Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம் விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முன்வரவில்லை என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி மொட்டை அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு

தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

காளைகள் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ஜல்லிக்கட்டில் மிருகவதை இருப்பதாகவும் கூறி பீட்டா, தமிழர்களின் வீரவீளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறாதவாறு உச்சநீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைப்பெறவில்லை.

தமிழக இளைஞர்களால், இந்த போட்டி நடத்தப்பட வேண்டும், தமிழ் கலாச்சாரம் காக்க வேண்டும் என அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம், மதுரையின் தமுக்கம், சென்னையில் மெரினா என தமிழகம் முழுவதும் பரவி உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு  வலுப்பெற்றது. இதன் எதிரொலியாக தமிழக சட்டசபையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.  தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மிருக வதை நடந்ததாகவும், விதிமீறல் இருந்ததாகவும் கூறி, தமிழக அரசின் மிருக வதை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது  மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ வீரவிளையாட்டு கழகத்தை சேர்ந்த ராஜேஷ் இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Share
Categories
தமிழகம் போராட்டம்

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

தமிழக அரசுக்கும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாட்டை உருவாக்க வேண்டும், ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்தனர்.

தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்திற்கான பேருந்துகளை பெரும்பாலும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களே இயக்கிவருவதால், இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இயல் புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய பாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய தொகையில் முதற்கட்டமாக 1,250 கோடியை விடுவிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயும் பிறகு 250 கோடி ரூபாயும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் வேலை நிறுத்ததில் இருந்த நாட்கள் விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்றும் அரசு உறுதியளித்திருப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 24ஆம் தேதி துவங்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைக்கவும் அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக தொழிலாளர் முற்போக்கு சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் தெரிவித்தார்.

இதையடுத்து, நாளை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
தமிழகம் போராட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களுக்கு 13-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகை, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் காலவரையற்ற வேலைநிறுத் தப் போராட்டம் தீவிரமடைந்துள் ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
தமிழகம் போராட்டம் போராட்டம்

50% இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: மருத்துவ மாணவர்கள் அறிவிப்பு

கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறைகளையே பின்பற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளனர்.

 

Share