Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் ம.தி.மு.க. மலேசியா

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.

வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் “மலேசியாவுக்கு ஆபத்தானவர்” என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.

பினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் தன்னை ஒரு கைதி போல் நடத்தியதாகவும், உணவு கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இதன் பின்னணியில் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Share
Categories
காங்கிரஸ் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ராகுல்காந்தி ஒப்புதலுடன் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்டத்தலைவர்கள் நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிறப்பித்து உள்ளார்.

தென்சென்னை மாவட்ட தலைவராக கராத்தே தியாகராஜனும், வட சென்னை மாவட்ட தலைவராக எம்.எஸ்.திரவியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 63 ஆக இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சென்னை சிவராஜசேகரன், மேற்கு சென்னை வீரபாண்டியன்,  நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊட்டி கணேஷ், உட்பட 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் ஜனார்த்தன் திவேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

அய்யாகண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகள் ஒரு மாதம் தொடர் போராட்டம்

முன்பு டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தற்போது சென்னையில் ஒரு மாதகால போரட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் இன்று காலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கினர். இப்போராட்டம் ஜூன் 9-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

Share
Categories
இந்தியா தமிழகம் தலைப்புச் செய்திகள்

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழி போக்குவரத்து ?

பல்வேறு கடலோர நகரங்களை இணைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்க தனி நிறுவனம் அமைக்க மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தமிழக அரசுடன் கைக்கோர்த்துள்ளது.

இந்த நிறுவனம் சென்னை முதல் கன்னியாக்குமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த பின் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நீர்வழி போக்குவரத்துக்காக மாநில அரசுடன் மத்திய அரசு கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.200 கோடி முதலீட்டுடன், சென்னை-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை துவங்க கூட்டு நிறுவனத்தை வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.839 கோடியில் லேப்டாப் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.839 கோடியில் லேப்டாப் வழங்குவதற்காக தமிழக அரசின் எல்காட் நிறுவனம் இரண்டு சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து ஐசிஎம்சி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை நேற்று விசாரித்த ஐகோர்ட் இது தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. 2016-17ம் கல்வியாண்டிற்கு ரூ.839 கோடியில் 5 லட்சத்து 65 ஆயிரம் லேப்டாப் வாங்குவதற்காக எல்காட் நிறுவனம் டெண்டர் விட்டது. இந்த டெண்டர் ஹ்யுலெட் பேக்கர்டு மற்றும் லெனோவா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹ்யுலெட் நிறுவனம் 3.39 லட்சம் லேப்டாப்களையும், லெனோவா நிறுவனம் 1.36 லட்சம் லேப்டாப்களையும் வழங்க ஒப்புக் கொண்டன. இந்த இரண்டு நிறுவனங்களும் உள்ளூரில் தங்கள் சொந்த தொழிற்சாலையில் லேப்டாப்களை தயாரிக்காமல் சீனாவை சேர்ந்த இன்வென்டெக் மற்றும் விஸ்ட்ரான் இன்போகாம் என்ற இரண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுள்ளன.

 இதற்காக லேப்டாப் ஒன்றுக்கு ரூ. 16 ஆயிரத்து 785 கொடுக்க முன்வந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் லேப்டாப்களையே தமிழக அரசுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்பது எல்காட்டின் டெண்டர் விதிகளில் முக்கியமானதாகும். ஆனால் இந்த விதியை மீறி சீனாவை சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு ஹ்யுலெட் பேக்கர்டு நிறுவனமும் லெனோவா நிறுவனமும் ஆர்டர் கொடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த ஐசிஎம்சி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐசிஎம்சி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எல்காட் விதிகளை மீறி சீன நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளோம். சீன நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் ஏற்கனவே விசாரித்து வழக்கின் இறுதி உத்தரவுக்கு எல்காட் கட்டுப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி எல்காட் நிறுவனம் சீன நிறுவனங்களிடமிருந்து லேப்டாப் வாங்க முயற்சித்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஐசிஎம்சி நிறுவனம் தனது மனுவில் கூறியுள்ளது. இந்த மனுவை நீதிபதி துரைசாமி நேற்று விசாரித்தார். அப்போது, ‘இது தொடர்பாக வரும் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Share
Categories
ஈரான் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

ஈரான் நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகஅரசின் சொந்த செலவில், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துபாயில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.

அவர்களில் 15 பேர் ஈரான் எல்லையைத் தாண்டியதாக் கூறி, அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து 13 தமிழக மீனவர்களும்,   குஜராத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, 13 மீனவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.

 அவர்களை தமிழக அரசு சார்பில் உயரதிகாரிகள் வரவேற்றனர். இதேபோல், மேலும் 2 பேர் திருச்சி விமான நிலையம் வந்திறங்கினர். பின்னர் மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் சொந்த செலவில், அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Share
Categories
தமிழகம்

பத்திரப்பதிவில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் துவங்கியது. அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில், பத்திரப்பதிவில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், ஜி.எஸ்.டி., மசோதா, மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Share
Categories
உணவுப்பொருள்கள் தமிழகம் தலைப்புச் செய்திகள்

பிளாஸ்டிக் அரிசி: தமிழகம் முழுவதும் மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறிய மாதிரிகளைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் முட்டையை அடுத்து பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை ஆகியவை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அண்டை மாநிலங்களில் புகார் எழுந்துள்ளனது.

பிளாஸ்டிக் பொருளானது மக்காத தன்மை உடையது. மண்ணில் மக்காத ஒரு பொருளை உடலில் உள்ள ஜீரண உறுப்புகள் எவ்வாறு செரிமானம் செய்யும். இதனால் பிளாஸ்டிக் அரிசி போன்ற உணவை உட்கொண்டால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் செரிமானப் பிரச்னைகளும், வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளும் வரக்கூடும். இதுதவிர, உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீண்ட காலப் பிரச்னைகளும் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உண்மை நிலை :

தமிழகத்தில் இதுவரை பிளாஸ்டிக் உணவுப் பொருள்கள் எதுவும் வரவில்லை என்று அனைத்துத் தரப்பினரும் உறுதி தெரிவிக்கின்றனர்.

கன்ஸ்யூமர் அசோஸியேசன்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தகவல் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம் கூறியது: பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது சாதாரண அரிசி உற்பத்தியைக் காட்டிலும் மிகவும் பொருட்செலவு வாய்ந்தது. எனவே, பிளாஸ்டிக் அரிசி உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை.

குறுணை அரிசி என்று அழைக்கப்படும் சேதமடைந்த அரிசியைச் சேகரித்து, அதனை அரைத்து அதனுடன் வேறு பொருள்களைச் சேர்த்து அரிசி போன்று உருவாக்குகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் அரிசியில் வெள்ளை நிறத்தை வரவழைப்பதற்காக சில வேதிப்பொருள்களை சேர்க்கின்றனர்.

எனவே, இந்த அரிசி சாதாரண அரிசியைப் போல் எளிதில் வேகாமல் உள்ளது. இதைத்தான் மக்கள் பிளாஸ்டிக் அரிசி என்று புரிந்து கொள்கின்றனர். இதுபோன்ற அரிசி சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது என்றார்.

சர்க்கரையிலும் பிளாஸ்டிக் இல்லை: சர்க்கரையைப் பொருத்தவரை தமிழகத்தில் மணல் போன்ற சிறிய அளவு சர்க்கரையே புழக்கத்தில் உள்ளது. இதில் பிளாஸ்டிக் சர்க்கரை போன்றவை கலப்பதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதிரி சேகரிப்பு: இந்நிலையில் தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளைச் சேகரிக்க உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி கூறியது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரிசியின் மாதிரிகளைச் சேகரித்து, அதில் ஏதேனும் போலி உள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி குடோன்கள், மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் என்று அனைத்திலிருந்தும் மாதிரிகள் சேரிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களின் ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இதுவரை எங்கும் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்தார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்

நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், திமுகவின் துவக்க கால உறுப்பினரும், அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராக போராடியவருமான இரா.செழியன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரரான இரா.செழியன், மாணவ பருவத்தில் திராவிடர் கழக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டவர்.

பின்னர் திமுகவில் சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டார்.

அவர் சிறந்த நாடாளுமன்றவாதி, நேர்மையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர்.

 

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் தலைப்புச் செய்திகள்

அதிமுகவில் பரபரப்பு : தினகரனுடன் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.  இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என்ற இரு பிரிவாக இருந்த அதிமுகவில், இப்போது தினகரன் அணி என்ற மூன்றாவது அணியும் உருவாகும் நிலையில் இருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் அறையிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் பழனிசாமியின் அரசு தப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் வரும் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. சட்டங்களை நிறைவேற்றுவது, மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்றவற்றில் இவர்கள் 3 அணிகளாக செயல்பட்டால், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சி கவிழும் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

Share