Categories
சென்னை தமிழகம் தலைப்புச் செய்திகள் தேனாம்பேட்டை

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் மீது நேற்று அதிகாலை 4.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். காவல்நிலைய பெயர்ப்பலகையின் மீது பட்டு, நுழைவாயிலில் விழுந்த குண்டு, அங்கேயே தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

போலிஸ் ஸ்டேஷன் அருகில் அரசியல் கட்சி பேனர் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூறிய பிறகே, உள்ளே இருந்த காவலர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலிசார், கட்டுப்பாட்டு அறைக்கும் ரோந்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் தப்பி விட்டனர். தகவலறிந்து, போலிஸ் கமிஷனர்  விஸ்வநாதன் தேனாம்பேட்டை ஸ்டேஷனுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலிஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மட்டும் 5 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

அவற்றின் காட்சிகளை ஆய்வு செய்ய சொன்ன அதிகாரிகள், அவற்றில் ஒரு கேமரா கூட இயங்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து நந்தனத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே தேனாம்பேட்டை காவல் நிலைய கண்காணிப்புக் கேமராக்களை தனியார் ஒருவரிடம் கொடுத்து பழுது நீக்கச் சொன்னபோது, அதில் குண்டு வீசிய குற்றவாளியின் முகம் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றிய தகவல் தருமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share
Categories
சென்னை தமிழகம்

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்குள் விழுந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் மீட்பு

சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீயில் கருகி உருக்குலைந்தது. இதனால் 2–ந்தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6–வது தளத்தில் இருந்து பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் கீழே விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியது. 20–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை எடுக்கும் பணி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சுமார் 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட அந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகம் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அந்த பெட்டகத்தை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தியாகராயநகர் துணை கமி‌ஷனர் சரவணன் கூறும்போது, ‘கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ‘பணம் பாதுகாப்பு பெட்டகத்தில்‘ பணம் எதுவும் இல்லை. மேலும் அதனுள்ளே சம்பந்தப்பட்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள் இருந்தன. அதில் சில ஆவணங்கள் சேதமடைந்திருந்தது. இதேபோல் தரைதளத்தில் உள்ள பெட்டகத்தில் நகை, வைரம் மற்றும் வெள்ளி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இடிபாடுகளை அகற்றிய பிறகு தான் அந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்க்க முடியும்’ என்றார்.

தரை தளத்தில் தங்கம், வைரம், வெள்ளி ஆகிய பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக 2 நகை பாதுகாப்பு பெட்டகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது முதல் தளம் வரை இடிபாடுகளின் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தரைத்தளத்தின் இடிபாடு கழிவுகள் அகற்றப்பட்டு, அடுத்தகட்டமாக நகை பாதுகாப்பு பெட்டகங்களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெறும் என்று கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

Share
Categories
சென்னை தமிழகம் தலைப்புச் செய்திகள்

சென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை செங்குன்றத்தில் அதிரடி சோதனையின் போது ரூ.71 கோடி போதைப்பொருள்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு செங்குன்றத்தில் செயல்பட்டுவரும் தனியார் கிடங்கில் சோதனையில் ஈடுபட்டனர். அக்கிடங்கில் வெளிநாடுகளுக்கு துணிகள் வடிவமைக்கும் பணியும், பேக்கிங் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் சோதனையில் ரூ.71 கோடி மதிப்பிலான 3 வகையான போதைப் பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Share
Categories
சென்னை தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்கிறது

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தின்போது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அறிக்கை அளிக்க, ஐஐடி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடையை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் சார்பில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. அப்போது, விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சூரஜ் என்பவர் மீது மாணவர் அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதில், சென்னை ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரியும்,  ஐஐடி வளாகத்தில் சுமுக நிலை திரும்பும் வரை சூரஜை தாக்கிய மணிஷை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும்  குறிப்பிட்டிருந்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐஐடி நிர்வாகம் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. சுமுக நிலைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share
Categories
சென்னை தமிழகம்

சட்டபேரவை முடியும் வரை சென்னை போலீசாருக்கு விடுமுறை இல்லை

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. இந் நிலையில், ஜூலை, 19 வரை,  ‘லாக்கப் டெத்’ தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல் இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும், போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் எக்காரணம் கொண்டும், லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி, ஜூலை, 19 வரை, போலீசார் மற்றும் அதிகாரிகள் விடுப்பு எடுக்கவும் தடை விதித்து, உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.இந்த உத்தரவை சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Share
Categories
சென்னை தமிழகம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி ஒத்திவைப்பு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4 மற்றும் 5வது தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடித்து தரைமட்டமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை சில்க்ஸில் கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. கடந்த 2 நாள்களாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். இதனிடையே கட்டடத்தின் முகப்பு பகுதியும், 4 மாடிகளும் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டது.

இந்நிலையில் மீதமுள்ள கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கட்டடத்தின் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் உள்ளதால் எஞ்சிய கட்டடத்தையும் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். கட்டடத்தை இடிப்பதற்கான இயந்திரம் வரவழைக்கப்பட்டு மனிதர்களை கொண்டு இந்த கட்டடம் முழுவதுமாக தகர்க்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கட்டடத்தை இடிப்பதற்கான பிரத்யேக இயந்திரம் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இயந்திரங்கள் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென 4வது தளத்தில் மீண்டும் தீ பற்றி எரியத் துவங்கியது. மேலும் 5வது தளத்தில் இருந்தும் அதிகளவு புகை வெளியேறி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
Categories
சென்னை தமிழகம்

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் நவீன கருவிகளை கொண்டு புகையை வெளியேற்றி வருகின்றனர். அடர் புகைக்காரணமாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். புகை எங்கிருந்து வருகிறது என்பத கண்டுபிடிக்க முடியாததால் தீயை அணைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

துணிக்கடையில் இருந்து இதுவரை 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பல மணி நேரமாக கரும்புகை வெளிறேறி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Share