Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா தலைப்புச் செய்திகள்

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார்.

ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரூபா அளித்திருந்த அறிக்கையில்,  சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்திருந்தார்.

டி.ஐ.ஜி. சத்தியநாராயணராவ் மாத இறுதியில் ஓய்வு பெறப்போவதால் தற்போது நிர்வாகப் பொறுப்பு எதுவும் இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன்முன்பு  ஊழல் தடுப்பு ஆணையராக இருந்த என்.எஸ். மேகரிக் தற்போது கூடுதல் சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத  காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக  விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின்  வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி  நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Share
Categories
இலங்கை தமிழகம்

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் படகுகளையும், மீனவர்களையும் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்செல்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த சில நாட்களில் 60 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 161 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை மட்டும் விடுவிப்பதில்லை.

இந்நிலையில், எல்லைதாண்டி வரும் படகுகளுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளில் 42 படகுகளை முதல்கட்டமாக விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை கடிதங்கள், ஊர்க்காவல்துறை, புத்தளம், திரிகோணமலை, மன்னார் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உடனடியாக 27 படகுகளை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள 15 படகுகள் நாளை(திங்கட்கிழமை) விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறும்போது, “இலங்கை அரசு 42 படகுகளை விடுவிக்க நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து திங்கட்கிழமை தான் முழுமையான தகவல் கிடைக்கும். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் ஓரிரு நாட்களில் அந்த படகுகள் தமிழகம் வந்துசேரும். சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்” என்றார்.

Share
Categories
தமிழகம் பா.ம.க.

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு யோசனையாக பா.ம.க. இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.


மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 95 கோடி லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 7 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது படுதோல்வி ஆகும்.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்கு தான். அவர்களின் தவறுக்காக அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவை வலுவாக இருப்பதால், அவரை வழக்கு விசாரணைக்கு உள்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம், குற்றப்பத்திரிகையில் அதிமுக  (அம்மா) துணைப்பொதுச் செயலாளர் தினகரன், மல்லிகார்ஜுனா, நாது சிங், லலித் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இதற்கான விளக்கமும் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ளது.

இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்சய் செராவத் கூறுகையில், தற்போது சுகேஷ் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் மீதான குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

ஜாமீனில் இருக்க கூடிய தினகரன் உள்ளிட்ட எஞ்சிய குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த விசாரணை முடிந்து விரைவில் தினகரன் உள்ளிட்டோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சஞ்சய் செராவத் கூறியுள்ளார்.

 

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர்

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.   அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஞ்சிய 15 சதவீத இடங்களில் மட்டுமே மத்திய அரசு பாடத்திட்டம் மற்றும் பிற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனால், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, 85% இடஒதுக்கீட்டு அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கல்யாணசுந்தரம், 85% இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தார்.

இது பற்றி  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் மூலம் திறமையாக வாதம் செய்யப்பட்டது. இதை அரசும் கண்காணித்தது.
தற்போது உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நமது உரிமை நிலை நாட்டப்படும்.” என்று கூறினார்.

 

Share
Categories
சென்னை தமிழகம் தலைப்புச் செய்திகள் தேனாம்பேட்டை

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் மீது நேற்று அதிகாலை 4.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். காவல்நிலைய பெயர்ப்பலகையின் மீது பட்டு, நுழைவாயிலில் விழுந்த குண்டு, அங்கேயே தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

போலிஸ் ஸ்டேஷன் அருகில் அரசியல் கட்சி பேனர் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூறிய பிறகே, உள்ளே இருந்த காவலர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலிசார், கட்டுப்பாட்டு அறைக்கும் ரோந்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் தப்பி விட்டனர். தகவலறிந்து, போலிஸ் கமிஷனர்  விஸ்வநாதன் தேனாம்பேட்டை ஸ்டேஷனுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலிஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மட்டும் 5 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

அவற்றின் காட்சிகளை ஆய்வு செய்ய சொன்ன அதிகாரிகள், அவற்றில் ஒரு கேமரா கூட இயங்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நந்தனத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே தேனாம்பேட்டை காவல் நிலைய கண்காணிப்புக் கேமராக்களை தனியார் ஒருவரிடம் கொடுத்து பழுது நீக்கச் சொன்னபோது, அதில் குண்டு வீசிய குற்றவாளியின் முகம் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றிய தகவல் தருமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் என புகார்; டிஜிபி மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா  பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  சிறைத்துறை அதிகாரிகள் இதனை  மறுத்துள்ளனர்.

கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக பதவியேற்ற டி.ஐ.ஜி. ரூபா பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். ரூபா அளித்து உள்ள அறிக்கையில், சோதனையின் போது சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும்,  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் அறிக்கை சமர்பித்த நிலையிலும் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டுவது அடிப்படையற்றது என டிஜிபி சத்தியநாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் நெல்லை

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உடனே மூடப்பட வேண்டும் : நீதிமன்ற ஆணை

நெல்லை சரவணா செல்வரத்தினம்  ஸ்டோர் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், அது உடனே மூடப்பட வேண்டும் என நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது.

நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் சரத் இனிகோ என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.

 

 

Share
Categories
ஆரோக்கியம் தமிழகம் மருத்துவ ஆய்வு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது.

2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெட்றாபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறிவருகிறார். பாதிக்கப்பட்டவரின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Share