Categories
அ.தி.மு.க. சசிகலா தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு

(தினத்தந்தி)

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறுஆய்வு மனு

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.

அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரங்கள்

இது சம்பந்தமாக ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகள் குறித்த விவரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா தமிழகம்

கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது.

காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.

பங்களாவுக்குள் புகுந்த கும்பல், ஜெயலலிதா தங்கும் அறையை குறி வைத்து உடைத்து பொருட்களை அள்ளிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கடந்த 28-ந்தேதி நடந்த விபத்தில் பலியானார். அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில், அதே தினத்தன்று மற்றொரு குற்றவாளியான சயன் என்பவனும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு குற்றவாளிகளைத் தவிர மற்ற 9 பேரும் போலீசாரிடம் பிடிபட்டு விட்டனர்.

கொடநாடு எஸ்டேட்டில் இந்த 11 பேர் கும்பல் என்னென்ன எடுத்துச் சென்றது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்தபடி உள்ளது. ஜெயலலிதாவின் அறையில் இருந்த 3 சூட்கேசுகள் உடைக்கப்பட்டு, அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த பணம், தங்க – வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த 3 சூட்கேஸ்களில் இருந்த சொத்து ஆவணங்களையும் மர்ம கும்பல் அள்ளிச்சென்று விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் போலீசார் கூறுகையில், “ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மட்டுமே திருட்டு போய் விட்டது” என்றனர். ஆனால் அதையும் போலீசாரால் உறுதிபடுத்த இயலவில்லை.

கொலை – கொள்ளைக்கு கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் கேரளா போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும், தமிழக போலீசார் வெளியிடும் தகவல்களுக்கும் மிகுந்த முரண்பாடுகள் உள்ளது. இதனால் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் உண்மையில் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.

குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு விட்டதால், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளையில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளைக்கு திட்டமிட்டது கனகராஜ் ஆவார். அதை அரங்கேற்ற உதவி செய்தது மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையாகும்.

இதில் கனகராஜ் பின்னணியில் இருந்தது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அவர் விபத்தில் மர்மமாக உயிரிழந்து விட்டதால், அந்த ரகசியம் அவரோடு புதைந்து போனது. இதை கண்டுபிடித்தால்தான் கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது முழுமையாக தெரிய வரும்.

என்றாலும் பிடிபட்டுள்ள கூலிப்படையினரிடம் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மூலம், கொட நாடு எஸ்டேட்டில் இருந்து ரூ.200 கோடி வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்க, வைர நகைகளும் அள்ளிச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.

இதுபற்றி நீலகிரி மாவட்ட போலீசார், குற்றவாளிகளில் ஒருவனான சயனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சயன்தான் கனகராஜுக்கு மனோஜ் என்ற சாமியார் தலைமையிலான கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு கொலை, கொள்ளையை ஒருங்கிணைத்து நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

எனவே இவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவரிடம் போலீசார் ஜெயலலிதா எழுதி வைத்திருந்த “உயில்” பற்றி விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

Share
Categories
உயர் கல்வி ஐகோர்ட் தனியார் கல்லூரிகள் தமிழகம் மருத்துவம்

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு: ஐக்கோர்ட் ஆணை

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுக்கு 50% இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பட்டமேற்படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் சாரோன், காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வந்தார். இந்த வழக்கின வாதவிவாதங்கள் முடிந்த நிலையில் இறுதி உத்தரவை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று (செவாய்க்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். இவற்றை கலந்தாய்வு மூலமே ஒதுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ மாணவர்கள் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள இடஒதுக்கீடு பெற தவறியதற்காக தமிழக அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலும் தலா ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
Categories
கட்சிகள் காங்கிரஸ் தமிழகம் விவசாயிகள் போராட்டம்

அய்யாக்கண்ணுவை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் இனிமேல் எச்.ராஜா நடமாட முடியாது

பாஜகவின் ஹெச்.ராஜா கண்ணியமின்றி பேசுவதாகவும், இனி தொடர்ந்தால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜகவின் எச்.ராஜா நாவடக்கம் இன்றி பேசி வருவதாக குறிப்பிட்டார். பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசினார். சோனியா காந்தியைப் பற்றி கேவலமாக பேசினார். தற்போது தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவையும் அவதூறாக பேசியுள்ளதாக கூறினார்.

டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து போராடிய அய்யாக்கண்ணுவை பேசியது ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி கண்டனம் தெரிவித்தார். தலைவர்கள் குறித்து நாவடக்கம் இன்றி பேசினால், எச்.ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. இந்தியா டி.டி.வி. தினகரன் தமிழகம்

இரட்டை இலைக்கு லஞ்சம்: ஏஜெண்டு நரேசிடம் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது

இரட்டைஇலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.

டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்த விசாரணைக்கு பின் டி.டி.வி. தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ராஜாஜி பவனிலும், தினகரனின் அடையாறு இல்லத்திலும் வைத்து 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல் தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பரான மல்லிகார் ஜுனாவிடமும் போலீசார் ராஜாஜி பவனில் வைத்து விசாரித்தனர்.

சென்னையில் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை டி.டி.வி.தினகரனை பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தன்னுடன் தொடர் புடைய ஹவாலா ஏஜெண்டுகளின் விவரங்களை டெல்லி போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் டெல்லியில் நரேஷ் என்ற ஹவாலா ஏஜெண்டு கைது செய்யப்பட்டார். இவர் மூலமாகவே டி.டி.வி. தினகரனிடம் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு பணம் சென்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் நரேசின் டெல்லி வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.50 லட்சம் பணம் சிக்கியது. இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது.

இந்த பணம் சுகேஷ் சந்திரசேகருக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்ததாக நரேஷ் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு ஸ்டேட் வங்கியில் 5 கணக்குகள் உள்ளன.

இந்த கணக்குகளில் அவர் எவ்வளவு பணம் போட்டுள்ளார். யார்- யாருக்கு எப்போது பண பரிமாற்றம் செய்தார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

தினகரனின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாளை தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

தினகரனிடம் சென்னையில் வைத்து மீண்டும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவரை மறுபடியும் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தினகரனுக்கு மேலும் சில நாட்கள் காவல் நீடிப்பு கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Share
Categories
ஐகோர்ட் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டு தடை

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2015–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 20–ந்தேதி பிறப்பித்த உத்தரவில், மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்ட தலைநகரங்களிலும் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிராக வி.மேகநாதன் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சீமை கருவேல மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இந்த மரம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் இந்த மரம் அதிக அளவில் வளருகிறது. இந்த மரம், எரிபொருளாகவும், நிழல் தரும் மரமாகவும் திகழ்கிறது. மண்ணின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், காற்றின் வேகத்தை குறைப்பதற்கும் இந்த மரம் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில், இந்த மரத்தை விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தை வெட்டி விறகாக விற்பனை செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கருவேலம் மரம் வளர்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரம், வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. உலகத்துக்கு ஒரு பசுமை போர்வையாக இருந்து வருகிறது.

மேலும் அந்த மனுவில் கூற்ப்பட்டிருப்பதாவது:  கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு இருப்பது காடுகளை அழிப்பதற்கு சமமானது ஆகும்.

எனவே, தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும். அதை அகற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆய்வுசெய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். அதேநேரம், இந்த மனுவுக்கு வருகிற மே 11–ந்தேதிக்குள் ஐ.ஐ.டி. இயக்குனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை சீமை கருவேல மரங்களை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கக்கூடாது.

இந்த வழக்கு விசாரணையை வருகிற மே 11–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதா தமிழகம்

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார்.
கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் மூலம் உதவிய ஒருவரை கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள சாவக்காடு பகுதியில் போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவலாளி கொலை வழக்கில் இவருக்கும் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிகிறது.

Share
Categories
தமிழகம் மதுக்கடைகள்

மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் ஐகோர்ட்டு தடை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆணையர்களுக்கு 21-ந் தேதி நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘கழிவுநீர், குடிநீர் குழாய்களை சாலையோரம் அமைக்க பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் கால தாமதத்தையும், கூடுதல் செலவையும் தவிர்க்க, நகர் பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளை மாநகராட்சிகள், நகராட்சிகள் தங்கள் வசம் கொண்டுவர மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆணையர்கள் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார்.

தி.மு.க-பா.ம.க. வழக்கு

இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க.வை சேர்ந்த வக்கீல் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.

ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் இருக்கக்கூடாது என்று மார்ச் 31-ந் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல் இழக்கச்செய்யும் விதமாக, நகரப்பகுதியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சிகள், நகராட்சிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டவிரோதமானது.

இதன் மூலம் நெடுஞ்சாலைகளை எல்லாம், உள்ளாட்சி அமைப்புகளின் சாலை என்று அறிவித்து, அங்கு ஏற்கனவே இருந்த மதுபானக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

உத்தரவாதம் தர முடியுமா?

இதே கோரிக்கையுடன், பா.ம.க.வை சேர்ந்த கே.பாலுவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், என்.எல்.ராஜா ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது நீதிபதிகள், ‘நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வருவது குறித்து நாங்கள் தற்போது கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால், அப்படி உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த சாலைகளை கொண்டு வந்த பின்னர், ஏற்கனவே இருந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மீண்டும் திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சார்பில் நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா?’ என்று அட்வகேட் ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்கள்.

வேறு வழியில்லை

அதற்கு அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு நாளை (இன்று) தெரிவிப்பதாக கூறினார். இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அப்படி உத்தரவாதம் இப்போது அளிக்க முடியவில்லை என்றால், தடை உத்தரவு பிறப்பிப்பது தவிர வேறு வழியில்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது மூத்த வக்கீல் வில்சன் குறுக்கிட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் வசம் எடுத்துக்கொள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. தமிழக அரசு மீண்டும் டாஸ்மாக் கடைகளை பழைய இடங்களில் திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு உத்தரவை உள்நோக்கத்துடன் பிறப்பித்துள்ளது’ என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டு, ‘பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது, இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது. எனவே, நெடுஞ்சாலைகளை, மாநகராட்சிகள், நகராட்சிகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சட்டவிரோதம் இல்லை’ என்றார்.

தடை

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு நிர்வாக காரணங்களை கூறி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல் இழக்கச்செய்யும் விதமாக நிர்வாக ரீதியான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக மதுபான கடைகள் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிராக நிர்வாக உத்தரவு என்ற போர்வையில் தமிழக அரசு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.

அதனால், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக மதுபான கடைகளை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை 3 மாதங்களுக்கு, அல்லது இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலுவையில் இருக்கும். இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஜூலை 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

(நன்றி : தினத்தந்தி)

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம்

டி.டி.வி. தினகரனிடம் தொடரும் விசாரணை

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசரணை நடைபெறுகின்றது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என  டிடிவி தினகரன் டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Share
Categories
தமிழகம் முழு அடைப்பு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பாக முழு அடைப்பு நடைபெறுகின்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் பங்கேற்கின்றன.   இதற்கு தொழிற்சங்கங்களும் வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முக்கிய இடங்களில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

 

Share