Categories
இந்தியா உணவுப்பொருள்கள் ஜி.எஸ்.டி. தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி.யின் தாக்கம் : ஹோட்டல் உணவுப் பொருள்கள் மற்றும் சினிமா கட்டணங்கள் விலை உயர்ந்தன

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி.யினால் ஹோட்டல்களில் விற்பனையாகும் உணவுப்புருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குளிர்சாதன வசதியுடைய ஹோட்டல்களில் 18% சேவை வரியும் இல்லாத ஹொட்டல்களில் 12 % சேவை வரியும் விதிக்கப்படுவதால், இட்லி உள்ளிட்ட அனைத்து விதமான உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ரூ. 5 -க்கு விற்கப்பட்ட இட்லி தற்போது ரூ. 22 வரை விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

இதுபோல, தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுகின்றது. ரூ. 100-க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், ரூ.100 -க்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்யும் தியேட்டர்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது. தியேட்டர் கட்டணங்கள் மீது விதிக்கப்படும் வரியும் பொதுமக்களை பாதிப்பதோடு அல்லாமல் சினிமா துறையையும் பாதிக்கும்.  ஏனென்றால் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் விலையும் உயருகிறது. வெளியில் இருந்து கொண்டு வரும் பொருள்களுக்கு தியேட்டர்களில் அனுமதியில்லாததால், இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவையெல்லாம் திருட்டு விசிடி அதிகரிக்கவும் ஆன்லைனில் படம் பார்ப்பதை அதிகரிக்கவுமே வழி வகுக்கிறது.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

குட்கா லஞ்சம் விவகாரம்: தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், வருமான வரித்துறை அனுப்பி வைத்த ஆவணங்களை கேட்டு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டதும், இதற்காக ஒரு அமைச்சர், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்யப்பட்டது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குட்கா விவகாரத்தில் அளிக்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக வருமான வரித்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அனுப்பி வைத்ததாக கூறப்படும் ஆவணங்கள் மற்றும் அறிக்கையின் நகலை கேட்டு தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆவணங்களில் குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் குறித்த விவரங்கள் அடங்கி இருப்பதால், அவற்றை ஆய்வு செய்து அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தும் நோக்கில், உள்துறை அமைச்சகம் அந்த ஆவணங்களை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Share
Categories
ஜி.எஸ்.டி. தமிழகம் தலைப்புச் செய்திகள் ஸ்டாலின்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. : வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு; பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பு என்கிறார் ஸ்டாலின்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் கடையடைப்பில் ஈடுபடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஒரே நாடு ஒரே வரி” என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அ.தி.மு.க. அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற ஜூலை 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

தமிழகம் ஏற்கனவே வறட்சியில் வாடிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிவிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வங்கி சேவைகளும், சிறு குறு வர்த்தக நிறுவனங்களும் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பி வரவில்லை. மாநிலத்தின் நிதி நிர்வாகம் நிலை குலைந்து விட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையே சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவ்வளவு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அ.தி.மு.க. அரசு முழுப்பொறுப்பேற்பது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கன்னியாகுமரியில் நடைபெற்ற வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். “மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நள்ளிரவில் அமலுக்கு வரும் இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு கொடி ஏற்றப்படும். ஒவ்வொரு கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.

 

Share
Categories
இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள்

மாடுகள் விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை நீடிப்பு

மாடுகள் இறைச்சிக்காக விற்பனைக்குத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரையிலுள்ள உயர்நீதிமன்ற கிளை தடை நீட்டிப்பு செய்தது.

சென்றமாதம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :

கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இதுபோலவே மதுரையைச் சேர்ந்த ஆசிக் இலாகி பாவா என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்திருந்தனர்.  தற்போது,  மீண்டும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல்

பாலில் ரசாயனங்கள் கலந்து உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில், அதிகாரபூர்வ இல்லத்தில், அமைச்சர் KT.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :

“நான் எல்லா தனியார் நிறுவன பாலையும் குற்றம்சாட்டவில்லை. பால் கலப்படம் குறித்து நான் கூறியதை சிலர் கேலி செய்து வருகின்றனர். என் புகாருக்கு பின்னர் பாலில் கலப்படம் செய்வது குறைந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக சில தனியார் நிறுவன பால் பவுடர்களில் ப்ளீச்சிங் பவுடர், காஸ்டிக் சோடா கலந்துள்ளது ஆய்வக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ரசாயனங்கள் கலந்த பாலை குடிப்பதால் பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றது. மக்கள் இதை புரிந்து நல்ல பாலை வாங்கி பருகவேண்டும். கலப்பட பாலை தடை செய்யவும் அண்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுவேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் : எடப்பாடி – தினகரன் கோஷ்டிகளிடையே பனிபோர்

அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோரின் கோஷ்டிகளிடையே பனிபோர் உச்சநிலையை அடைந்து உள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

சிறையில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.

கட்சி யார் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதில்  தினகரன்-எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.

‘சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் வேகப்படுத்த முதல்வர் விரும்பவில்லை. ‘அந்தக் குடும்பத்துடன் இணக்கம் காட்டினால், நமக்குத்தான் இழப்பு’ என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று எடப்பாடி கோஷ்டியினர் கூறுகின்றனர். நேற்று பேசிய எம்.பி கோ.அரி, ‘சசிகலா ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தோம் என தம்பிதுரை கூறுவதை ஏற்க முடியாது. அது அவருடைய சொந்தக் கருத்து. தமிழகத்தில் கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்’ என்றார். இதற்குப் பதிலடியாக எம்.எல்.ஏ. வெற்றிவேல், ‘இன்னும் எத்தனை காலம், எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. நரசிம்மராவ் அமைதியாக இருந்ததால்தான், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் இந்திரா காந்தி குடும்பம் வந்துதான், கட்சியைக் காப்பாற்றியது. அதைப்போன்ற நிலை அ.தி.மு.கவுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், தான்தோன்றித்தனமாக பேசுகின்றவர்களை முதல்வர் தடுக்க வேண்டும். இப்போதும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது’ என்றார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை.”, என்றவாறு தனித்தனி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

 

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்க ரூ. 40 கோடி லஞ்சம் : வருமான வரித்துறை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா என்ற போதைப் பொருளை விற்க, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிகாரிகளுக்கும்  ரூ. 40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் போதைப் பொருட்கள் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் பற்றி விசாரிக்க  வலியுறுத்தி உள்ளார். லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்த உண்மை குறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலை மூடி மறைக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.”

மேலும் அவரது அறிக்கையில், “ஜனநாயகம் எனப்படுவது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாகும். ஆனால், தமிழகத்திலோ ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஊழல் குற்றவாளிகளுக்கும், அவர்களை பாதுகாத்த ஆட்சியாளர்களுக்கும் மக்கள் தண்டனை அளிப்பர்”  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் தேமுதிக

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுக ஆட்சி கவிழும் : பிரேமலதா

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி  பிரேமலதா, தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கு பெற்றுப் பேசும்போது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : “கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து போட்டியிட்டோம். மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் தோற்றுப் போனோம். ஆனால், இந்த தோல்வி என்பது மிகவும் தற்காலிகமானது. அதே போன்று தேர்தலில் தோல்வி அடைவது என்பது சகஜமானது. அடுத்து வரும் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”, என்றார்.

மேலும் அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மோடி எந்த சாதனையையும் இந்தியாவில் நிகழ்த்தவில்லை”, என்றும் கூறினார்.

Share
Categories
இந்தியா செயற்கை கோள் தமிழகம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ தயாரித்த மாணவருக்கு முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி

கையடக்க செயற்கைக்கோள் ‘கலாம் சாட்’ – ஐ தயாரித்த மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினார்.

64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதுமான, இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவாக, ‘கலாம் சாட்’ என, பெயரிடப்பட்டது. இக்கையடக்க செயற்கைக்கோள் அமெரிக்காவில் உள்ள, ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, ஜூன் 22-ம் தேதி வெற்றிகராக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடிதந்த  மாணவர் ரிபாத் ராஜுக்கு சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், தமிழக முதல்வரின் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Share
Categories
கோயம்புத்தூர் தமிழகம்

கோவை தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) சேவை வரும் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது என கூறப்படுகிறது. அவசர சிகிச்சை, நோயாளியின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் அடங்கியுள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எடுத்துச் செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்பட உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திடமிருந்து இரண்டாண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மணிக்கு 240 கிலோ மீட்டர் வரை செல்ல கூடும் என மருத்துவமனை இயக்குனர் ராஜசேகரன் கூறினார்.

Share