Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர்

கமல்ஹாசனைக் கண்டித்து அ.தி.மு.க.வின் நமது எம்ஜிஆர் நாளேடு கவிதை

சமீப காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆர், இன்று திடீரென பழைய ஞாபகம் திரும்பியதைப்போல, கமல்ஹாசன் மீது கண்டனச் செய்தி விளியிட்டுள்ளது.

 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

“வில்லன்
வழி சொல்லத்
தெரியாதவனுக்கு
பழி சொல்ல மட்டுமே
தெரியும் என்பார்கள்!
இதற்கு மெத்தப்
பொருத்தமாகிறார்
‘மொத்தமும் வில்லன்!’

ஏழைக்குப் பயன்படாத
இந்த குரோட்டன்ஸ் செடி
எளியோருக்குப்பயன்படும்
கீரையைப் பார்த்து
பழிக்கிறது!

‘உன்னால் முடியும் தம்பி’
என்று இவர் உதட்டளவில்
வாயசைத்துப்பாடியதை,
இளையோர் கரத்தில்
மடிக்கணினி கொடுத்து
உலகை உள்ளங்கைக்குள்
உட்கார வைத்த
ஒப்பில்லா கழகத்தை
முப்பொழுதும்
தப்பென்று பழிக்கிறார்.

மஞ்சள் துண்டு தயவு
கூடவே,
ஒன்றே முக்கால்
லட்சம் கோடி
கொள்ளையர்க்கு
ஒத்தடமும் கொடுக்கிறார்.
மஞ்சள் துண்டின் தயவில்
மக்கள் திலகத்தின்
இயக்கத்தை
வன்மத்து வார்த்தைகளால்
வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்-
புரட்சித்தலைவியின்
புகழ்மனத்து இயக்கத்தை
புண்படுத்தி
மு.க.வை மகிழ்விக்க
முன்னோட்டம்
பார்க்கிறார்.
ஓடுவேன் என்றார்
ஒரு படம் ஓடாவிட்டாலே
ஓடுவேன் நாட்டைவிட்டு
என்ற
இந்த ஒப்பாரித் திலகம்
குகையில் சிம்மம் இல்லை
என்றதும் ஒத்தைக்கு ஒத்தை
வர்றியா என்பதாக
ஊளையெல்லாம்
இடுகிறார்.
காவி மீது பாசம்
கருப்புச் சட்டை
போட்டுக்கிட்டு
சாதிக்கு ஆலவட்டம்
வீசுகிற சாடிஸ்ட் கோஷம்
தூய்மை இந்தியா
திட்டத்தை
தொடங்கிவைத்து
காவி மீதும் பாசம்.

காவேரி,
முல்லைப் பெரியாறு,
மீத்தேன், கெயில்,
நெடுவாசல், ‘நீட்…’
என்றெனும்
தமிழர்தம்
உரிமை என்றால் மட்டும்
மன்மத வம்பன்
போடுவதோ
மவுன விரத வேஷம்.
உலக்கை நாயகன்
இந்த உலக்கை நாயகனின்
விமர்சன எல்லையெல்லாம்
கழகத்தைப் பழிக்கிற
ஓரம்ச திட்டம் மட்டும்
என்றால்
அதனை உலகம் சுற்றும்
வாலிபனின் இயக்கம்
ஓட ஓட விரட்டும்”. -இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மையே : புது அதிகாரிகள்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவுக்கு  சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று, புதிதாக அங்கு பதவியேற்றுள்ள  சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.


சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். இதற்காக 2 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் புகார் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணா மற்றும் டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடைபெற்றது. சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் நேரில் ஆஜராகினர். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். டி.வி., சிறப்பு சமையலறை, சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருக்க அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஏழு மற்றும் எட்டாவது வளாகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் செயல்படவில்லை என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன்மூலம், டிஐஜி ருபா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது அம்பலமாகி உள்ளது.

Share
Categories
அன்புமணி ராமதாஸ் இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள் நீட் மருத்துவ தேர்வு பா.ம.க.

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராஜ்நாத்சிங்கிடம் மனு

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரி டாக்டர். அன்புமணி ராமதாஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு மசோதா 6 நாட்களில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு தொடர்பான மசோதா 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். இது தொடர்பாக பேச பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரம் கோரி இருக்கிறேன்.

நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பதிவு செய்வோம் என்று தமிழக அரசு கூறியிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கட்சிகள் தங்கள் சுயநலத்தை பார்ப்பதால் அருமையான வாய்ப்பை தமிழகம் தவற விட்டு விட்டது.

மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக நான் இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. சென்னை சேப்பாக்கத்தில் நாளை  நீட் தேர்வு தொடர்பாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. கமல்ஹாசன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்

நேற்று கவிதை மூலம் மறைமுகமாக அரசியலில் வரப்போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் தனது முதலாவது அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், முன்பு தன்னைத் தாக்கிப் பேசிய அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.

கிண்டல் பெயர்  யாரைக் குறிக்கிறது   ஏன்
தம்பி அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கமலை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்றார். ஆகவே, உன்னைவிட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதற்காக “தம்பி”யானார் ஜெயக்குமார்
எலும்பு வல்லுனர் எச். ராஜா கமலை எச்.ராஜா முதுகெலும்பில்லாதவர் என்று சொன்னதால், “எச். ராஜா பெரிய எலும்பு வல்லுனரோ?” என்று நக்கல் செய்துள்ளார்
கல்லுளிமங்கர் என்ற ஊழலார் தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் ஊழலை எல்லோருக்கும் தெரியுமாறு பல ஆதாரங்களுடன் ஊடகங்களில் வெளியான பின்பும் ஆதாரம் இல்லை என கல்லுளிமங்கர்கள் போல அமைச்சர்கள் சொல்வதால் இப்பெயர் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Share
Categories
அ.தி.மு.க. இந்தியா கர்நாடகா சசிகலா டி.டி.வி. தினகரன் டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள்

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது.

அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சசிகலா தரப்பிலிருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி  பணப் பரிமாற்றம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறை துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த ஏற்பாடுகளை மத்திய அரசு ரகசியமாக செய்ததாகவும் தெரிகிறது.  அதன்பின், சசிகலா சிக்குவதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம் தான் காரணமாக அமைந்ததாகவும் தெரிகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், டி.டி.வி. தினகரனின் நண்பரான, பெங்களூரைச் சார்ந்த மல்லிகார்ஜுனா என்பவரை விசாரித்து, அவரது செல்போனை ஆய்வு செய்த போது முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாசுடன் அவர் பல தடவை பேசி இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து பிரகாஷை விசாரிக்கையில், தினகரன் மூலம் பெங்களூர் சிறை துறை அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த வி‌ஷயத்தில் சசிகலாவை குறி வைத்து, மத்திய அரசின் ஏஜண்டுகள், கைதிகளைப் பயன்படுத்தி, வீடியோ காட்சிகளை  திட்டமிட்டு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் ஆதாரமாக மாறி உள்ளன.  அதன் பின்னரே, அதிரடி நடவடிக்கைகள் மூலம் சசிகலா பெற்று வரும் சலுகைகள் அம்பலப்படுத்தப்பட்டது.

 

Share
Categories
கமல்ஹாசன் சினிமா தமிழகம் தலைப்புச் செய்திகள்

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள்  பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின.

தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில்  இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கவிதை புரியாதவர்களுக்கு நாளை ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
கோயம்புத்தூர் தமிழகம் தலைப்புச் செய்திகள்

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர்.  இவர்  இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்.

அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்‌ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடடிக்கை எடுத்திருப்பதை கண்டித்துள்ளார். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என அவர் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக அரசு மத்தி‌ய அரசின் நிர்பந்தங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பயங்கரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

 

Share
Categories
அதிமுக ஜெயலலிதா தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர்  டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி அம்மா  அணியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அதோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால், அதனை தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும்போது யாருடைய தலையீடும் இல்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மிகவும் வெளிப்படையாகத் தான் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விவகாரத்தை பேச அனுமதிக்க வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Share
Categories
இந்தியா குடியரசு தலைவர் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். 6 வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.

ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலையிலேயே தலைமை செயலகத்துக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கெல்லாம் கோட்டைக்கு வந்திருந்தனர்.

ஓட்டுப்பதிவு தொடங்கியதும் எம்.எல்.ஏ.க் கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை, உடல்   நலக்குறைவு காரணமாக வாக்களிக்க வர இயலாத நிலையில் உள்ளார்.

எனவே 232 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கேரள மாநில எம்.எல்.ஏ. அப்துல்லா ஆகியோரும் சென்னையில் வாக்களித்தனர். இதனால் சென்னை கோட்டையில் 233 எம்.எல்.ஏ.க்களும், ஒரு எம்.பி.யும் வாக்களித்துள்ளனர்.

Share