்சி தோப்பும்படி துறைமுகத்தில் இருந்து, குமரியை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட 14 பேர் படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த படகு மீது பயங்கரமாக மோதியது.

இதில் மீன்பிடி படகு உடைந்து கவிழ தொடங்கியது. மீனவர்கள் கடலுக்குள் விழுந்து உயிருக்கு போராடினர். படகு மீது கப்பல் பயங்கரமாக மோதிய சத்தமும் மீனவர்களின் அலறல் சத்தமும் கேட்டு சிறிது தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த 11 மீனவர்களையும் அதிரடியாக மீட்டனர். மீதமுள்ள 3 மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொச்சி கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிய குளச்சலை சேர்ந்த ஆன்டனி ஜாண் என்கிற தம்பிதுரை மற்றும் அசாமை சேர்ந்த ராகுல் உடல்கள் மீட்கப்பட்டன. அசாம் மாநிலத்தை சேர்ந்த மோடி உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்கப்பட்ட 11 மீனவர்களில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மீனவர்கள் மீது மோதிய கப்பலை தேடும் பணியை கடற்படையினர் தீவிரப்படுத்தினர். ரேடார் உதவியுடன் நடத்திய ஆய்வில் மீனவர்கள் மீது மோதிய கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடற்படையினர் அங்கு விரைந்து சென்று சரக்கு கப்பலை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்பர் என்ற சரக்கு கப்பல் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணைக்காக கடற்படையினர் அந்த கப்பலை கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் கடல் ஆழம் இல்லை என்பதால் நடுக்கடலில் நங்கூரமிட்டு கப்பல் நிறுத்தப்பட்டது. கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக போர்ட் கொச்சி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கப்பல் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
இலங்கை திமுக ஸ்டாலின்

பொதுவாக்கெடுப்பே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு: ஸ்டாலின்

ஈழத்தமிழர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையருக்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ அரசியல் தீர்வு நிச்சயம் தேவை என்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பொது வாக்கெடுப்பால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Share
Categories
தமிழகம்

எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல்: மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார்

எய்ம்ஸ் இடம் தேர்வில் பொய்யான தகவல் என  தமிழக அரசு மீது மதுரை ‘எய்ம்ஸ்’ போராட்டக்குழு புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அந்த இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனை அமைப்பது குறித்து தமிழக அரசிடம் மத்திய சுகாதார அமைச்ச கம் 10 கேள்விகளுக்கு பதில் அளித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டிருந்தது. அதற்கு பதில் அனுப்பாமல் நீண்ட நாள்களாக தாமதம் செய்து வந்த தமிழக அரசு கடந்த 5.5.2017-ம் தேதி சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மூலமாக, 10 கேள்விகளுக்கு பதில் தயார் செய்து அறிக்கை அனுப்பி உள்ளது. அந்த மதிப்பீட்டு அறிக்கையில் தஞ்சாவூர் செங்கிபட்டியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக் கலாம் என பரிந்துரை செய்துள்ளார். அந்த கடிதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மதிப்பீட்டு பட்டியலில் மதுரையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் உள்ள உண்மை தகவல் களை மறைத்து அனுப்பியுள்ளார். மாறாக செங்கிபட்டியில் கட்டமைப்பு வசதிகள் அதிகமாக இருப்பதாக தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரியும், தனியார் மருத்துவக் கல்லூரியும் இருப்பதாக அந்த கடிதத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒதுக் கப்பட்ட 198.21 ஏக்கர் நிலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பைப்லைன் செல்வதாக குறிப்பிட் டுள்ளார். மாவட்ட நிர்வாகம், பைப் லைன் செல்லும் நிலத்துக்கு பதில் கூடுதலாக அதே பகுதியில் 38 ஏக்கர் நிலத்தை தருவதாக உறுதியளித்துள்ளது. ஆனால், தகவலை குறிப்பிடாமல் மறைக் கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தஞ்சாவூர், பெரம்பலூரில் அரசு மருத்துவமனைகள் இல்லை என பொய்யான தகவலை குறிப்பிட்டுள்ளனர். தஞ்சாவூரில் அரசு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. இந்த வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையும் கட்டப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் மறைக்கப்பட் டுள்ளன. தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள புதுச் சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. சமீபத்தில் காரைக்காலிலும் ஜிப்மர் மருத்துவ மனை தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல் குறிப்பிடாமல் மறைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ்க்கு ஒதுக்கிய இடத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் திருப்பரங்குன்றம் ரயில்நிலையமும், திருமங்கலம் ரயில்நிலையமும், 13 கி.மீ., தொலைவில் விமான நிலையமும், ஒட்டிய தொலைவில் நான்கு வழிச்சாலையும் இருக்கிறது. இந்த தகவல்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.

மதுரைக்கான சாதகமான தகவல்களை ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டு தஞ்சாவூருக்கு சாதகமான தகவல்களை குறிப் பிட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையை மதுரைக்கு வழங்காமல் தென் மாவட்ட மக்களை ஏமாற்றி யுள்ளனர். ஒரு அரசே உண்மைக்கு புறம்பான தகவல்களை மறைத்துவிட்டு அரசியல் உள்நோக்கம், லாபத்துக்காக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை தஞ்சாவூருக்கு கொண்டு செல்ல நினைப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக அரசு பரிந்துரையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து மத்திய ஆய்க்குழு பரிந்துரையிபடி தகுதி அடிப்படையில் முதல்நிலையில் இருக்கும் மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை ஒதுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தென் மாவட்ட மக்கள், அரசியல் கட்சியினர், தொழில்துறையினரை திரட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். இதற்கு அரசு பணியாவிட்டால் அடுத்தகட்டமாக தோப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Share
Categories
ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார். மிகவும் பதற்றமாக காணப்பட்ட அவர் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விவரித்தார், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த அவரது சகோதரர் தீபக் அழைத்ததால் அங்கு சென்றதாகவும், தீபக் அவரை திட்டமிட்டு அழைத்து ஏமாற்றி பிரச்சனை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.  தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பிரதமர் மோடியிடம் பேசப்போவதாகவும் கூறியுள்ளார்.

 

Share
Categories
கன்யாகுமரி தமிழகம் மாவட்டம்

குளச்சல் அருகே படகு கடலில் கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் படகு கவிழந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரசலையன், பெஞ்சமின், தாசன் ஆகிய மீன்று மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

குளச்சலில் இருந்து ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களில், ரசலையன் மட்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்தார்.

மாயமான மற்ற இருவரையும் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் பெஞ்சமின் மற்றும் தாசன் ஆகியோரது உடல்கள் குளச்சல் பகுதியில் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து மீனவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share