Categories
கோயம்புத்தூர் தமிழகம் தலைப்புச் செய்திகள்

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது – அரசியல் தலைவர்கள் கண்டனம்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர்.  இவர்  இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர்.

அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்‌ கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடடிக்கை எடுத்திருப்பதை கண்டித்துள்ளார். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என அவர் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக அரசு மத்தி‌ய அரசின் நிர்பந்தங்களுக்காக இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பயங்கரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

 

Share
Categories
கோயம்புத்தூர் தமிழகம்

கோவை தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகம்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பறக்கும் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர்) சேவை வரும் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது என கூறப்படுகிறது. அவசர சிகிச்சை, நோயாளியின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் அடங்கியுள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எடுத்துச் செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்பட உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திடமிருந்து இரண்டாண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மணிக்கு 240 கிலோ மீட்டர் வரை செல்ல கூடும் என மருத்துவமனை இயக்குனர் ராஜசேகரன் கூறினார்.

Share