Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி சசிகலா டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவை தினகரன் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்பு சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்றால், அரை மணி நேரத்தில் பார்க்க முடியும். இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. சிறையில் எல்லோருக்கும் அளிக்கப்படும் உணவே அவருக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு பழங்கள் மட்டுமே வாங்கிச்சென்றேன். சசிகலா மீது புகார் கூறியது தொடர்பாக டிஐஜி ரூபா மீது நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

சிறையில்  சந்தித்துப் பேசுகையில் சசிகலா, தினகரனிடம் எடப்பாடி பழனிசாமி அணியிடமும், ஓ.பி.எஸ். அணியிடமும் சமரசமாகப் பேசி முடிவு எடுக்க ஆலோசனை கூறியதாகவும், ஆக. 5-ல் தலைமைக்கழகத்தில் நுழைவதைக் குறித்து யோசித்து செயல்படவும் அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. சசிகலா தரப்பின் நிலைமை தற்போது சரியில்லாததால், தினகரன் நிதானமாக முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமது ஆதரவை பெருக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

Share
Categories
இந்தியா ஐகோர்ட் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-க்குள் முடிவு செய்ய கெடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு  கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.  தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் பிறகு  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேறு எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை. எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்றும் முடிவு செய்யவில்லை.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐக்கோர்ட் நீதிபதிகள், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்” என்று  உத்தரவிட்டுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு  நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி  தினகரனுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இத்தொகுதில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று  பகிரங்கமாக கூறி தேர்தல் ஆணையம் தோ்தலை நிறுத்தியது.

இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல் குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, 5 கோடி ரூபாய் பணமும், பல்வேறு ஆவணங்களும்  கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சோதனையின் போது தோ்தல் தொடா்பாக யாா் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது தொடா்பான முக்கிய ஆவணங்கள் சிக்கிதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், இதன் தொடர் நடவடிக்கையாக வருமான வரித்துறையிடம் இருந்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் வந்துள்ளது. அதில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் கல் குவாரியை முடக்க அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் காமராஜ் விளக்கம்

அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும்  கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவிநியோக திட்டத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை என தெரிவித்தார். விலையில்லா அரிசி திட்டம், பொது விநியோகத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறினார்.

“நீட்” தேர்வை மத்திய அரசு கட்டாயம் ஆக்கிய நேரத்தில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப் படும் என்று தமிழக அரசு கூறிவந்தது. எனினும் தமிழக மாணவர்கள் அதனை எழுத வேண்டியிருந்தது. பின்னர் 85% தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தும் அதனை செயல் படுத்த முடியாமல் போனது. இதுபோல ரேஷன் பொருள்கள் விஷயத்திலும் நடைபெறுமோ என்று நடுத்தர மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

அ.தி.மு.க. கட்சியைக் கைப்பற்ற தினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை

அ.தி.மு.க  அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் தினகரன் ஆக.5 முதல் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும்  கூறியிருந்தார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தினகரன்  5-ந்தேதி அன்று   வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தாம் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   அன்று மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் தினகரன் தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில் , “கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்” என்று  கூறியிருக்கிறார்.  திவாகரனும் தினகரனும் இனி இணைந்து செயல்படப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து, சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் எடப்பாடியின் அலுவலகம்.

Share
Categories
இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள்

அப்துல்கலாம் சிலை அருகே பைபிள், குரான் அகற்றப்பட்டன

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி கடந்த 27ல் திறந்துவைத்தார். அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டதுடன், அதனருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது.  சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரங்களினால்,  அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், பகவத் கீதைக்கு அருகில் குரான் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களையும் வைத்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை கலாமின் அண்ணன் பேரன் சலீம் அகற்றி அங்கிருந்த கண்ணாடிபேழைக்குள் வைத்தார்.

மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்த போது திடீரென காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Share
Categories
அ.தி.மு.க. உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார்.

அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அடுத்தவாரம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைப்புச் செய்திகள் திமுக ஸ்டாலின்

நீட் தேர்வு: திமுக போராட்டம் நடத்த ஐக்கோர்ட் அனுமதி; தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனிடையில் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில்  22 இடங்களில் போலீஸ் தடையை மீறி தி.மு.க.வினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது 10 போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி சட்டவிரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், ”

மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து கைது செய்துள்ளனர். ஆனால், அவர் தூர்வாரப்பட்ட ஏரியை முதலில் பார்வையிட இருந்தார். பின்னர் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இருந்தார். அமைதியான முறையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த போலீசார் ஏன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்? என்பது எங்களுக்கு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். தி.மு.க.வின் மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவின் மீதான விசாரணையை அடுத்து, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு ஆகஸ்டு 17-ந்தேதி வரை இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

Share
Categories
இந்தியா கர்நாடகா சசிகலா தமிழகம் தலைப்புச் செய்திகள்

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை,  டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது.

இதனிடையே, டிஐஜி ரூபா, வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டிஐஜி ரூபாவிற்கு சத்யநாராயணராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சத்யநாராயணராவின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில், ஆதாரமின்றி, ரூபா குற்றம் சாட்டியுள்ளதாகவும், சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை ஏற்பாடு செய்து கொடுத்ததாக, கூறியுள்ள ரூபா, அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து, 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், 50 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து  2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்’ எனப்படும், தோற்ற பாடத்தை பின்வரும் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து எழுதும் முறை ஒழிக்கப்பட்டு, புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து கல்விக்குழு டீன் டி.வி.கீதா  கூறியதாவது:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தற்போதைய கிரேடு முறையில் பின்வரும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது:

‘0’ = மிகச்சிறப்பு = 10 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை.
‘ஏ+’ = சிறப்பு = 9 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை.
‘ஏ’ = மிகவும் நல்லது = 8 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை.
‘பி+’ = நல்லது = 7 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை.
‘பி’ = சராசரி நிலை = 6 கிரேடு புள்ளிகள் = மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை.
50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.
இனி ‘அரியர்ஸ்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய ‘இன்டர்னல்’ மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான ‘இன்டர்னல்’ தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய ‘இன்டர்னல்’, பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் ‘அரியர்ஸ்’ என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.
இவ்வாறு கல்விக்குழு டீன் டி.வி.கீதா கூறினார்.

 

Share