Categories
கன்யாகுமரி குற்றம் தமிழகம் மாவட்டம்

இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த திவ்யா குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் திவ்யா கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகள் தானாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கொலை செய்த குழந்தைகளை அவசரஅவசரமாக மண்ணில் புதைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கவில்லை, கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து திவ்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் இரட்டை குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார்.  ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால், பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை கொன்றதாக தாய் திவ்யாவை கோட்டார் போலீசார் கைது செய்தனர். பெற்ற குழந்தைகளை தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share
Categories
தமிழகம் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் பணம் பறிக்க முயற்சி

கடந்தாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்ட தமிழரான மாரியப்பன் தங்கவேலுவை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று மாரியப்பன் புகார் கூறியுள்ளார். ஓமலூர் பெரியகடம்பபட்டியில் நடைபெற்ற விபத்தொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்து மாரியப்பனின் காரை இடித்த சதீஷ் என்ற வாலிபர் மரணம் அடைந்ததால். சதீஷின் மரணத்துக்கு மாரியப்பன் தான் காரணம் எனக்கூறி மாரியப்பனிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயல்வதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சதீஷ் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து தனது காரில் மோதியதில் கார் சேதமடைந்துள்ளதாக தான் முன்னரே புகார் அளித்திருப்பதாகவும். சதீஷுக்கு நடைபெற்ற விபத்து குறித்தும் அவருடைய பெற்றோருக்கு தான் முன்னதாக தெரிவித்து விட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார். மாரியப்பன்.

Share
Categories
இலங்கை தமிழகம் தலைப்புச் செய்திகள் படகுகள் மீனவர்கள்

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த 145 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறை பிடிக்கப்பட்ட 143 படகுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசிடம் உள்ளது. சிறை பிடிக்கப்பட்டுள்ள 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். படகுகளை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழக அரசுக்கு சொந்தமான 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட 145 படகுகளில், வெறும் 42 படகுகள் மட்டுமே விடுவிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைப்புச் செய்திகள்

தினகரன் குடும்பத்தார் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் : ஜெயக்குமார்

தினகரனும் அவரைச் சார்ந்தவர்களும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவுக்கு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரன் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை தான் தொடர இருப்பதாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்திய மூத்த அமைச்சர்கள், முதலமைச்சரையும் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆலோசனை குறித்த விவரங்களை தெரிவித்த ஜெயக்குமார்  கூறியதாவது :

கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் என்ற கூறிய தினகரன் அந்த உறுதியோடு இருக்க வேண்டும்.

தினகரனுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை- அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. தினகரன் சார்ந்தவர்களை ஒதுக்கிவைத்து ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி நடத்திய அதிமுகவை காக்க வேண்டும்.யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை வழி நடத்துவோம்

தினகரனை அதிமுக நிர்வாகிகள் யாரும் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Share
Categories
தமிழகம் தி.மு.க.

கருணாநிதி வைர விழா : ராகுல் காந்தி, தமிழக, ஜார்கண்ட் கவர்னர்கள் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும், அவர் சட்டசபையில் 60 ஆண்டுகாலம் பணியாற்றியதை கொண்டாடும் வைர விழா ஆகியவற்றை இணைந்து, சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று திமுக சார்பில் விழா நடந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர்  ராவ், ஜார்கண்ட் கவர்னர் மர்மு மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், கலைஞர் நீடுழி வாழ வேண்டும். இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வேண்டும். அனைத்து மக்களின் துயரங்களையும் அறிந்து வைத்துள்ளவர் கலைஞர். தமிழக மக்கள் கலைஞரை ஆழமாக நேசிக்கின்றனர். சட்டபேரவை தேர்தலில் தோல்வியை கண்டிராதவர் என்று கூறினார்.

பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து  தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று 94 வயது பிறந்தது. வழக்கமாக பிறந்தநாளன்று கரு ணாநிதி அண்ணா,  பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துவார். பின் னர் அண்ணா அறிவாலயம் சென்று தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்  கொள்வார்.

Share
Categories
தமிழகம்

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்; இன்று உடல் அடக்கம்

கவிஞரும் தமிழ் பேராசிரியருமான அப்துல் ரகுமான் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 80.

இருதய நோய், சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டுவந்த அவர் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில், மூச்சுத் திணறலால் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.

மதுரை நகரில் உள்ள சந்தைப்பேட்டையில் சையது அகமது – ஜைனத் பேகம் தம்பதிக்கு 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்த அப்துல் ரகுமான், பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் அந்நகரிலேயே முடித்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற இவர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

தியாகராசர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கவிதைகளை எழுத ஆரம்பித்த அப்துல் ரகுமான், பிறகு தமிழில் உருவெடுத்த வானம்பாடி கவிதைப் போக்கின் முக்கியக் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

அப்துல் ரகுமான் அந்த காலகட்டத்தில் எழுதிய `பால்வீதி` என்ற கவிதை மிகுந்த கவனத்தைப் பெற்றது. 1995ல் வெளிவந்த இவரது ஆலாபனை என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

கவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை குறித்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் அப்துல் ரகுமான் செயல்பட்டார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர் பிரதமர் மோடி

மோடியின் ஆட்சியைப் பற்றி அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல் வெளியான கவிதை

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல்  ஒரு  கவிதை வெளியானது.  அது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டபோது அதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.  ஆனால் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் இதைப்பற்றி கூறுகையில் “ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை” என்றார்.

மோடியின் ஆட்சியைப் பற்றிய அந்த கவிதை :

 

மோடி அரசின் மூன்றாண்டு !
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?

டிஜிட்டல் இந்தியா….
மேக் இன் இந்தியா…
கிளீன் இந்தியா… என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?

சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை…
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்…
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?

ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு…
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு…
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு…
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு…

வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு !

ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு !

 

Share
Categories
சென்னை தமிழகம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி ஒத்திவைப்பு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4 மற்றும் 5வது தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடித்து தரைமட்டமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை சில்க்ஸில் கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. கடந்த 2 நாள்களாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். இதனிடையே கட்டடத்தின் முகப்பு பகுதியும், 4 மாடிகளும் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டது.

இந்நிலையில் மீதமுள்ள கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் உள்ளதால் எஞ்சிய கட்டடத்தையும் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். கட்டடத்தை இடிப்பதற்கான இயந்திரம் வரவழைக்கப்பட்டு மனிதர்களை கொண்டு இந்த கட்டடம் முழுவதுமாக தகர்க்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்டடத்தை இடிப்பதற்கான பிரத்யேக இயந்திரம் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இயந்திரங்கள் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென 4வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரியத் துவங்கியது. மேலும் 5வது தளத்தில் இருந்தும் அதிகளவு புகை வெளியேறி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
Categories
அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் தமிழகம்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்தது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் வியாழக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட சின்னமான “இரட்டை இலையை” திரும்பப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனின் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இதுவரை சிறையில் இருந்தனர்.

சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி  இவ்விருவரின் ஜாமீன் மனுவை விசாரித்து,  இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய  உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அவரது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

 

Share
Categories
தமிழகம்

கோரிக்கைக்களுக்கு ஒத்துழைத்தால் இரு அணிகளும் இணைவதில் நிபந்தனைகள் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கம்பத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது :

கடந்த 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாதுகாத்து வந்தனர். எந்தவொரு தனிக்குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் கட்சி சென்றுவிடக்கூடாது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.

அவர்களின் அந்த நோக்கத்தை பின்பற்றியே நானும் எனது ஆதரவாளர்களும் செயல்பட்டு வருகிறோம். மேலும் அ.தி.மு.க. எந்தவொரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே தர்மயுத்தத்தையும் தொடங்கினோம். எங்களின் நோக்கத்து சசிகலா அணியினர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இரு அணிகளும் இணைவதில் எந்த நிபந்தனைகளும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Share