செய்தி : நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் பின்னடைவை தவிர்க்க தமிழக அரசு தமிழக பாடத்திட்டப்படி படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு.
கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூன்று அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் கூறினர்.
இதற்கு முன்னரும் இம்மூவரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிமுகவின் இரு கோஷ்டிகள், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்ததை எதிர்த்ததுடன், அதுபற்றிப் பேசுவதற்காக ஸ்டாலினை சந்தித்திருந்தனர். மேலும், மாட்டிறைச்சி தடைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து திமுக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது, அவர்களுடன் சேர்ந்து இம்மூவரும் வெளிநடப்பு செய்தனர்.
இச்செயல்களால், ஆளும் அதிமுக எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியடந்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை இன்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மணவர்கள் ஒருவர்கூட இடம் பெறமுடியவில்லை.
கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற்கான நீட் (NEET) தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு, தமிழக மானில கல்வித்துறையின் பாடத்திட்டத்திற்கும், மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், தமிழகத்தில் நடத்தப்பட மாட்டாது என்று மானில அரசு, உறுதியளித்திருந்த போதும், மத்திய அரசின் கோரிக்கையின் மீதான உச்சநீதிமன்ற ஆணையால் தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்பட்டது. மாணவர்களும் வேறுவழியின்றி நீட் தேர்வை சந்தித்தனர்.
ஜெயலலிதா இறந்தபின் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதிமுக கோஷ்டிகளும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே கொள்கையக் கொண்டுள்ள தமிழக அரசும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவுகளைப் பற்றி எதுவும் கவலைப் படாமல், மத்திய அரசின் தலையாட்டிப் பொம்மையாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கானல் நீராகப் போகும் நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் தமிழக மாணவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டார் என்பதை மட்டும் நாம் உறுதியாகக் கூறமுடியும்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் அவர்கள், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை எங்கள் பொதுச் செயலாளர் சசிகலாதான் அறிவிப்பார் என்று கூறி வந்தனர். அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளான இப்தார் விருந்தை எடப்பாடி தலைமை ஏற்று நடத்தியதையும் அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் நேற்று மாலை அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் இன்று இது தொடர்பாக கூறுகையில், “எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம்” என்றனர். கட்சியில் டி.டி.வி. தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி உள்ளனர்.
சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீயில் கருகி உருக்குலைந்தது. இதனால் 2–ந்தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6–வது தளத்தில் இருந்து பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் கீழே விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியது. 20–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை எடுக்கும் பணி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சுமார் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட அந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகம் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்த பெட்டகத்தை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் கூறும்போது, ‘கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ‘பணம் பாதுகாப்பு பெட்டகத்தில்‘ பணம் எதுவும் இல்லை. மேலும் அதனுள்ளே சம்பந்தப்பட்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள் இருந்தன. அதில் சில ஆவணங்கள் சேதமடைந்திருந்தது. இதேபோல் தரைதளத்தில் உள்ள பெட்டகத்தில் நகை, வைரம் மற்றும் வெள்ளி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இடிபாடுகளை அகற்றிய பிறகு தான் அந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்க்க முடியும்’ என்றார்.
தரை தளத்தில் தங்கம், வைரம், வெள்ளி ஆகிய பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக 2 நகை பாதுகாப்பு பெட்டகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது முதல் தளம் வரை இடிபாடுகளின் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
தரைத்தளத்தின் இடிபாடு கழிவுகள் அகற்றப்பட்டு, அடுத்தகட்டமாக நகை பாதுகாப்பு பெட்டகங்களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெறும் என்று கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில், அ.தி.மு.க., அணிகள், என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டது. ‘கட்சியில் தினகரனுக்கு, முக்கியத்துவம் அளிக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் ஒத்துழைக்க மாட்டோம்’ என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர்.
இதையடுத்து, தினகரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவை சந்தித்து, ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்தனர். சென்னையில், நேற்று மாலை இப்தார் நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி அலுவலகம் வந்தனர். அங்கு, முதல்வர் தலைமையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆலோசனை முடிவில், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, 19ம் தேதி மதியம், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., அறிவித்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.இது குறித்து, நாங்கள் ஒன்று கூடி பேசினோம்; அதில், ஒருமனதாக, பிரதமர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, ஏகமனதாக ஆதரிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
‘சசிகலா ஆதரவோடு, இந்த முடிவு எடுக்கப்பட்டதா’ என்ற கேள்விக்கு, பதில் அளிக்க, முதல்வர் மறுத்து விட்டார். பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை, பன்னீர் அணியும் எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், என்ன முடிவு எடுப்பர் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், வழக்கு பதிவு செய்யும் படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் படி நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய உயரதிகாரி இன்று கொடுத்துள்ள விளக்கத்தின்படி “தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் வழக்கு பதிவு செய்ய மட்டுமே பரிந்துரை செய்ததாகவும், முதல்வர் பெயரையோ, வேறெந்த தனி நபரின் பெயரையோ குறிப்பிட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரான, ஜெயலலிதா இறந்த பின், அந்தத் தொகுதிக்கு, ஏப்ரல், ௧௨ல் இடைதேர்தலை,தேர்தல் கமிஷன் அறிவித்தது. அப்போது, அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில், தினகரனும், பன்னீர் அணி சார்பில், மதுசூதனனும் போட்டியிட்டனர்.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு பெரும் அளவில், பணப் பட்டுவாடா செய்ததாக, புகார்கள் எழுந்தன; அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடிதம் இந்நிலையில், பணப் பட்டுவாடா தொடர்பாக, தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக்கேட்டு, ஏப்., 26ல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், வைரக்கண்ணன் என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலாகவே இப்பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியதாகத் தெரிகிறது.
சென்னை செங்குன்றத்தில் அதிரடி சோதனையின் போது ரூ.71 கோடி போதைப்பொருள்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு செங்குன்றத்தில் செயல்பட்டுவரும் தனியார் கிடங்கில் சோதனையில் ஈடுபட்டனர். அக்கிடங்கில் வெளிநாடுகளுக்கு துணிகள் வடிவமைக்கும் பணியும், பேக்கிங் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் சோதனையில் ரூ.71 கோடி மதிப்பிலான 3 வகையான போதைப் பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அதிமுக அம்மா பிரிவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தினகரனுக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, உள்பட 34 பேர், இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் சென்று சந்தித்தனர். அப்போது, வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு எல்லோரும் ஒருமித்து வாக்களிக்கலாம் என்றும், தினகரன் கட்சிப்பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்; கட்சியை தினகரன் கவனித்துக்கொள்வார் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முதல்வர் தரப்பின் பதில் என்ன என்பது வெளியிடப்படவில்லை.
சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தின்போது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அறிக்கை அளிக்க, ஐஐடி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடையை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் சார்பில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. அப்போது, விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சூரஜ் என்பவர் மீது மாணவர் அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரியும், ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. சுமுக நிலைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.