Categories
கஸ்தூரி சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி : நடிகை கஸ்தூரி

“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி” என்று நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியல் வரபோவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு.
அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறித்து பதிவிட்ட்டுள்ளார். அதில் அவர் கூறியதவது:-
நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. மேலும் போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது என்று பதிவிட்டார்.
இதற்கு ரஜினி ரசிகர் பதில் ட்வீர் செய்துள்ளார். அதில், தலைவரை தாக்கி பிரபலமாவது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர் ரசிகை என்று உலற வேண்டாம். சன் டிவியில் பாபநாசம் ப்ரமோவில் தெரிந்தது நீங்கள் யார் ரசிகையென்று, என பதிவிட்டார்.
ரஜினி ரசிகரின் இந்த ட்வீட்டுக்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், என்ன லாஜிக் பா இது? ரஜினி கூடத்தான் கமலை பாராட்டுறாரு, அப்போ அவரையும் திட்டுவியா? நீ பிறப்பதற்கு முன்பிருந்தே நான் ரஜினி ரசிகை, என்று பதிவிட்டுள்ளார்.
Share
Categories
தஞ்சை தமிழகம் மாவட்டம் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் தஞ்சையில் 7-வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

 காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெட்டிப்பாயைத்தில் 7வது நாளாக ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்பு குழுவினர் கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-வது நாளான இன்று, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சை சாலியமங்கம் ரயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சாகுபடி கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மே 15 முதல் 21 வரை ஒரு வாரத்துக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் 4 இடங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பூதலூர் அருகே அய்யனாபுரத்தை அடுத்த விண்ணணூர்பட்டியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணிய ரசன் தலைமையில் திரைப்பட இயக்குநர் மு.கவுதமன், தமிழ்த் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகி யோர் தலைமையில் விவசாயி கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகளை ரயிலை மறித்தனர்.

Share
Categories
தமிழகம் தேர்வு முடிவுகள்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் : மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.

பிளஸ் 2 தேர்வைப் போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும் விருதுநகர் மாவட்டமே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 481 மதிப்பெண்ணுக்கு மேல் 38,613 பேர் பெற்றனர். 451-ல் இருந்து 480 வரைக்கும் 1,22,77 பேர் பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர்.

தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார்.

இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் மாணவர்களைவிட 3.7% அதிகம்.

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

நான் பச்சைத் தமிழன்தான் : ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கடந்த மே 15ஆம் தேதி முதல் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். முதல் நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார் ரஜினி. அதற்குப் பிறகு, இன்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் பேசினார் ரஜினிகாந்த்.

கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் தான், பச்சைத் தமிழன்தான் என்றும் தமக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த எதிர்ப்புகளின் மூலம் உதவிக்கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

“முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில், அரசியலுக்கு வருவது குறித்து நான் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகின. எதிர்ப்புகள் இருக்க வேண்டியதுதான். சமூக வலைதளங்களிலும் இது குறித்து கடுமையாகப் பேசினார்கள். அதில் எழுதியிருந்த வாசகங்களைப் பார்த்து நான் வருத்தப்படவில்லை. ஆனால், நம் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள் என்று தோன்றியது” என்று குறிப்பிட்டார் ரஜினி.

மேலும், “ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுதான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். கர்நாடகத்திலிருந்து, மராட்டியத்திலிருந்து வந்திருந்தாலும் நீங்கள்தான், பெயரும் புகழும் கொடுத்து அன்பைக் கொடுத்து நீங்கள் என்னைத் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சைத் தமிழன். என்னுடைய மூதாதையர்கள், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள்” என்று தெரிவித்த ரஜினி, “என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் இமயமலையில்தான் போய்விழுவேன். ஏனென்றால் நல்ல மக்கள் உள்ள தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது சித்தர்கள் வாழும் இமயமலையில் இருக்க வேண்டும்” என்றார்.

Share
Categories
எடப்பாடி பழனிசாமி தமிழகம் தலைமையகம்

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரிக்கு என்ன வேலை ?

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ததார். இதற்கு பல்வேறு அரசியல் தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

பொதுவாக இந்த அரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே நடக்கும்.

அது தவிர, தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் நடக்கும்.

முதல் முறையாக மத்திய அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் இந்த அரங்கில் நடைபெற்றது.

மெட்ரோ ரயில் துவக்கவிழா நடக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை நெடுக அ.தி.மு.க. கட்சி கொடிகளுடன் பாரதீய ஜனதாக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு வெங்கய்ய நாயுடு இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

“மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது.” என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Share
Categories
தமிழகம்

சென்னையில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் ஒரு கடையிலிருந்து  பழைய ரூபாய் நோட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என தெரிகிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்காரியா காலனியில் ராமலிங்கம் அண்ட் கோ என்ற பெயரில் சினிமா படப்பிடிப்புகளுக்கு உடைகளை வாடகைக்கு அளிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்தக் கடையில் பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று காலையில் கோடம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அந்தக் கடையைச் சோதனையிட்டனர். அந்த சோதனையில் இந்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பெட்டிபெட்டியாக கண்டெடுக்கப்பட்டன.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் பல கோடி ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. இதையடுத்து, அருகில் உள்ள அந்தக் கடையின் உரிமையாளர் தண்டபாணியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு, தண்டபாணியிடம் இந்தப் பணம் யாரிடமிருந்து அவருக்குக் கிடைத்தது, எதற்காக அவர் அந்தப் பணத்தை வாங்கினார் என்பது குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது. கைப்பற்றப்பட்ட பணத்தின் சரியான மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

Share
Categories
ஐகோர்ட் தமிழகம் நீட் மருத்துவ தேர்வு

ஐகோர்ட் : நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை இல்லை

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க இல்லை என தெரிவித்துள்ளது.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மாநில வாரியாக கேள்வித்தாளை வடிவமைக்காமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை பயன்படுத்த வேண்டும் மேலும் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணயை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்தார்.

இருப்பினும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் கோரப்பட்டது தொடர்பாக சிபிஎஸ்இ வாரியமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் விளக்கமளிக்கமாறு உத்தரவிட்டார்.

Share
Categories
இந்தியா கட்சிகள் காங்கிரஸ் காங்கிரஸ் தமிழகம் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ப.சிதம்பரம் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணிக்கு முடிந்தது.

ப.சிதம்பரம் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

”மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது 2-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர்(ஷீனா போரா கொலை வழக்கில் கைதானவர்கள்) ஐஎன்எக்ஸ் மீடியா என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதலீட்டை அதிகரிப்பதற்காக நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்துக்கு(எப்ஐபிபி) விண்ணப்பித்தனர். அதைத் தொடர்ந்து ரூ.4 கோடியே 62 லட்சத்து 16 ஆயிரத்துக்கு மட்டும் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய எப்ஐபிபி அனுமதி கொடுத்தது. ஆனால் ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தது.

இந்த மோசடி நடந்த காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். ஐஎன்எக்ஸ் நிறுவன இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜியுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பலமுறை போனில் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஐஎன்எக்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்று முடித்த சில நாட்களில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் வந்துள்ளது. முறைகேடாக நிறுவன பங்குகளை விற்க உதவி செய்ததற்காக இந்த தொகை வழங்கப்பட்டு இருக்கலாம்” என்றனர்.

Share
Categories
தமிழகம் போராட்டம்

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

தமிழக அரசுக்கும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாட்டை உருவாக்க வேண்டும், ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர்.

தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்திற்கான பேருந்துகளை பெரும்பாலும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களே இயக்கிவருவதால், இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இயல் புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய பாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய தொகையில் முதற்கட்டமாக 1,250 கோடியை விடுவிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயும் பிறகு 250 கோடி ரூபாயும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் வேலை நிறுத்ததில் இருந்த நாட்கள் விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்றும் அரசு உறுதியளித்திருப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 24ஆம் தேதி துவங்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைக்கவும் அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக தொழிலாளர் முற்போக்கு சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் தெரிவித்தார்.

இதையடுத்து, நாளை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம்

டிடிவி தினகரனுக்கு நீதிமன்றக் காவல் நீடிப்பு

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா அல்லது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கா என்ற சர்ச்சை எழுந்தது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அந்தச் சின்னம், முடக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனும், இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். முதலில் சுகேஷ் சந்திரசேகரும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனும் கைது செய்யப்பட்டனர். மேலும், தினகரன் கொடுத்தாகக் கூறப்படும் 10 கோடி ரூபாய் முன்பணத்தில் 1.30 கோடியை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கடந்த மாதம் 25-ஆம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Share