Categories
சென்னை தமிழகம்

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் நவீன கருவிகளை கொண்டு புகையை வெளியேற்றி வருகின்றனர். அடர் புகைக்காரணமாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். புகை எங்கிருந்து வருகிறது என்பத கண்டுபிடிக்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

துணிக்கடையில் இருந்து இதுவரை 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பல மணி நேரமாக கரும்புகை வெளிறேறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
இந்தியா உச்ச நீதிமன்றம் ஐகோர்ட்

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை

மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது :

கடந்த 26-ந்தேதி மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்தது. மேலும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது சட்டவிரோதம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். உணவு என்பது தனி மனித விருப்பமாகும். இதில் அரசு தலையிட உரிமை இல்லை. எனவே மாட்டு இறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இன்று பிற்பகலில் நீதிபதிகள் முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு 4 வார இடைக்கால தடை விதித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Share
Categories
இந்தியா காங்கிரஸ் தமிழகம் ப.சிதம்பரம்

சிபிஐ சோதனை குறித்த அறிக்கையை ப.சிதம்பரம் வெளியிட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்து அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அவ்வறிக்கையில் சிபிஐ சோதனையின் இலக்கு தானே என்றும் எப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லையெனினும் தன் மீது குறி வைத்தே மத்திய அரசு இந்த சோதனையை மறைமுகமாக நடத்தியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

மே 17ம் தேதி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்தது.

மேலும், விதிகளின் படியே ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  அட்வான்டேஜ் ஸ்டேடர்ஜிஸ் நிறுவனத்திற்கும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தனது அறிக்கையில் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சோதனையை நடத்தி 2 வாரங்கள் ஆகியும் சிபிஐயால் ஏன் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

ஜூலை மாதம் அரசியலில் இறங்குவாரா ரஜினி ?

நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தருணங்களில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக சூசகமான தகவல்களை வெளியிடுவதும், பிறகு அரசியலில் தற்போது இறங்கவில்லை என்பதுவும் நாம் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.

எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர  விரும்புகிறார். இதுதான் மக்களின் விருப்பமும் கூட. இதுகுறித்து அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். அனைவருமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார்” என கூறினார்.

இதன் மூலம், ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதில் உறுதியாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது ரஜினிகாந்தின் அடுத்த படமான “காலா”-வைப் பிரபலப்படுத்துவதற்கான உத்தியோ என்றும்  சிலர் கருதுகிறார்கள்.

Share
Categories
தமிழகம் பால்வளத் துறை

தனியார் பாலில் கலப்படம் : அமைச்சர் புகார்

தனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அவ்வாறு நடப்பதாக இருந்தால், நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஊடகங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கி, மக்களிடையே பீதியைக் கிளப்புவதுதான் அமைச்சரின் வேலையா என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆவின் பால் நிறுவனம் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களைப்பற்றி குறை கூறினார்.

தலைநகர் சென்னையில் மட்டும் 50 சதத்துக்கும் மேற்பட்ட பால் தேவையை, தனியார் நிறுவனங்கள் நிறைவேற்றி வரும் நிலையில், தனியார் பாலில் ரசாயனம் கலப்பதால், அவை நோயை உண்டாக்கும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பல உண்மைகள் தெரியவந்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்கள் தங்களைச் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்திருந்தார்.

ஆனால், அமைச்சரின் இந்த நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புற்று நோய் ஏற்படுத்தும் பொருட்கள் பாலில் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்தர் பாலாஜியே, வழிப்போக்கன் போல போகிற போக்கில் பேசி, பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பான பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காலத்திலிருந்தே, அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாங்கள் கோரி வருவது அரசின் கவனத்துக்கு வராமல் போனது ஏன் என பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
Categories
கட்சிகள் தமிழகம் ம.தி.மு.க. வை.கோ.

வைகோ ஜாமீனில் விடுதலை

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று வியாழக்கிழமை காலை சிறையிலிருந்து வெளிவந்தார்.

பழிவாங்கும் நோக்கத்திற்காகவே தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகியிருக்கும் வைகோ குற்றம்சாட்டினார்.

மேலும் தனது கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் தான் தற்போது ஜாமீன் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.

முன்னதாக வைகோவின் ஜாமீன் கோரும் மனு, நேற்று புதன்கிழமை சென்னை 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால், வைகோவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்தே தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ இன்று காலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Share
Categories
இந்தியா உயர் கல்வி ஐகோர்ட் தமிழகம் நீட் மருத்துவ தேர்வு மருத்துவம்

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில்  தேர்வு நடந்தது.

சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த
இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் ஜூன் 7 ம் தேதி தங்கள் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

சீரான கேள்வித்தாள்கள் வழங்கப்படவில்லை எனவும், ஆங்கில மற்றும் தமிழ் கேள்வித் தாள்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் மனுதாரர்கள் கூறினர்.
மேலும் நீட்
தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ஒரே சீரான கேள்வித் தாள்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும்  எல்லா இடங்களிலும் ஒரே சீரான முறையில் தேர்வு நடத்தப்படவில்லை என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும்  அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் தேர்வு எழுதியவர்களுக்கு எளிதான வினாத்தாளும் ஆங்கில மொழியில் எழுதியவர்களுக்கு கடினமான வினாத்தாளும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “நீட் தேர்வில் இந்தியா முழுவதும் ஒரே வினாத்தாளே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் நுண்ணறிவு, இயல்திறன் ஆகியவற்றின் அளவீடுகள் பெருமளவில் வேறுபடும். ஆகவே தற்போதைய நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக நாடுமுழுவதும் ஒரே கேள்வித்தாளைக் கொண்டு புதிய நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

Share
Categories
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா தமிழகம்

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் அதற்குண்டான உத்தரவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிறப்பிக்க கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ள முதல்வர் பழனிச்சாமி, காவிரி படுகை பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 14,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளித்து அதனை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் கூறினார்.

மேலும், பவானி ஆற்றின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டிவரும் கேரள அரசின் நடவடிக்கை தடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை விரைவில் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறுதியாக, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய சுமார் 17,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த முதல்வர், இலங்கையில் அரசு வசமிடமுள்ள 135 படகுகளையும், சிறையில் அடைபட்டுள்ள 13 மீனவர்களையும் விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

Share
Categories
அ.தி.மு.க. அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்சிகள் தமிழகம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.இது ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை விட கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்களையே கொண்டதாக இருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். தங்கள் தொகுதி பிரச்சினையை தீர்க்க அரசு முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதனால், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்படுமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டவெண்டும் என  முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.என தகவல் வெளியாகி உள்ளது. கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து கையெழுத்திட்டு உள்ளனர்.

Share
Categories
கட்சிகள் தமிழகம் பா.ஜ.

ரஜினிக்கு எங்களுடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும் பா.ஜனதா

ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிஉள்ள நிலையில் எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என கூறி பா.ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்து உள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம் என்றார் அமித் ஷா. ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, எப்போதும் எங்களுடைய கட்சிக்கு சூப்பர் ஸ்டாரை வரவேற்போம் என்றார். ரஜினிகாந்த் அரசியல் விஷயங்களில் முன்நோக்கி நகர்வதற்கு முன்னதாக அவர் அரசியலில் இணைய வேண்டும் என்றும் பேசிஉள்ளார் அமித் ஷா.
Share