Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்: எடப்படி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை சிறைவிடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரினர்.  இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “மதிப்பிற்குரிய பேரறிவாளனை பரோலில் அனுப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், 10 ஆண்டுகளை சிறையில் கழித்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

பேரறிவாளனுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று உள்பட பல உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் கோரிவருகிறார்.

ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

Share
Categories
இலங்கை எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துவந்த தமிழக மீனவர்களை இலங்கையின் புதிய சட்டம் வெகுவாக பாதிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீனவர் எல்லை தாண்டுவதாக கூறப்படும் பிரச்சனைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர், மாறாக அபராதம், சிறை தண்டனை போன்ற வாழ்வாதாரத்தையே வெகுவாக பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்ற இலங்கையை அனுமதிக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு

தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

காளைகள் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஜல்லிக்கட்டில் மிருகவதை இருப்பதாகவும் கூறி பீட்டா, தமிழர்களின் வீரவீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறாதவாறு உச்சநீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைப்பெறவில்லை.

தமிழக இளைஞர்களால், இந்த போட்டி நடத்தப்பட வேண்டும், தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும் என அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், மதுரையின் தமுக்கம், சென்னையில் மெரினா என தமிழகம் முழுவதும் பரவி உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு  வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழக சட்டசபையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.  தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மிருக வதை நடந்ததாகவும், விதிமீறல் இருந்ததாகவும் கூறி, தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது  மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ வீரவிளையாட்டு கழகத்தை சேர்ந்த ராஜேஷ் இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் தடை

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 5 ஏக்கருக்கும் அதிகமாக வைத்துள்ள  விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், 3 மாதங்களில் அரசாணை வெளியிடவும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதின்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  மேலும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் தள்ளுபடி கோரப்பட்டது என்பது குறித்து அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் ஸ்டாலின்

கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும் : ஸ்டாலின்

கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் உடனே வெளியேற வேண்டும்; ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் அமைத்தது. இதில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் புதிய குழாய் களை பதிக்கும் பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கதிராமங்கலம், கொடியாலம் பகுதியில் எண்ணெய் குழாய் உடைந்து, கச்சா எண்ணெய் வெளியேறியது.

இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் தீ வைக்கப்பட்டதால் போராட்டம் மேலும் வலுத்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தை தனி தீவு போல் துண்டாக்கி அங்கு வாழும் மக்கள் மீதும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அராஜகமாக கைது செய்திருப்பதற்கும், அக்கிராமத்தையே போர் பகுதி போல் அறிவித்து ஆயிரக்கணக்கில் போலீஸாரை குவித்து வைத்திருப்பதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திடீரென ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாய்கள் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு மக்கள் கொதித்து எழுந்ததை “காவல்துறை” கொண்டு அடக்க நினைப்பது ஆளுகின்ற அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை காட்டுகிறது.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து

இன்று முதல் தியேட்டர்கள் காலவரையின்றி மூடப்படுவதால்,  சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் மொத்தமாக 58% ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்க வேண்டியிருப்பதால், டிக்கெட் விலை வெகுவாக உயரும் நிலை உள்ளது.  இவற்றுடன் தியேட்டரில் விற்கும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும். இவையெல்லாம் சேர்ந்து, தியேட்டருக்கு சினிமா பார்க்கச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, திருட்டு விடியோ, ஆன்லைன் விடியோ பைரசி ஆகியவை அதிகரிக்கும் நிலை உள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், இப்போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களை மூட முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தமிழகம் முழுவதும் 1,000 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

Share
Categories
தமிழகம் வேலூர் சிறை

வேலூர் ஜெயிலில் நளினியும் முருகனும் தடைக்குப் பின்னர் மீண்டும் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை கோர்ட்டு உத்தரவுப்படி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து அரை மணி நேரம் பேசி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி முருகன் அடைக்கப்பட்டிருந்த ஜெயில் அறையில் இருந்து 2 செல்போன், 3 சிம்கார்டுகள், ஒரு சார்ஜர் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் கோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து சில நாட்களில் முருகன் தனது மனைவி நளினி மற்றும் பார்வையாளர்களை சந்தித்து பேச தடைவிதித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. முகமது ஹனிபா உத்தரவிட்டார். அதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் நளினி-முருகன் சந்திப்பு நடைபெறவில்லை. இதற்கிடையே முருகனை சந்திக்க இலங்கையில் இருந்து வந்த அவரது தாயார் சோமணி வெற்றிவேல் பலமுறை முயன்றும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி., முருகனுக்கு விதித்த 3 மாத தடை உத்தரவு நீங்கியது.

இதையடுத்து 3 மாதங்களுக்கு பின்னர், பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை நேற்று முருகன் சந்தித்தார். காலை 7.50 மணியளவில் முருகன் மனைவி நளினியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ½ மணி நேரம் நடந்தது. தொடர்ந்து 8.20 மணிக்கு முருகன் ஆண்கள் ஜெயிலுக்கு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில், போலீசார் அழைத்து சென்று அடைத்தனர்.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா : டி. ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும்  டைரக்டருமான டி. ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா என வினவியுள்ளார். சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்   அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி என வினவினார். சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் தான் முரண்படுவதாக கூறியுள்ளார்.

Share
Categories
சினிமா ஜி.எஸ்.டி. தமிழகம் தமிழ் சினிமா தலைப்புச் செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா கடுமையாக பாதிக்கப்படும்: நடிகர் விஷால்

ஜி.எஸ்.டி. வரியால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு சேவை வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி) முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. சினிமா துறைக்கு ரூ.28 சதவீத வரி விதிக்கப்பட்டு ஒட்டு மொத்த திரைப்படத்துறையினர் எதிர்ப்பால் 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீத வரி என்றும் அதற்கும் அதிகமான தொகையை வசூலிக்கும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத வரி என்றும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் திரையுலகினர் ஏற்காமல் பிராந்திய மொழி படங்களுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைசி முயற்சியாக மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசனும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களின் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள திரைப்பட தணிக்கை துறை அதிகாரி மதியழகனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

காலதாமதமின்றி படங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ‘ஏ’ சான்றிதழ் பெறும் படங்கள் மறு தணிக்கை செல்வதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், சிறுபட்ஜெட் படங்களை டி.வி.டியில் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

தணிக்கை அதிகாரியை சந்தித்து விட்டு வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழ் திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இது சினிமா தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

 

 

Share
Categories
இந்தியா எடப்பாடி பழனிசாமி தமிழகம்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் ஆதரவு சேகரித்தார்

பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளவர் ராம்நாத் கோவிந்த்.  இவர் தேர்தலில் தனக்கு ஆதரவு தர கோரி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்.

அங்கு தன்னை சந்தித்த புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.யிடம் ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.  அதன்பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஓ. பன்னீர் செல்வம் நிருபர்களீடம்  கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஒருமனதாக உறுதி அளித்துள்ளோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது உறுதி. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தைதான் ஆதரித்திருப்பார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, என்னிடம் ஆதரவு கேட்டது ஜெயலலிதாவின் தொண்டனுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன்  என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share